'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

பகுதி - 8

பிரிந்தவர் நினைத்துப் புலம்பல்


பூக்குளித்தல் போலும் புனற்குளத்தில் நீராடத்

தீக்குளித்தல் போல்நான் திமிர்ந்தழகால் வெந்ததுவும்!


பூவணி போதாதோ..! புன்னகை காணாதோ!

தாவணியும் நீவியவள் தற்கொலைக்குத் தூண்டியதும்!


பொன்னடி பூப்போல் புலம்பெயரப் பூவிழியாள்

கண்ணடி பட்டுக் கலங்கித் தவித்ததுவும்..!


செம்மண் வழித்தடத்தில் சிள்வண்டு பாட்டிசைக்க

அம்மன் விழாவுக்(கு) அவள்பின் நடந்ததுவும்


மார்கழி முன்பனியில் மஞ்சள் நிலாமுகத்தாள்

கூர்விழி காணவே கோவிலுக்குப் போனதுவும்?


தென்றல் மிதிவண்டித் தேரேறி ஊர்ந்துவரச்

சென்று தவங்கிடந்து சேல்விழியால் செத்ததுவும்!


வாரத்தில் மூன்றுநாள் வைகறையில் நீர்வரும்..அந்

நேரத்தில் முக்குடம் தாங்கியென் தேர்வர!


ஈக்கள் பலசுற்றும் மின்சாரப் பூவின்கீழ்

பாக்கள் எழுதல்போல் பன்னாள் நடித்ததுவும்!


அந்தி அடங்கிய அன்றொருநாள்..! அன்னதானப்

பந்தியில் பார்வையால் என்னைப் பருகியதும்


கூத்துக் கரகாட்டாம் கூடியூர் பார்த்திருக்க

ஆத்தாடி கண்ணிரண்டால் ஆளை விழுங்கியதும்


முந்தானை மாட்டி முளைப்பாரி தானெடுத்து

வந்தவளை எண்ணியெண்ணி வாழ்வைத் தொலைத்ததுவும்


வாய்நீர் பருக வரங்கேட்டு வந்தெனக்குத்

தேநீர் சுடச்சுடத் தேர்ந்தெடுத்துத் தந்ததுவும்


புத்தகம் மார்பணைத்துப் பூவையர் சூழ்ந்துவரப்

பத்தனைப்போல் பாலத்தில் நித்தம் கிடந்ததுவும்


எள்ளுப்பூப் போலென்னைப் பார்த்துத் தலைகவிழ்ந்தாள்

கள்ளம் விலகியது காதல் எனவறிந்து


சொல்லி விடத்துணிந்து சொல்லைக் கவியெழுதிச்

சொல்ல முடியாமல் சொல்லை ஒளித்ததுவும்.!


எத்தனை பாக்கள் எழுதிவைத்தும் இன்னுமின்னும்

எத்தனை பூக்கள் பறித்துவைத்தும் நேர்வரப்


புத்தனைப் போல ஒளித்துவைத்துப் பூவைமுன்

பித்தனைப் போலப் பிதற்றிக் கிடந்ததுவும்


வேலாடும் மைவிழியாள் வேட்கைதனை யாமறிந்து

நாளும் பொழுதோடு பேசிக் கிடந்ததுவும்!


முத்தம் கொடுத்ததில்லை கட்டிப் பிடித்ததில்லை

பத்து விரல்புதைத்து மோகம் தொலைத்ததில்லை!


சித்தம் அடக்கிச் சிரித்தெதிர் தாமர்ந்து

புத்தம் புதுமைபல பேசி மகிழ்ந்ததுவும்


கற்றைக் குழல்விரிய கார்மழையில் கால்நனைய

ஒற்றைக் குடைக்குள் உயிர்நனைந்து போனதுவும்!


காலம் பிரித்ததினால் காதல் மிகுந்தோடக்

கோலஞ் சிதைந்தவளைக் கொள்ளும் வழிதேடி


ஏங்கித் தவிக்கின்றேன் ஏதோ புலம்புகின்றேன்

வீங்கி மனங்கிடக்க வெந்து தொலைக்கின்றேன்!


பொட்டழகும் போர்செய்கண் வெட்டழகும் கொங்கையிரு

மொட்டழகும் எட்டழகைப் போலிடைக் கட்டழகும்!


அன்ன நடையழகும் அந்தி உடையழகும்

பின்னல் சடையழகும் கண்டால் படைதுவளும்!


தூது தொடரும்...

No comments:

Post a Comment