'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

அரங்கேற்றம்

                                                   4.     அறம்பொருள் இன்பம்

                                                       மும்மணிமாலை

வெண்பா: அறம் - பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்

கலிவிருத்தம்: பொருள் - பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து

ஆசிரிய விருத்தம்: இன்பம் - பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா இராசசேகர் 


இறை வணக்கம்


எல்லாம் இயக்கும் இயனிலைப் பேரொளியே

எல்லை யிலாத இயற்றமிழிற் - சொல்லெடுத்துப்

பாட வருள்வாய் மணிமாலை மூவர்க்குப்

பாட மருள்வாய் பயந்து

 

நூல்

 

அன்பின் வழிய(து) உயிர்நிலை ஆதலின்

அன்பே சிவமென்(று) அறைந்தனர் - அன்போ(டு)

உறவின னாகி உயிர்களைப் பேண

அறத்தினன் என்னப் படும்                                           1

 

படுகுழி பகைவரே செய்தாலும் இன்னும்

கொடுஞ்செயல் தினம்பல குவித்தாலும் இன்னல்

கெடுதிகள் இடையிடை மிகுத்தாலும்  செல்வப்

படைமிகின் எதிரிகள் தூள்தூளா வாரே..!                       2

 

ஏரகத் தானைப் போற்றி எண்ணிலாப் பாக்கள் பாடிச்

சீரகத் தோடு வேண்டச் சிந்தையில் மலரு மின்பம் !

வாரண முகத்தான் தம்பி மாமயி லேறி வந்து

மாரியாய்ப் பொழியு மன்பால் மட்டிலா இன்பம் தானே !!                                      3


தானே உரியன் தனக்கே எலாமென்று

வானே தனதாய் வளைத்தாலும் - மானே!

கடைவழிச் செல்கையில் கையிலொன்றும் இல்லை

உடையன ஈதல் உயர்வு                                                 4

 

உயர்வான நல்லறங்கள் உண்டாக வேண்டின்

அயர்வகற்றிச் செல்வத்தை ஆக்குவித்தல் வேண்டும்

பயிர்வளமும் பொன்வளமும் பல்திறத்து வளமும்

உயிர்வளத்தைச் செய்வதனால் உயர்வென்றும் பொருளே...!    5

 

பொருளுடன் பொன்னை வீட்டில் பூட்டியே வைத்தி ருப்பின்

வரும்பயன் ஒன்று மில்லை வறுமையால் வாடு வோருக்(கு )

அருங்குணத் தோடே அன்பாய் அளவிலாச் செல்வம் தன்னை

விருப்புடன் பகிர்ந்த ளித்தால் விளையுமே கோடி யின்பம் !!                              6

 

இன்பம் பொருளால் இயலும் பொருளினை

என்செய்தல் என்ப(து) அறமாகும் - என்னையெனின்

அந்த அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லையே

எந்தப் பொருளுரைப்பீர் இன்று?                                           7

 

இன்றுமுதல் அன்றுவரை இவ்வுலகில் செல்வம்

ஒன்றிருந்தால் சுற்றுமுற்றும் சொந்தம்வரும் இன்றேல்

பெண்டாட்டி கைவிடுவள் பிள்ளைகளும் நீங்கத்

திண்டாட்டாம் பலவுண்டாம் தீமைகளும் உண்டே 8

 

உண்டதும் உறங்கி டாமல் உளத்தினை உறுதி செய்ய

ஒண்டமிழ் நூல்ப டித்தால் ஒளியினால் இருளும் நீங்கிப்

பண்படும் அகத்தி லென்றும் பாங்குடன் பெருகும் இன்பம்

தண்டமிழ் இலக்கி யங்கள் தருவது மின்ப மன்றோ?                                         9

 

அன்றுரைத்தார் ஐயன் அறமே முதற்கொண்டு

நின்றுரைத்தார் ஔவை அறம்செய்ய  - என்றும்

அறமில்லா வாழ்வஃ(து) அரைவாழ்வே யாகுந்

திறமில்லா வாழ்வு மது                                                10

 

துன்பம் விலக்குவதும் சுற்றம் மிகுத்துவதும்

இன்பம் பெருக்குவதும் ஏற்றம் கொடுப்பதுவும்

என்ன வென்றாய்ந்தால் எல்லாம் பணமன்றோ..!

உண்மை..! பொருளின்றி உலகம் இயங்காதே...!    11

 

தேன்மலர்ச் சோலை வாசம் சிந்தையை மகிழச் செய்யும் !

வான்மழை போடும் தாளம் மனத்தினை இதமாய்க் கொய்யும் !

மீன்களும் விழிசி மிட்டி வெண்மதி யாளைச் சீண்டும் !

வான்தரும் இன்பம் நம்மை வண்ணமாய்ப் பாட வைக்கும் !!                     12

 

வைத்திருக்கும் செல்வத்தால் வாய்ப்பதில்லை நிம்மதி

மொய்த்திருக்கும் சுற்றமெலாம் பொய்யாக - மெய்யுணர

இன்பம் அதிலில்லை ஈயும் வகையறிந்(து)

அன்போ(டு) ஒழுகுதல் ஆறு                                                   13

 

ஆறும் எட்டுமாய் அடுக்கடுக்காய்ப் பணமிருந்தால்

சோறும் கறிகளும் சுவையோடு பசிநீக்கும்

ஊறு தரும்பசி உடலகன்றால் வேறென்ன

நூறு சிந்தனை நுட்பமாக மலருமன்றோ...!                14

 

ஓங்கியே விண்ணை முட்டும் உறைபனி மலைகள் கண்டால்

தூங்குதோ வென்ற வெண்ணம் துள்ளலாய் மனத்தில் தோன்றும்!

பாங்குடன் கவிபி றக்கும் பைந்தமிழ் அதில்சி றக்கும்!

தேங்கிய இன்ப மெல்லாம் தேடியே வந்து சேரும்!!                                          15

 

சேர்க்கும் பொருள்தானாய்ச் செல்லும் அறிவீரே

ஆர்க்கின்ற எண்ணமெலாம் ஆடிவிடும் - நேர்மைக்

குணத்தால் மனமோ குளிரும் அதனைப்

பணத்தால் படைத்தல் அரிது                                     16

 

அரிதினும் அரிதெலாம் அடுப்படி வந்துநிற்கும்

பெரிதினும் பெரிதெனப் பெரும்பணம் நீகுவித்தால்

அருளதும் அன்பதும் அழியாநற் புகழெல்லாம்

பொருளதன் பின்புலம் அணியணியாய்ப் பொருந்திநிற்கும்      17

 

நின்றுநி லைக்கும் வாய்மை நிமிர்வுடன் வாழ வைக்கும் !

துன்பமே சூழ்ந்த போதும் துடைத்திடும் கையாய் நீளும் !

நன்றிதை யறிந்து கொண்டால் நன்மைகள் தாமே சேரும் !

இன்பமும் தேடி வந்தே இறுக்கமாய் அணைத்துக் கொள்ளும் !     18

 

 கொள்கையில் நிற்கும் குறைவில் தவத்தொடு

உள்ளு வனவும் மொழிவனவும் - தெள்ளிய

நீராய்ப் பயனீயும் நீர்மையுள வாழ்வினுக்(கு)

யாரோ இணைகூறு வீர்                                               19

 

வீரனெனக் கூறுவோரும் வெல்கவியைப் பாடுவோரும்

காரிருளின் வெண்ணிலவாய்க் காட்சிதந்து பொலியவேண்டின்

தோரணையாய்ப் பல்பொருளும் தொகைதொகையாய்ப் பணவளமும்

சீருடனே செய்துவைத்தால் சிறப்பொளிரும் உண்மைதானே..!       20

 

உண்மையாய்ச்  சொல்வ தாயின் உயரிய எண்ணத் தோடு

வண்மையாய் மூத்தோர்ப் பேணி வாழ்த்தினை வரமாய்ப் பெற்று

மண்ணுள நாள்வ ரையில் மதிப்புடன் நடத்தி வந்தால்

கொண்டலாய்ப் பொழியும் அன்பில் கூடுமே இன்பம் வாழ்வில் !!       21

  

வாழ்நாளோ கொஞ்சம் வகையிலாச் செய்தொழிந்து

தாழ்வது நன்றோ தனையிழந்து? - பாழ்படா

உள்ளந் தனைக்கட்டி ஊர்போற்ற வாழ்கவே

வள்ளண்மை வாழ்வின் புகழ்                                     22

 

புகழ்வளம் கூடும் பொன்பொருள் கூடின்

இகல்பகை நீங்கும் இடர்பல ஓடும்

மகிழ்வுதுஞ் சேரும் மனநிலை நாளும்

அகலொளி ஆகும் அன்பதும் மிகுமே..!                          23

 

அன்பது மிகுந்த உள்ளம் ஆலய மாகு  மன்றோ?

பொன்னொளி பெருக்கெ டுக்கப் பொற்புடன் இறையே வாழும்

தன்னையே அறியும் ஞானம் தன்மையாய்த் தானே வாய்க்கும் !

உன்னத நிலையில் ஆங்கே ஒப்பிலா இன்பம் தோன்றும்!             24

 

தோன்றா எழுவாயாய்த் தொக்கும் அறமென்று

தான்றோன்றி யாய்த்திரிதல் தக்கதன்று - தோன்றா(து)

இருந்தும் பயனதுவே இவ்வாழ்வுக்(கு) ஏற்றம்

தருவதும் அஃதே தகுந்து                                 25

 

தகுந்ததைத் தகுந்தவர்க்குத் தகுந்தபடித் தருதற்குத்

தகுதியைத் தருவதெல்லாம் தகுந்ததெது தகுபொருளே

தகுதியைத் தரணியிலே தரமுயத்தும் தனிப்பொருளைத்

தகுதியாய்த் தனித்தாய்ந்து தக்கவர்க்குத் தளைத்தோதே!      26

 

ஓதுக நல்ல வற்றை ஊற்றென அறிவு மூறும்!

தீதறக் காக்கும் அஃதே சீருடன் வாழ வைக்கும்!

பேதைமை நீக்கி விட்டுப் பெருமகிழ் வெய்தச் செய்யும்!

ஆதலின் கற்றல் இன்பம் அகத்திலே பதிய வைப்பீர் !!                              27

 

வைப்பீர்க்கும் நீர்போல் வயங்கும் அருளுடைமை

மெய்ப்பித்து மேன்மைகொள் நெஞ்சமே - பொய்ப்பித்துப்

பீடித்துத் துன்பப் பிறப்பாவ(து) ஐயகோ

வேடிக்கை வேண்டா விதிர்ப்பு                                   28

 

புன்னகை அதரத்தில் பூக்க வேண்டுமா

நன்னலம் உடலெங்கும் நாட்ட வேண்டுமா

பொன்பொருள் செல்வத்தைக் போற்றி மிகுத்திடு

இன்னிலம் உன்தாளில் ஏங்கிக் கிடக்குமே...!            29

 

கிடப்பதே இன்ப மென்று கிஞ்சித்து மெண்ண வேண்டா !

நடப்பவை ஈச னாலே நம்பிடு பெருகும் இன்பம் !

கடைவழிக் கருள்பு ரிந்து கனிவுடன் துணையி ருப்பான்

முடிவிலா முதலைப் போற்றி முழுதுமாய்ச் செய்வாய் அன்பே !!            30

 

நூற்பயன்

 

ஆவலாய் அரங்கி லேற்ற அறம்பொருள் இன்பம் என்று

மூவரும் ஒன்றி ணைந்து மும்மணி மாலை செய்தோம்!

பாவலர் சோலை தன்னில் பைந்தமிழ் மணக்கும் மாலை!

நாவினால் பாடி நீவிர் நற்பயன் எட்டு வீரே!!

No comments:

Post a Comment