'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

முருகா சரணம்

கவிஞர் செந்தில் குமார்

கிளிக்கண்ணிகள்

 தோகை மயிலாடத் துன்பம் பறந்தோட

ஏகன் வருவானடி - கிளியே

எங்கும் அவன்தானடி                                      1

 

காவடியுந் தோளாடக் கந்தன் நினைவோடச்

சாவடிக்கு வந்தோமடி - கிளியே

தஞ்சம் தருவானடி                                           2

 

மூங்கில்  இசைபாட முப்பொழுதும் நான்வாட

ஏங்கும் நிலைதானடி - கிளியே

இறுமாப்புக் கொண்டானடி                           3

 

எள்ளி நகையாடி என்னில் விளையாடி

அள்ளிக் கொள்வானடி - கிளியே

அழகன் அவன்தானடி                                     4

 

தங்கரத மேறித் தவழ்ந்துவரும் பிள்ளையவன்

அங்கம் நிறைந்தானடி - கிளியே

அவனின்றி நானேதடி                                     5

 

ஆறுபடை வீடுடையான் ஆதியந்தம் இல்லாதான்

பேறெல்லாம் தந்தானடி - கிளியே

பெரும்பேறு கொண்டானடி                           6

 

பழனிமலை மீதமர்ந்து பக்தர்களைக் காப்பவன்தான்

பழம்வேண்டி அமர்ந்தானடி - கிளியே

பண்டார தெய்வமடி                                        7

 

செழுங்குரங்கு ஓடியாடும் சென்னிமலை மீதினிலே

தேரோட்டம் காண்பானடி - கிளியே

செந்தமிழில் சொல்வேனடி                            8

 

அஞ்சுசடை கொஞ்சும் அழகுசடை மார்புரளும்

பிஞ்சுக் குளவியடி - கிளியே

பித்தாகிப் போனேனடி                                   9

 

தென்பழனி ஊரினிலே தேரோடும் வீதியெல்லாம்

அண்ணலவன் ஆள்வானடி - கிளியே

அகிலமெல்லாம் போற்றுமடி                         10

No comments:

Post a Comment