பைந்தமிழ்ச்சோலை ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் காணொலி வழியாய் நடைபெற்ற கவியரங்கக் கவிதைகள்
தலைப்பு: எழுத்தால் எழுக
தலைமை: பைந்தமிழ்ச் சுடர் நடராசன் பாலசுப்பிரமணியன்
கவியரங்கத் தலைமைக் கவி
ஆவியை உருக்கும் அற்புதத்
தமிழை
நாவினில் ஏத்தி நவிலுவார் உள்ளம்
நல்லமு(து) அருந்தித்
தழைத்திடு மன்றே!
காவிரி பாயும் கரையதன் ஊரினில்
கல்வியிற் சிறந்தோன்
பிறந்தநன் மரபினில்
பாவலன் எனையும் பிறந்திடச் செய்த
பைந்தமிழ் மொழியாள்
பதம்பணி வேனே!!
அவை வாழ்த்து
மரபினைக் காக்கும் மாண்புறு அவையாம்!
மண்ணக மீதினில் மகிழ்வுறு
அவையாம்!
கரந்துறை யாத கண்ணிய அவையாம்!
கவிஞர்கள் வாழும் கவினுறு
அவையாம்!
அரசவை இதுவென அமைந்தநல் அவையாம்!
அன்னை-இன் தமிழைக் காத்திடும்
அவையாம்!
கரவொலி எழுப்பிக் கருத்தினை வளர்க்கும்
கலைமகள் அவையெனக் கருதிட
லாமே!
தலைவர் வாழ்த்து
பெற்ற தாயினும் பேரன்(பு) உடையார்!
பெரிதென வணங்கும் மாட்சிமை
உடையார்!
கற்றவை யாவையும் கரந்துவைக் காமல்
கவிஞர்கள் பலர்க்கும் விருந்தெனப்
படைப்பார்!
மற்றவர் மகிழ்வில் மகிழ்ந்திடும் பெரியார்!
மாசறு மனத்தார்! மலையெனத்
திடத்தார்!
நற்றமிழ் ஆசான் பாவலர் தனையே
நாமொழி உளத்தால் கரங்குவிப்
போமே!!
எழுத்தால் எழுக
ஒருதுளி நீரில் உயிரெனப் பிறந்தோம்
ஒருபது மாதம் சிறையினில் கிடந்தோம்
கருமுதிர்ந் தோர்நாள் பிறப்பினை அடைந்தோம்
உருவது வளர்ந்தே உயர்வதும் அடைந்தோம்
ஒற்றை எழுத்தால் ஒலிகளை எழுப்பி
அன்னையின் தந்தையின் தாத்தனின் பாட்டியின்
வெற்றிப் பரிசென முத்தங்கள் பெற்றோம்
பெற்றவர் மகிழ மழலையில் உதிர்த்தோம்
கற்றலும் இல்லை கற்பனை இல்லை
காண்ப(து) ஒன்றே கடலென நினைத்தோம் 10
உற்றவோர் வயதில் பள்ளியில் புகுந்தோம்
வெற்றொலி எழுத்தே விரிந்தன பலவாய்
நற்றமிழ் மொழியின் நாற்றெது வுணர்ந்தே
உயிரை மெய்யை உறவதில் பிறந்த
உயிர்மெய் எழுத்தை
எழுத்தில் இணைந்த பல்வகைச் சொல்லைப்
பழுதற அறிந்தோம் படமென விரிந்தோம்
நாட்கள் ஓடின நண்பர்கள் கூடினர்
கேட்கவும் பார்க்கவும் கேளிரும் ஆயினர்
எடுக்கவும் கொடுக்கவும் எண்ணங்கள் விரிந்தன 20
செந்தமிழ் மொழியின் சந்த வகைவரை
முந்தைத் தமிழ்தனில் முழக்கிட
அறிந்தோம்
பைந்தமிழ்ச் சோலையில் பார்த்தோம் பலரை
ஐந்தெனும் இலக்கணம் அனைத்திலும்
இனிதாய்
யாப்பினை அறிந்தே யாவரும் உயர்ந்தோம்
பாக்களை இயற்றும் பாவலர் ஆகிப்
பட்டமும் விருதும் விளங்கிட வளர்ந்தோம்
ஏற்றமும் எழுச்சியும் எத்துணை யாயினும்
தோற்றுவாய் என்பதென்? ஒற்றை எழுத்தே
எத்துணை நீண்ட பயணங்கள் ஆயினும் 30
அத்துணை யாவும் ஓரடித் தொடக்கம்
வித்தகர் மொழிவதும் விரைந்தவர் நுவல்வதும்
தித்திக்கும் ஓரெழுத் தொருவிதை யென்பேன்!
காவியம் படைப்போம் கவிதைகள் படைப்போம்
காலத்தை வென்றிடும் கருத்துரை வழங்குவோம்
பாவலர் தொடங்கிய பைந்தமிழ்ச் சோலையில்
பாவகை பலவும் பழுதற உணர்ந்தோம்
உணர்ந்ததை எல்லாம் உவப்புடன் அளிக்க
வணங்கியே அழைப்பேன் வள்ளல்காள்.. வருக!
கோடை இடியெனக் குளிரென மழையென 40
வாடைக் காற்றினில் வளரும் சுகமெனப்
பாடும் பாட்டினில் விளையும் பயனென
“எழுத்தால் எழுக” என்றுநீர் உரைத்தே
எழுச்சியைத் தருக! ஏற்றத்தைத் தருக!
வளர்ச்சியைத் தருக! வாழ்வினை உயர்த்துக!!
No comments:
Post a Comment