'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

 1.       கவிமாமணி சேலம்பாலன்

 தமிழ்த்தாய் வணக்கம்

என்னை இயக்கும் இனிமைத் தமிழே!நீ

என்னை வளமாய் இயக்கு

 

                       மரபு மாமணி மா. வரதராசனார்க்கு வணக்கம்

பல்வகை அரங்கம் பாராட்டும் வண்ணம்

நல்முறை அமைத்துள நல்லா சானே

மரபு மாமணி வரத ராசரே!

உரமே நீங்கள்! உந்தென் வணக்கம்!


சோலைப் பாவலர்களுக்கு

சோலை விழாவைச் சுறுசுறுப் பாக

ஆலை போல ஆக்கிடும் அனைத்துப்

பாவல ருக்கும் பண்புடன் செந்தமிழ்க்

காவலன் பாலனின் சீர்தமிழ் வணக்கம்!


உடன் பாடுவோர்க்கு

எனக்குப்பின் கவிதைகளை இனிதாகக் கேட்போரின்

மனத்திற்கு மகிழ்வுதனை மட்டின்றி வழங்கவுள்ள

பைந்தமிழ்நல் சோலைபுகழ் பாட்டாளிப் பாவலர்காள் !

செந்தமிழ்த்தே னருவிசேலம் பாலனின் வணக்கங்கள்!

 

அவையோருக்கு

இணையத்தில் ஆர்வமுடன் இணைந்துகவி கேட்கஉள

இணையில்லாச் சுவைஞர்காள்! எங்கெங்கோ இருந்தாலும்

தமிழார்வம் கொண்டவர்காள் தன்னேரில் லாதவர்காள்

அமிழ்துதமிழ் நல்வணக்கம் அனைவர்க்கும்! ஏற்றிடுவீர்!

 

எழுத்தால் எழுதுக

எழுத்தாலே எழுகவென இனியதொரு பொருளை

எழுத்தாலே தந்திட்டார் எழுத்துத்தரும் அருளை

எழுத்தினது பெருமைகளை எல்லோரும் அறிவர்

எழுத்தினையே அறியாதார் எப்பொழுதும் சிறியார்

எழுத்தினையே கற்றுத்தரும் ஆசானோ நல்லோர்!

எழுத்தினிலே பதித்திடலாம் இறைவனுக்கு மேலோர்

எழுத்தினையே கற்றவர்கள் எப்போதும் கூறுவார்

எழுத்தினையே கற்பிப்போர் அறப்பணியின் நாயகர்

எழுத்துடனே எண்ணும்தான் கண்ணென்பர் ஆள்வர்!

எழுத்தறிய முடியாதார் எப்போதும் வீழ்வர்!                           10

 

எழுத்தறிந்தே கவிஎழுதும் எல்லோரும் சிறந்தார்!

எழுத்தறிந்தும் கவிபடிக்கார் இன்பம்பல துறந்தார்!

எழுத்தொன்றை அச்சிட்டால் என்றென்றும் மாறார்!

எழுத்தொன்றை எழுதிப்பின் மறுப்பவர்கள் தேறார்!

எழுத்திலையேல் இக்காலம், எதிர்காலம் இல்லை!

எழுத்தறியா திருப்பவரோ காண்பார்பல தொல்லை!

எழுத்துத்தான் எழுச்சிகொள எந்நாளும் செய்யும் !

எழுத்துத்தான் கதை,கவிதை, கட்டுரைகள் நெய்யும் !

எழுத்திலையேல் முன்னுக்குப் பின்எதுவும்நடக்கும் !

எழுத்திருந்தால் எப்போதும் எவரையுமே அடக்கும்!                     20

 

எழுத்தேதான் கற்றறிந்தால் பண்புநலம் பெருக்கும்!

 எடுத்தறிந்தோர் குடும்பமெனில் மகிழ்ச்சியதே இருக்கும் !

எழுத்துத்தான் செய்திகளை எடுத்துச்செலும் எங்கும்!

எழுத்தறிந்தால் நாகரிகம், சமத்துவமே பொங்கும்!

எழுத்தொன்றே எவரையுமே ஏற்றிவைக்கும் ஏணி!

எழுத்துத்தான் பிறவிக்கடல் கடக்கச்செயும் தோணி!

எழுத்துத்தான் எதனையுமே பதிவுசெயும் ஆணி!

எழுத்துத்தான் கவிஞரையே மதிப்புணர்த்தும் பேணி !

எழுத்தறிந்தோர் எல்லோர்க்கும் எழுத்தேதான் தேனி!

எழுத்தறிந்தோர் நாவினிலே வீற்றிருப்பாள் வாணி !                    30

 

எழுத்தறிந்தோர் மகிழ்வுக்கே இணையில்லை சீனி!

எழுத்தின்றி அரசியலார் ஏதேதோ வாக்கை

எழுத்தறியார் என்றாலும் ஏமாறும் போக்கை

எழுத்தறிந்தோர் சொலக்கேட்டு எடுத்தியம்பி வெற்றி

எழுச்சியினைக் காண்கின்றார் என்பதுவே வெற்றி

எழுத்தறிந்தோர் அனைவருமே எக்கேடும் மாற்ற

எழுத்தாலே தீர்வுகளை எல்லோரும் போற்ற

எழுதிட்டால், இருப்பவர்கள் ஏற்றிட்டால் நாட்டில்

எழுத்தறிந்தோர் ஆண்டிட்டால் மகிழ்வுவரும் வீட்டில்!

எழுத்தறிந்தோர் அறியாதார் இருப்பதனால் தானே                      40

 

எழுத்தறிந்தோர் தன்படைப்பில் சாடுகிறார் வீணே!

எழுத்துக்கே உளபெருமை எடுத்துரைத்தேன் கேட்டீர்!

எழுத்ததனை வேண்டாவென எவரும்சொல மாட்டார் !

எழுத்தறிந்த நல்லறிஞர் நாட்டிற்கு நன்மை

எழுத்தாலே வருமென்று சொல்வதெல்லாம் உண்மை!

எழுத்திலுள்ள வழிமுறைபோல் எல்லோரும் ஒன்றி  

எழுத்ததுபோல் எழுந்திட்டால் வென்றிடுவோம் நன்றி!!                  47

No comments:

Post a Comment