இரா. இரத்திசு குமரன்
கடுமையான சூறைக் காற்றால் கிளைகள் ஒடிக்கப்பட்டுப் பொலிவை இழந்த மரம்போல், காதல் சிறகுகள் முறிக்கப்பட்டுப் பறக்க முடியாமல் தரையில் தவழும் பறவைபோல், 'தலைவிதியா' என்று திகைத்துக்கொண்டிருந்தான். அவன் அருகில் இருந்த ஓர் ஆல மரத்திற்கும் அதே நிலைதான்.
மரங்கள் இறைவன் வரைந்த ஓவியங்கள். காதலர் வருகைக்குப் பார்வை வீசும் கண்கள்போல் சூரியன் முகம்பார்க்கக் கிளைகள் வீசும் மரங்கள். கடுமையான வெயில், அதைக்கூடப் பொருட்படுத் தாமல் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் நிழலுக்குக் கொஞ்சம் அடைக்கலம் புகுவான் நந்தா. பெரிய ஆலமரம் அது. எத்தனை வருடங்களாக இருக்கிறது என அவனுடைய கிராமத்தில் இருக்கும் யாருக்குமே தெரியாது.
'எனக்குக் கருத்துத் தெரிஞ்சதிலிருந்தே இந்த மரம் ரொம்ப பெருசாத்தான் இருந்துச்சி' என அவனுடைய சொந்தக்காரத் தாத்தா சொன்னது நினைவில் வந்தது. நந்தாவும் யோசிச்சதுண்டு. ஒருவேளை 150 அல்லது 200 வயதாகுமோ என்று. பறவைகள் பல இங்கு வந்து ஆலம் பழங்களைச் சுவைத்து மீதியை அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள்மீது சிதறவிடும். அப்போதெல்லாம் சிறுவர்கள் கல்வீசி விரட்ட முயல்வார்கள். எத்தனையோ பேருக்கு முதல் விளையாட்டுத் திடல் அந்த ஆலமர நிழல்தான். நந்தாவுக்கும் அதுதான் முதல் திடல். விடுமுறை நாட்களில் அது வீடாகவே மாறிவிடும். ஓடிவந்து மரத்தின் கிளைகளைத் தாழ்த்தி அதன்மீது உட்கார்ந்து சுகமாகக் காற்று வாங்குவான். ரொம்ப அடர்த்தியான புதர்ப்பக்கம் ஓணாங் கொடி இருக்கும். அதை அறுத்து ஆலம் விழுதோடு இணைத்துக் கட்டி ஊஞ்சல் ஆடுவது நந்தாவிற்குச் சிறுவயது பொழுதுபோக்கு.
இரவு நேரங்களில் அந்தப் பக்கம் போகவே யாரும் யோசிப்பார்கள். பெரியவர்களே போவதில்லை. வழக்கமான இருட்டு அச்சம் நந்தாவிற்கும் இருந்தது. 'பாதி ராவுல அங்குக் கன்னிமார் சாமிங்க நடந்துபோகும். அப்போ நாம குறுக்குல போனா நம்மை அடிச்சிடும். அதிலும் கடைசிக் கன்னிமார் ரொம்ப கோபமானது' எனப் பாட்டிகள் சொல்வதை ஆர்வமாகக் கவனிப்பான். பிறகு நந்தாவுக்குள் கேள்வி எழ ஆரம்பித்தது. இங்குதான் ஐயனார் சாமி இருக்காரே, ஏன் பயப்பட வேண்டுமென்று.
பகல் நேரத்தில் மரத்தின் பொந்துகளில், கோயில் உள்பக்கத்தில் ஒளிஞ்சி விளையாடுவான். ஆனால் இருளில் அந்தப் பக்கம் போகும்போது சாமி பாட்டு மனசினுள்ளே நினைத்துக் கொள்ளும் பழக்கம், மெல்லத்தான் குறைந்தது.
மழை பொழிகிற நேரங்களில் மரத்தடி வேருடன் ஒட்டிக்கொண்டு நின்று மின்னல் வராத சமயம் பார்த்து ஓட்டம் பிடிக்கும் சிறுவர்களுள் அவனும் ஒருவனாக இருந்தவன். மழையில் வேண்டுமென்றே நனையக் காரணங்களை உண்டாக்கிக் கொள்பவனாக நந்தா மாறினான். மழை இயற்கையின் உயிர்ப்பரிசுதானே. அதனால்தான் எவ்வளவு வறட்சி வந்தாலும் மரம் பட்டுப் போனதாகவே தெரியவில்லை.
பக்கத்துக் கொல்லையில் கரும்பு உடைத்துக் கொண்டு மரக்கிளைகளில் அமர்ந்து கதைகள் பேசிச் சுவைத்த மீதியைக் குரங்குகளுக்குக் கொடுப்பான். தேங்காய் பத்தையைக் கையில் வைத்துக்கொண்டு குரங்குகளின் கைகளில் கொடுப்பதை தீரமான செயலென மகிழ்வான். இதுபோல நந்தா மற்றும் பலரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அந்த ஆலமரத்தில் இருந்து எவ்வளவோ பயனடைந்தனர். மழைக்காலக் காற்றில் காய்ந்த கிளைகள், சில நேரங்களில் உயிருள்ள சிறுசிறு கிளைகளும் ஒடிந்துவிழும். அதைப் பற்றிக்கொள்ள மகிழ்ச்சியாக ஓடி வரும் கிராமத்துப் பெண்களின் ஆர்வத்தைச் சிரித்துக் கொண்டே பார்ப்பான். அந்த மகிழ்ச்சி, ஆர்வம் எல்லாமே இழந்துவிட்டான் நந்தா. காற்றுக்குத் தங்கள் மரத்தின்மீது என்னதான் கோபமோ தெரியவில்லை. பெரிய பெரிய கிளைகளை ஒடித்துத் தள்ள, மழை வந்ததே என்று மகிழ்வதா, மரத்தின் பொலிவு அழிஞ்சிடுச்சே என வருந்துவதா எனத் தெரியாமல் போன சில மணி நேரங்களும் உண்டு. மரக்கிளைகளைக் கீழே பார்த்ததும் அவனுக்குள் துயரம் அதிகமானது. இன்னும் மரம் உயிரோடுதான் இருக்கிறது. வயசானவங்க நடக்க முடியாம வருந்தும்போது எழும் பரிதாபம் போல அந்த மரத்துக்கும் வயசாகிவிட்டதோ என்று தோன்றும். தன்னைப் பார்க்க வந்த நண்பனும் மரத்தைப் பற்றியே கேட்டு உணர்வுகளை மீட்டி விட்டான்.
“என்ன நந்தா இது? மரம் இப்படி ஆகிடுச்சி”, “எவ்வளவோ பெரிசா இருந்துச்சி. என்ன செய்வது? இப்படி ஆகிடுச்சே!” “இயற்கை, கவிதை, காதல் என உன் நினைவுகளுக்கு இந்த மரந்தான் அடித்தளம் போல”, கூறினான் நந்தாவின் கல்லூரி நண்பன்.
ஆம். அது உண்மையுங்கூட. பொதுவாக நந்தாவிற்கு மரங்கள் பிடிக்கும். இந்த ஆல மரந்தான் அதற்குக் காரணம். அம்புகள் தைத்துக் காயங்கள் பட்டும் இரத்த சகதியோடு எழுந்து நின்று கர்ஜிக்கும் போர்வீரன் போல அம்மரம் நின்று கொண்டிருக்கிறது. சிறு வயதிலிருந்தே அவன் அனுபவித்து வந்த மகிழ்ச்சியான தருணங்கள் திரும்ப வராதுதான். எனினும் நந்தா நம்பினான். அவன் உயிரோடு இருக்கும்வரை அந்த மரம் இருக்கும். அவன் உறங்கிக் கொண்டு போனாலும் அது தலையசைத்துத் தாலாட்டுப் பாடும். அவன் காதல் நினைவுகளைப் போல.
காலையில் சூரியனின் முதல் கதிரையும் மாலையில் இறுதிக் கதிரையும் யார் பார்ப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதுபோலத்தான் நந்தாவின் ஆலமரத்தின் முதல் தளிர் விட்டபோது யார் பார்த்தது? இறுதி இலை உதிரும்போது யார் பார்ப்பார்கள் என்று கூறிவிட முடியாது.
விதியெனத் திகைத்து விழுந்த நந்தாவின் நிலையும் எப்படி இருக்கும் என யாராலும் கூறிவிட முடியாதுதான். ஓர் பெண்ணை நேசிக்கும் எந்த நந்தாவும் சமூகத்தால் வீழ்த்தப்படலாம். ஆனால் இயற்கையை நேசிக்கும் எந்தவொரு நந்தாவும் மீண்டும் எழுவான்.
No comments:
Post a Comment