'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

ஏறாமல் தேறலாம் இனிது

 (மாறுரையும் நேருரையும்)

 பைந்தமிழ்ப்பாமணி பொன். இனியன்

kuralsindhanai@gmail.com

8015704659

 

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் னெஞ்சு   (1264)

காதலர் வரவு கருதிக் காத்திருப்பவளின் உணர்வு  வெளிப்பாடான இக்குறட்பாவுக்கு அமைந்த உரைகளின் இசைபு குறித்தான ஒரு கட்டுரையாக அமைகிறது இது.

கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப்பெற்றுப்  பிரிந்தவர் வருவாராக நினைந்தே, என் நெஞ்சம் மரத்தின் மேலேறிப் பாராநின்றது என்பது மணக்குடவருரை.

என் நெஞ்சம் மரத்தின் மேலேறியும் மலை மேலேறியும் மேட்டின் மேலேறியும் பார்த்துக் கொண்டேயிருக்கிறது என்கிறார் அறவாணன்.

கோடு என்பதனை மலை எனக் கொண்டு, ஆசை எனும் மலையில் என் நெஞ்சு ஏறிப் பார்க்கும் என உரைப்பதில் ஆசையை மலையாகப் பரிதியார் உருவகித்துக் காட்டியது பொருந்தியதொன்றாயி னும் ‘கொடு’ எனும் குறள் குறிப்பு எதன் பொருட்டாம் என்பது உரையில் காணப்பட வில்லை.

குரங்கு கொப்புவிட்டுக் கொப்புத் தாவுவதைப் போல மனமும் நிலையின்றி அலைகிறது என்பார் அ.கு.ஆதித்தனார். அவ்வாறு கொள்ள வேண்டின் கோடு கொடேறும் எனும் குறளின் பாடம் கோடு கோடேறும் என நெடிப்பதாகிறது.

என் மனம் மேலும் மேலும் பூரிக்கின்றது எனப்  பெரியண்ணனும் மனம் அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருக்கிறது என நன்னனும்  பொதுப்படப் பொழிப்புக் காட்டினரன்றி அதைக் குறளிலிருந்து பெற்றதெவ்வாறு என்பது தெளிவில்லை. கோடு கொடேறும் என்பதை என் நெஞ்சு மேன்மேற் பணைத்தெழாநின்றது என உரைத்துக், கோடு கொண்டு ஏறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின் மேலேற்றப்பட்டது.

கொண்டு என்பது குறைந்து நின்றது எனப் பரிமேலழகரும், ‘கொடு’ கொண்டு என்பதன் தொகுத்தல் எனப் பாவாணரும் குறித்துக் காட்டினர்.

ஒரு பொருள் குறித்த சொல் செய்யுளில் தளைகருதி விகாரித்து நிற்றல் என்பது மரபேயாயினும்,  கருத்துப் புலப்பாடும் கவிதை இலக்கணத்துக்கு இயைந்தும் நிற்பதான ஒன்றை எவரும் விகாரப் படுத்தக் கருதார் என்க. 

இவ்விருவரும் குறித்துக் காட்டியவாறான ‘ணகர’  ஒற்றுக் கொண்டு செலுத்தினும், அது அலகு பெறாமையின் / செய்யுளி(யலி)ல் எச்சிதைவு மின்றிக் கருத்திலும் எந்த மாற்றமுமின்றிக், ‘கோடுகொண்  டேறுமென் நெஞ்சு’  எனச் சிறந்து  நிற்பதாகிறது.

அதனால், தேவை எழாதவிடத்தும் ‘குறைந்து’ நின்றது என்றதும் தொகுத்தல் என்றதும் பிறழக் காட்டியவாறாதலை உன்னுக.

இவை யிவ்வாறாக, இக்குறட்பாவுக்கான பொருளறிய முற்படுவாம்.

உயர்ந்த மரத்தின்மேலேறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினார் எனப் பொருள் விளக்கக் குறிப்பொன்றை வைக்கிறார் மணக்குடவர்.

தொலைவில் வருபவரை ஆவலுடன் பார்ப்பதற்கு மரத்தின் கிளைக்கு மேல் கிளைக்கு ஏறிப் பார்ப்பது மரபு. இங்கே மனமே அப்படி ஏறிப் பார்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது என ஓர் உரைக்குறிப்பு வைக்கிறார் ஏ. கோபால கிருட்டினன்.

ஏறிப் பார்ப்பதாகக் கூறுவது மரபு என்று சொன்னா லாவது ஒப்பும்படியாயிருக்கும். மனமாகிய நுண்பொருள் தொழிற்படற்கு மலை மரம் போன்ற பருப்பொருட்களின் துணையேதும் வேண்டப் படாது போதலைக் கருத இதன் பொருளன்மை புலப்படும்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்          

கோடுகொ டேறுமென்  னெஞ்சு  

குறட்பாவில் உள்ள கொடேறும் எனும் மூலச்சொல்லைக் கொடு+ஏறும் எனும் சொற் பகுப்பில் ‘கொடு என்பதைக் கொண்டு’ என வாக்கிக் கிளையைக் கொண்டு ஏறுதல் என முன்னுரையாளர்கள் காட்டிப் போந்தனர்.

கோடுகொள் தேறும் என்பது புணர்ச்சியுற்றுக் கோடுகொடேறும் என்றாகிப் பின் தளைகருதி  வகையுளி கொண்டு, கோடுகொ டேறும் எனச் செய்யுளில் நிற்பதாயிற்று. (காண்க: இருள் தீர =  இருடீர (675)).

பிரிந்தார் காமங் கூடிய என் கோடு கொள் நெஞ்சு வரவுள்ளித் தேறும் எனும் பொருள்கோள் வைப்புக் குரியதாகிறது இப்பாடல்.

கோடுகொள் நெஞ்சு என்பது குனிந்த உள்ளம் எனப் பொருள்படவாதலைக் காண்க.

பிரிவில் தளர்ந்து பொன்றிக் குனிந்ததைக் கோடு கொள் நெஞ்சம் எனவும் / வரவின்படுபாலால் புணர்வின் உறுதியை உள்ளந் தேறிற்றாகவும் குறிக்கப்பட்டன.

பிரிவினால் காமமிகுத்துத் தளர்ந்(திருந்)த என் நெஞ்சானது அவரது வரவையெண்ணி உரம் பெற்றுத் துளிர்த்தது என்பது இதன் பொருளாகிறது பிரிவு அதைச் செய்தார் மேலேற்றப்பட்டது.    

தேறும் – தெளிவுறும். தெளிவால் விளைவன உறுதியும் உளப்பூரிப்பும். மணந்தநாள் வீங்கிய தோள் பிரிவில் தணந்தது (1233) என்றதன் மறுதலை போல, பிரிவில் கோடுற்ற என்மனம் அவர் வரவிருப்பதை எண்ணித் தேறுதல் கொள்கிறது என்பதாக அமைந்ததிக் குறட்பா.

No comments:

Post a Comment