'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

காக்கைவிடுதூது

                                                                பகுதி - 4

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து


புன்செய் வளம்..!

 

ஆவிபோய் வெம்மை

அனல்பறக்கும் உப்பளமாய்ப்

பாவியேன் காதல்

படுநோயில் வேகின்றேன்..!                     73

 

வாவி மலர்பெய்து

வண்டார் குழலாடும்

பூவிழியாள் ஊர்தேடிப்

போவாய்நீ தூதெனக்குக்..!                      74

 

காமன் விடுகணையால்

காதல் உயிர்கொய்யக்

காலன் வருமுன்னே

காக்காய்போ காப்பாய்வா..!                  75

 

காதலியாள் ஊரோ

கழுகுமலைப் பக்கம்தான்

ஆதலால் வேலன்

அருளுண்டாம் அஞ்சாதே..!                     76

 

ஈரெட்டுக் கல்தாண்டின்

என்னவள் ஊர்கிடக்கும்

காரெட்டும் பூமரங்கள்

காற்றால் முகில்துடைக்கும்                   77

 

வானுரசி நிற்கும்

வளப்பனையின் கள்ளருந்தி

மீனுரசும் பொய்கையிலே

மேகங்கள் தள்ளாடும்..!                           78

 

முன்னங்கால் தூக்கி

மறியினம் மாவுதிர்க்கக்

கன்னங்கள் போல்சிவந்து

கால்வாய் படகோட்டும்.!                          79

 

ஊழிவெள்ளம் வந்ததுபோல்

ஊர்ந்தோடும் செம்மறியை

ஆலமரம் மேலேறி

அஞ்சி அணில்பார்க்கும்..!                       80

 

செங்களம் காயும்

சிவந்த மிளகாயை

வெங்களம் என்றே

விரும்பிப் பருந்தாயும்..!                           81

 

மேய்ந்த களைப்பாற..!

வேல மரத்தடியில்,

சாய்ந்துகண் மூடி

எருமை அசைபோட                                 82

 

வாயொழுகும் நீரெல்லாம்

வானருவி என்றெண்ணி

ஈமுழுகும் காட்சி

நினைவூட்டும் குற்றாலம்.!                      83

 

கோணப் புளிதின்று

கொட்டை கிளிசிந்தத்

தேனுண்வண் டெண்ணித்

தெறித்துக் குரங்கோடும்..                      84

 

ஆட்காட்டிக் கீச்சொலியும்

நாகணவாய்ப் பேச்சொலியும்

பூக்காட்டின் கௌதாரிப்

புள்ளொலியும் ஆர்ப்பரிக்கும்!                   85

 

மஞ்சள் உடற்பூசிக்

கள்ளி மலரழைக்கக்

கொஞ்சிக் குலவுவண்டு

கூடல் திளைத்திருக்கும்..!                           86

 

வேம்பில் குயிலமர்ந்து

மெல்லிசையால் தாலாட்டக்

கூம்பும் சிறகுடைய

கூஉகை கண்ணுறங்கும்..!                          87

 

மூங்கா வெருகோடி

முட்புதரில் தாம்ஒளியத்

தூங்கா முயல்கலை..

யத் துரத்தி நாயோடும்                               88

 

பஞ்சுருட்டான் கூடிப்

பறக்கும்; கரிச்சான்கள்

கொம்பமர்ந்த பாட்டுக்குக் ..!

கொண்டலாத்தி சென்னியாட்டும்..!         89

 

கற்பனை இல்லாக்

கவிபோல் வறள்நிலத்தில்,

ஒப்பனை இன்றி

ஒயிலாய் மயில்நடக்கும்..!                          90

காளைக் கழுத்துமணி

கம்பீரப் பாட்டுக்கு

வாலைத் தரையூன்றி

வாகாகப் பாம்பாடும்.                                 91

 

பால்வெண்ணெய் போலும்

பருத்தி வெடித்துநிற்க

மால்வண்ணன் அன்ன

மழையோ மகிழ்ந்திறங்கும்..!                     92

 

வண்டல் நிலம்வெடித்து

வான்பார்த்து வாய்திறக்கக்

கொண்டலோ தாயாகிக்

கொங்கை குளிர்விக்கும்.!                          93

 

புன்செய் நிலத்தின்

பொழிலழகைக் கூறிவிட்டேன்

நெஞ்சில் நிறைத்ததை

நீகடந்து போனபின்..!                                   94

 

நஞ்சைவரும், நண்டோடும்

நாற்றங்கால் நீள்வரப்பில்,

துஞ்சவரும் மீனெண்ணித்

தூயவெள்ளைக் கொக்குகளும்..!           95

                                                                     (தூது தொடரும்...!)

(மறி – ஆடு; மா – மாம்பழம்; மூங்கா – கீரி; வெருகு – காட்டுப்பூனை; பஞ்சுருட்டான் – ஒருவகைப் பறவை; கரிச்சான் - கரிக்குருவி, ரெட்டைவால் குருவி என்றும் அழைப்பர்; கொண்டலாத்தி - கொண்டையலச்சான் என்றும் கூறுவர், மரங்கொத்திப் பறவைகளில் ஒருவகை).

No comments:

Post a Comment