பைந்தமிழ்ச்செம்மல்
திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்
கட்டுரையாக்கம்:
பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
புதுக்கவி நாயகராம் - இவர்
புதுப்புதுக் கவிதையின் தாயகமாம்
மதுதரும் போதையைப்போல் - மனம்
மயக்கிடும் சிலேடையில் ஓங்கிடுவார்!
சீரொடு யாப்பறிந்தே - தனிச்
சீருடன் பாக்களை யாத்திடுவார்
என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர், மிகச்சிறந்த மரபு பாவலர், புதுக்கவிதைப் புயல், சிலேடைச் சிங்கம், இயற்கையை வியந்து வியந்து பாடும் இன்னிசைக் கவிஞர் பைந்தமிழ்ச்செம்மல் திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்.
அவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் கரடிகுளம் என்னும் ஊரில் 1982-ஆம் ஆண்டு பிறந்தார். முத்தாகத் தமிழ் பாடும் இவரைப் பெற்றோர் பேச்சிமுத்து – ராமுத்தாய் அவர்கள் மட்டுமன்று; இந்நாட்டு மக்களுந்தான்.
கல்வியின் மீது தீராத காதல் கொண்ட அவர் முதுகலைத் தமிழ் (M.A.), இளநிலைக் கல்வியியல் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறுகொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர் (எடப்பாடி ஒன்றியம் -சேலம் மாவட்டம்) ஆவார்.
தமிழ்ப்பணி: அவர் 13 வயதில் கவிதை இயற்றத் தொடங்கினார். பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுமத்தில் பாவலர் மா.வரதராசனாரிடம் முறையாக யாப்பிலக்கணம் பயின்று மரபு கவிதை எழுதி வருகின்றார். பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் உறுப்பினராகவும், மரபு பாக்களைப் பயிற்று விக்கும் துணையாசிரியருள் ஒருவராகவும், தமிழ்க்குதிரின் துணையாசிரியராகவும் பொறுப்பேற்றுப் பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறார்.
சிலேடைக் கவிஞரான அவருக்குப் பாவலர் மா.வரதராசனார் இயற்றிய சிலேடைக் கவிதை:
வள்ளியைச் சேர்த்ததால் வண்டமிழ் தேர்தலால்
தெள்ளிய சோலை திரிதலால் - உள்ள
முருகுதமிழ்ப் பாவி லுறைதலால் ஒன்றும்
முருகனும் வள்ளிமுத்து வும்!
இயற்கை இயம்பி: அவர் எப்போதும் கற்பனை ஓடையில் கவித்துவம் நிறைந்த மீன்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர். மண்மீன்களைச் சுவைப்பது மட்டுமன்றி விண்மீன்களையும் ஒரு கை பார்ப்பவர். காட்டருவிகளோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பவர். வயல்வெளிகளிலும், பூஞ்சோலைகளிலும் சுற்றித் திரியும் அவருக்கு முகிலும் மகிழ்மதியும் சொந்தப் பிள்ளைகள். இத்தகு இயற்கைக் கவிஞரின் இலக்கியப் படைப்புகளாவன:
இரட்டுற மொழிதல் நூறு (சிலேடை வெண்பாக்கள்) என்ற இவரின் முதல் நூல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நூலைச் சிறந்த நூலாகத் தேர்வுசெய்து ஈரோடு தமிழ்ச் சங்கம் மூன்றாம் பரிசு வழங்கியது.
மேலும் அவர்,
வள்ளிமுத்து கவித்துவம் 100
காக்கைவிடு தூது
இயற்கைப் பாவை
பட்டாம்பூச்சி (சிறுவர் பாடல்)
ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவை அச்சில் உள்ளன. இவற்றோடு அணியில் ஆயிரம் என்ற நூலைத் தொடராக எழுதிவருகிறார்.
அவருடைய கவித்துவத்திற்கு ஒரு சான்று:
வாய்க்கால் வழிந்தோடும் நீர்வரப்பில் செந்தட்டான்
பூக்கால் மிதித்தருகம் புல்வளைக்கும் -நோக்குங்கால்
வில்வளைந்து நீர்கிழித்து மெல்லிசை தோற்றுவிக்க
நெல்வயலும் ஆடும் நெளிந்து...!
புரட்சிப் புயல்: ‘உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்’ என்னுமாறு உயரிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொஞ்சு தமிழில் உலகமெல்லாம் கொண்டு சேர்ப்பவர். இவரது பாடல்களில் புரட்சிக் கருத்துகள் வெடிக்கும். புரட்டுக் கதைகள் மடியும். காலத்திற்கேற்ற சிந்தனையைத் தூண்டும் கருக்கொண்ட கவிஞர் அவர். ஆம்.. அதற்கொரு சான்று:
சாதியென்னும் சாக்கடையில் பன்றிகளாய்ப் புரளுகின்ற
சாத்திரத்தை உடைக்கவேண்டும் எழுக..!
ஆதியிலே வந்துநின்ற கேடுகெட்ட மூடத்தனம்
அத்தனையும் தொலைக்கவேண்டும் திமிர்க..!
பாதியிலே புகுந்தெழுந்து பாவையரின் அறிவொடுக்கும்
பெண்ணடிமை ஒழியவேண்டும் வருக..!
நீதியொன்றால் நாட்டிலெங்கும் சமத்துவமே நிலைக்கவேண்டும்
நீயதற்குப் புரட்சிக்கவி தருக...!
பட்டங்களும் விருதுகளும்: அவர்
• பைந்தமிழ்ச்செம்மல்
• நற்றமிழாசான்
• சந்தக்கவிமணி
• விரைகவி வேந்தர்
• பைந்தமிழ்ச்சுடர்
• ஆசுகவி எனப் பல பட்டங்களைப் பைந்தமிழ்ச்சோலையில் பெற்றுள்ளார். மேலும்
• சிலேடைச் செம்மல் (ஈரோடு தமிழ்ச்சங்கம்)
• கவியொளி (ஈரோடு தமிழ்ச்சங்கம்)
• கவி காளமேகம் (உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை)
• வீறுகவி முடியரசனார் விருது
முதலிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மரபு கவிதையின் பல்வேறு யாப்பிலக்கியங்களையும் படைத்து வருகின்றார். இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment