'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பகுதி - 6 

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

ஊரழகு

ஆடு மழைமேகம் ஆங்காங்கே வீடுரசக்

கோடுமலை என்றே குறிஞ்சி மயிலகவும்..!

 

வீடுதொறும் பெண்கள் விரிகூந்தல் நீருலர்த்த

ஓடுமுகில் கூட்டம் உலர்த்துபுகை போல்தோன்றும்

 

கூடிப் புறாகுனுகக்..! கோபுரச் சிற் பங்கள்.! கண்

மூடிச் சிலையாகி முத்தவொலி கேட்டுநிற்கும்..!

 

பத்துத் தலைமுறை தாண்டிப் பலபுயலைத்

தட்டிக் கழித்துத் தலைநிமிர்ந்து நிற்கின்ற

 

அத்திமர வாழ்வோங்க அங்குமிங்கும் வௌவால்கள்

தொத்தித் தலைகீழாய்த் தொங்கித் தவமியற்றும்..!

 

கப்பியிசை தோன்றக் கயிற்றிறங்கும் வாளியிலே

செப்ப இயலாத செந்தேனாய் நீர்தளும்பும்..

 

கேணியதன் நீர்ப்பெருமை கேட்டனவோ என்னவோ

வானிலவும் சூரியனும் வந்துதினம் நீர்முழுகும்..!

 

வானம் முகிழ்த்தவெள்ளி மண்ணின்மேல் வீழ்ந்ததுபோல்

சாணம் தெளித்தமுன்றில் புள்ளிமா பூத்திருக்கும்..!

 

கோலச் சிறைகோதிக் கொஞ்சும் கிளியினங்கள்

ஆல மரக்கிளையில் ஆலோலம் பாடிநிற்கும்..!

 

மாட்டுவண்டிக் கீழ்நிழலில் நாயுறங்கும்..!மீன்..கரு

வாட்டுமணம் கண்டுபூனை ஓட்டுவீட்டின் மேல்திரியும்..!

 

கம்பும் தினையும் கதிரடித்த செந்நெல்லும்

எங்கெங்கும் காய இளங்கோழி மேய்ந்திருக்கும்..!

 

தொப்புள் கொடியுதிராத் துள்ளும் மறிக்குட்டி

சிற்றில் சிதைக்கச் சிறுவர் விரட்டிநிற்பர்

 

கிட்டிப்புள் கோலி கிளித்தட்டு பம்பரம்

கட்டிப் புரள்கபடி யாலூர் கலகலக்கும்..!

 

பட்டுப்போல் தோன்றிப் பலநிலவு ஊர்தல்போல்

சிட்டுப்போல் பெண்கள் சிறகடிக்கும் சிற்றூர்தான்


ஆறேழ் தெருவிருக்கும் அத்தனையும் மண்சொர்க்கம்

ஈரேழ் பிறவிவேண்டும் இவ்வூர் பிறப்பதற்கும்..!

 

வானளந்த கோமான் வடிவழகு கோவிலண்டை

தேனொழுகும் சொல்லுடைய தேவதையாள் வீடிருக்கும்..!

 

பாச்செடி நட்டுப் பலநாளாய் நான்தவிக்கப்

பூச்செடி வைத்திருப்பாள் பூவழகைத் தோற்கடிக்க

 

வீட்டின்முன் ஐந்தாறாய் வீற்றிருக்கும் செவ்வாழை

தோற்றுவிக்கும் தண்ணிழலில் தூங்கும்வான் கோழியுண்டாம்..!

 

மாக்கோலம் உன்னை வரவேற்க வேம்புதிர்த்த

பூக்கோலம் இன்னும் பொலிவெழுதும் முற்றம்காண்..!

 

ஆதவன் தோன்றுமொளி அப்படியே இல்நுழைய

மாதவளின் வீட்டுவாயில் தோதாய் மலர்ந்திருக்கும்.!

 

வெண்ணையுண்டு பெண்கள் விளையாடி இன்பங்கொள்

திண்ணையுண்டு தேவதையாள் வீடறிவாய் உண்மைதான்.!

 

காகா எனநீ கரைந்தாலே என்னவள்

வாவா எனத்தான் மகிழ்வாள் வரவேற்று..!

 

வள்ளிமுத்தார் ஊரினின்று வந்ததாக நீசொன்னால்

வெள்ளிமுத்துப் பல்தெரியும் விற்புருவம் பின்நெரியும்..!

 

(மறிக்குட்டி - ஆட்டுக்குட்டி)

தூது தொடரும்....

No comments:

Post a Comment