'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
பகுதி – 12

கொங்கை இரண்டும் குவிந்தமுகிழ் கோங்கரும்பு
செங்கை விரிந்தவிதழ்ச் செங்கழுநீர்ப் பூவாகும்

பார்க்குவிழி பூங்குவளை பாதம் அனிச்சமலர்
வேர்க்கும் முகமதுவோ வெண்பனித் தாமரை

வட்ட இதழிரண்டும் வண்ணத்துப் பூச்சியொட்டா
மொட்டவிழ் செம்பருத்தி! மோகம் உயிர்த்தெழுப்பும்

ஏழுவகைப் பூச்சுமந்(து) ஏந்திழையாள் ஊர்ந்துவர
வாழும் நிலம்வியக்கும் வையகம் கண்மயக்கும்..!

அந்த மலர்போலும் மங்கைதன்னைக் கண்டெந்தன்
நொந்த நிலையெடுத்து நீயியம்(பு)..! ஆமாம்

கரடிகுளம் வள்ளிமுத்தார் காதலுக்குத் தூதாய்
வரும்நிலை சொன்னவுடன் மைவிழியாள் கண்விரியும்..!

பொய்யில்லை அன்பில் புரட்டில்லை என்பதவள்
மெய்தோன்றும் மாற்றம் மிகத்தெளிவாய்க் காட்டிநிற்கும்..!

வாலைக் குமரியவள் வாள்விழியில் தோயாமல்
ஆலைக் கரும்பெனநான் ஆனநிலை ஆங்குச்சொல்..!

மாலை வருவதற்குள் மான்விழியாள் சூடிவைத்த
மாலை மலரேனும் வாங்கிவா..! நானோ

மனையாளின் பொன்விரலில் மாட்டிவைத்த பொன்செய்
கணையாழி கண்ட இராமன்போல் காத்திருப்பேன்..!

ஏங்கிநிற்கும் என்னுள்ள ஏக்கத்தை தீர்க்கமலர்
வாங்கிவந்தால் காக்கையே உன்னை வரவேற்று..!

நெய்யைக் கலந்தநெல் சோற்றில் பருப்பூற்றிக்
கையிற் பிசைந்து கவளம் பலவைப்பேன்..!

வாழையிலை வைத்து வகைவகைச் சோற்றோடு
நாளையிளம் காலை நனிவிருந்து செய்துவைப்பேன்..!

செந்தழல் வாட்டிச் செழுங்கறி ஆட்டிறைச்சி
பொன்கலம் வைத்துப் புசித்துண்ண நான்தருவேன்..!

வெங்கலக் கும்பாவில் வேகவைத்த இட்டலியை
உண்ணென்று சட்டினியை உட்கலந்து கூரைவைப்பேன்..!

கோழிக் குழம்பும் கொதித்துவெந்த முட்டையொடு
நாழி வரகரிசிச் சோற்றையும் நான்வைப்பேன்

ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி மீன்நண்டு பன்றியொடு
காட்டிறைச்சி பற்பலவும் காட்டியுனை நானழைப்பேன்..!

வெங்காயம் பூண்டு மிளகொடு சீரகமும்
செம்மையுடன் சேர்த்துப் புளிச்சாறும் செய்துவைப்பேன்..!

எட்டுக் கலம்நிறைய எல்லா உணவமைத்துத்
தொட்டுண்ணக் கூட்டும் துவையல் பலசமைத்து

அன்பும் கலந்தமைத்த ஆசை விருந்திதுவாம்
துன்பம் விலக்கியென்றன் தூய உளத்தோடு

காகாகா என்றழைப்பேன் காக்கை விருந்துண்ண
வாவாவா என்றழைப்பேன் வள்ளிமுத்து செய்விருந்தால்..!

வாயும் வயிறும் நிரம்பியுன்றன் கூட்டமெல்லாம்
நோயும் நொடியும் விலகிக் களிப்புடன்

நூறாண்டு நூறாண்டு வாழ்க நுவலுதமிழ்
சீராண்ட தன்மைபோல் சேர்ந்து..!

தூது முற்றும்...!

No comments:

Post a Comment