'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

கொல்வார் சிறியர் கொள்வர் பெரியர் (பாடபேதம்)


கவிஞர் பொன். இனியன்
              
திருக்குறள் தோன்றி ஈராயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்றளவும் நின்று இலங்கி நெறிகாட்டு நூலாய்த் திகழ்கிறது. இனம், மொழி, இடம், காலங் கடந்து அனைவர்க்கும் உரிய தனிச் சிறப்பு மிக்க உலகு தழுவிய ஒரு பொதுநூல் இதுபோலப் பிற எம்மொழியிலும் இல்லை என்பதும் தமிழுக்கு வாய்த்த பெருஞ்சிறப்புகளுள் ஒன்று .

இற்றைநாள் நம் கையில் உள்ள திருக்குறள் நூலின் அமைப்பு எல்லா வகையிலும் வள்ளுவர் வைத்துச் சென்ற நிலையில் இல்லை என்பதே உண்மை. காலப்போக்கில், இயல், பகுப்பு மற்றும் குறள்வரிசை ஆகிவற்றில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது கண்கூடு. மேலும் பாட பேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாசிரியனும் தனக்கெனச் சில எண்ணங்களை மனத்துட்கொண்டு ஒருபகுதி இவ்வாறிருந்தால் நன்றாக இருக்குமே எனக்கருதிச் சில மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்பதை அதற்குரிய காரணமாக அனுமானிக்கிறார் சவேசு அவர்கள். திருக்குறளின் பொருள் மாறுபாடு கொள்ளும்படியான அத்தகைய பாட பேதங்கள் சற்றேறக்குறைய 516  உள்ளதாக அறிஞர் சவேசு அவர்கள், பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

கல்லாமை அதிகாரத்தில் உள்ள
கல்லாதா  னொட்பங்  கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்  (குறள் 404)                
எனும் இப்பாடலும் பாட மாற்றத்திற்கு உட்படின் வள்ளுவத்தின் கருத்துத் தெளிவுறும் என்பதோடு மேலும் சிறக்கும் எனத் தோன்றுகிறது. இது குறித்துச் சிந்திக்குமாறு குறளறிஞர்களை வேண்டுகிறேன்.

இக்குறட் பொருளாகக்
‘கல்வியறிவு இல்லாதவனின் கருத்துகள் கூர்த்ததாயிருப்பினும் அறிவுடையோர் அதனை ஏற்கமாட்டார்’ எனும்படியாகவே எல்லா உரைகளும் அமைந்துள்ளன.

இக்குறளுக்கு ஒத்தும் தம்முள் வேறுபட்டும் குறளுக்கே மாறுபட்டும் அமைந்த உரைகள் ஒரு சிலவற்றை சற்றே பார்ப்போம்.

கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார் என்பது மணக்குடவருரை. கல்வியில்லாதவனுடைய உறவு நன்றா யிருந்தாலும் அறிவுடையார் அவனுடன் சினேகம் பண்ணார் என்கிறார் கவிராசபண்டிதர்.  கல்லாதவன் வயதால் பெரியவனாகிலும் அறிவுடையார் கொள்ளார்கள் என்பது பரிதி உரை.

‘நல்லவையே ஆனாலும், நன்றாக இருந்தாலும்’ அதைக் கொள்ளார் என்றது நலம்புரிந்த தன்மையால் ஆளப்படுதலைக் (511) காட்டும் குறளுக்கு மாறாதலைக் காண்க.

கொள்ளாமைக்கு உரிய காரணம் எதுவும் சொல்லாது அமைந்த உரைகளே மிகுதி. அதை, ‘அவ்வப்போது’ ‘தற்செயலாய்’ ‘ஒரோவழி‘ ‘எதிர்பாராமல்’  தோன்றுவது எனக் குறித்தாருமுளர்.

உரையில் ‘நன்றாக இருந்தாலும்’ எனக் காட்டி, அவ்வறிவு நல்லறிவாகாது எனும் பிற்குறிப்பையும் சேர்த்து வைத்து குழந்தை தம் உரையைத் திட்பமிழக்கச் செய்கிறார்.

‘நன்று ஆயினும்’ எனத் திட்பமாயும் திருத்தமாயும் குறளில் குறித்திருக்க, ‘நல்லவை போன்று தோன்றினாலும்’ என  உரைத்தார் சவேசு. நன்று என்பதாக மட்டுமல்லாது கழியநன்று என்பதையும் ஊன்றி யுன்னுக.

கல்லாதவனின் அறிவை முழு அறிவாகக் கொள்ளமாட்டார்கள் என்பது குசஆனந்தனின் உரைக்குறிப்பு. அவ்வாறாயின் கற்றவர் அறிவு முழு அறிவாகுமா? என்பதோர் இடரான கேள்வி எழுவதற்கு இடமுண்டாகிறது. ‘கணந்தோறும் புதுவதும் வளர்ந்து கொண்டே இருப்பதும் அறிவின் தன்மைகள். ‘முழு அறிவு’ என ஒன்றில்லை என்பதே உண்மை. இதை ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ (222) எனச் சுட்டுகிறது திருக்குறள். இந்நிலையில், கல்லாதவனின் அறிவை முழு அறிவாகக் கொள்ள மாட்டார்கள் என்பதில் ஏதும் பொருட்புலப்பாடு உண்டோ என்பது கருதுக.

கல்வியறிவில்லாதவன் மிகவும் அழகுடையவனாய் இருந்தாலும் அதனை அறிவுடையார் அழகு எனக் கொள்ளமாட்டார்  எனும்  பழைய உரை (உவேசா). (அழகுத்) தோற்றத்துக்கும் கல்விக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஒரு தெளிவற்ற பார்வை உடையதாகிறது. ‘நடுஒரீஇயால் கல்வியழகே அழகு’ எனும் நாலடியார் கருத்தை உட்கொண்டு  எழுந்த உரையோ இது என்று எண்ணத்  தோன்றுகிறது.

ஒட்பம் என்பதற்கு வயது, அழகு, உறவு, கருத்து, உரைத்திறன், மனனம் செய்து ஒப்புவிக்கும் ஆற்றல் என்றெல்லாம் பொருந்தாதவாறு பொருள் புகட்டிய உரைகளுக்கிடையில் மூலத்தில் உள்ளவாறே (ஒண்மை, ஒட்பம் என) வைத்துக் காட்டிய உரைகளும் உளவாயின.

ஒருசொற் பலபொருள் உணர்த்துவதும் பல சொற்களால் ஒரு பொருளைக் குறிப்பதுவும் மொழியின் சிறப்பியல்புகளில் ஒன்று. சொல்லுக்குரிய பொருள் என்பது மட்டும் கொண்டு பொருந்தாத இடத்திலும் ஒன்றைப் புகுத்திக் காட்டுவது உரை ஒழுக்காகாது.

குறளின் ‘சொற்பொருள்’ காண்பதிலும், தம் உரைக்கருத்தை நியாயப்படுத்தக் கருதி விளக்கங்களாலும் வேறுபட்டு நின்ற உரையாசிரியர்கள், ‘கல்லாதவன் காட்டும் கருத்து மிகச்சிறந்ததாக இருந்தபோதிலும் அறிவுடையார் ஏற்றுக்கொள்வதில்லை’ என்பதில் ஒத்து நின்றனர்.

ஆனால், இக்கருத்தும் பொருளும் வள்ளுவத்துக்கு உரியதாகுமா என்பதும் குறள் குறித்தது இதுவேயாமா என்பதும் (இப்போது) ஆய்வுக்குரிய ஒன்றாகிறது.

கல்லாதவன் கூற்றில் உலகோர் ஐயங்கொள்வது பொது இயல்பே. ஆயினும், அறிவுடையார் அதைக் கொள்ளார் என்பது சற்றே நெருடலாகத் தோற்றுகிறது. 

‘அறிவுடையார்’ எனும் குறள் குறிப்பைக் ‘கற்றறிந்தவர்’ என்பதாக மட்டுமே உரை யாசிரியர்கள், கொள்வதாகக் கருத வேண்டி யுள்ளது. அறிவதும் அறிவுடையனாதல் என்பதும் வேறு வேறு. கற்பதால் புதிய ஒன்றை அறிந்து கொள்கிறோம். ‘கற்று அறிந்ததைக்’ கடைப்பிடித்து ஒழுகும்போது மட்டிலுமே அவ்வறிவு ஒருவனின் உடைமையாகிறது. இது கருதியே, ‘கற்றபின் அதற்குத் தக நிற்க’ (80) என வலியுறுத்துகிறது வள்ளுவம்.

அறிய வேண்டுவதும் அறிந்து உணர்ந்ததைப் போற்றிக் கொள்ள வேண்டுவதும் சொல்லப்படு பொருளேயாமன்றிச்  சொல்பவர் யார் என்பதோ, கேட்பவர் யார் என்பதோ பொருட்டன்றாம். சொல்லப்பட்டதன் ஒண்மையும் உண்மையுமே உன்னுதற்குரியது என்பதைச் சுட்டுவதாக, ‘எப்பொருள் யார்வாய் யார்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (423) எனும் குறள் குறள் சுட்டுகிறது.

கல்லாதவரிடத்துக் காணப்பட்டது என்பதனா லேயே அது ஒட்பம் ஆகாது போகுமோ? மலர்ந்தவிடம் சேறு என்பது கொண்டு செந்தாமரை தன் சிறப்பை இழப்பதில்லையே. களர் நிலத்திலிருந்து பெறப்பட்டது என்பது கருதி உப்பை ஒதுக்குவார் எவரும் இல்லை என்பதும் எண்ணுக. 

பிறர் பயன்சொல் கோடலே மாசற்றார் கோள் (646) எனக் காட்டும் வள்ளுவம் நன்றானதொன்றைக் கொள்ளாமையைப் பரிதல் இல்லையென்க. அதனால், படுபாலால் வினை கொளல் (279) என்பதற்கிணங்க நலம் புரியும் தன்மையின எவரிடமிருந்து வரினும் அதைக் கொள்ளுதலே முறையாமன்றித் தள்ளுதல் அன்றாம்.

மேலும், பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு (424) என்பதில் ‘பிறர்’ என்றது அறிவுடையர் அல்லாதார் என்பதும் அது கல்லாதானையும் உள்ளடக்கியதே எனவாதலும் எண்ணுக. பின், ஒட்பமுடைய ஒன்றைக் கொள்ளாமற் போதல் ஏற்புடையதாகுமோ? நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) என்பது குறள். பின், கழிய நன்றாயினும் அதைக் கொள்ளார்  என்றது பொருந்துவதின்றாம்.

உரைகளின் போக்கு இவ்வாறிருக்க, இக்குறளின் கருத்தில் முரண் ஏற்பட்டது எதனால் அல்லது எவ்விதம் என்பது குறித்து இப்போது காண்போம்.

தினல் பொருட்டால் கொள்ளாது உலகு (256) என மணக்குடவர் கொண்டதைக் ‘கொல்லாது’ எனும் பாடமாக்கினார் பரிமேலழகர். பிறர் உரைகளில் உள்ள கூறுகளைச் சான்று காட்டலும் ஒப்புக் கூறுதலும் ஏலுமிடத்திலெல்லாம் இலக்கணக் குறிப்புகளைச் சுட்டிச் செல்வதும் பரிமேலழகரின் உரைச்சிறப்புகளில் குறிப்பிடத்தக்கனவாம். கொல்லாது உலகு எனத் தாம் கொண்ட பாட மாற்றத்திற்கான காரணம் மற்றும் சிறப்புக் குறித்து ஏதும் குறிக்காது அமைதி காத்தது ஏமாற்றத்துக்கு உரியதாகிறது.

பின்வந்த உரையாசிரியர்களுள் ஒருசிலர் கொள்ளாது எனவும், வேறுசிலர் கொல்லாது எனவும் இரு வேறான பாடம்கொண்டு உரை செய்வது  இன்றளவும்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அது போலவே இக்குறளிலும் அவ்வாறான பாட மாற்றம் நிகழ்ந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒட்பம் எனற்குக் கூரறிவு, அறிவுக் கூர்மை என்பது ஈண்டுக் குறிக்கப்பட்டது.

ஒள் - ஒள்பு. ஒட்பம் - கூர்மை - கூர்மை என்றது அறிவுக் கூர்மையை.

ஒள்ளியர் (714) - ஒள்ளியவர் (487) - கூர்மையர் (997) - கூர்த்த அறிவினர்.

அறிவு - பொதுநிலை. ஒட்பம் (ஒண்மை) - சிறப்பு நிலை.

ஒட்பம் என்பதற்கு ‘உலகம் தழுவிய பட்டறிவின் காரணமாக எதிர்பாராமல் தெறிக்கும் விவேகம் எனும் ஒரு கருத்தை முன்னிருத்தி, அதைக் கூர்மதி எனக் குறிக்கிறார் குசஆனந்தன். இதைத் ‘தற்செயலாகத்’ தோன்றுவது என்கிறார் பாவாணர். இவ்விருவரும், இவ்வுயரிய விவேகம்‘ ஒரோவழி கல்லாதவனிடம் தோன்றுவதுண்டாம் எனக் காட்டுவாராயினர். இது, கற்றறிந்தவர்க்கும் பொருந்துவதே.

இவை யிவ்வாறாகக்
கசடறக் கல்லாத மேற்கொண்டு ஒழுகல் வல்லதூஉம் ஐயம் தரும் (845) என்பதனால்தாம் கல்லாத ஒன்றைக் குறித்த ஓர் கூர்த்த கருத்தை அறிய நேர்ந்தக்கால் அது மிக நன்றாமெனினும் (ஆராயாமல்) அறிஞர்கள் கைக்கொள்ளுதல் இல்லையாம். அறிய  நேர்வது, பிறர்வாய்க் கேட்டறிதலும் தம் உள்ளத்தே ஒளிர்ந்த ஒன்றாதலுமாகிய இருவகைத்தானுமாம்.

நுட்பக் கருத்து எந்த ஒன்றையும் தாங்கற்ற நூலோடு (636) ஒப்பிட்டும் தம் பட்டறிவோடு உரசியும் அதன் உண்மையை உணர்ந்த பின்னரே கைக்கொள்வர். அதையும் உலக நடைக்கு ஒத்தவாறாக இருக்குமாறாற்றுவர் (637) என்பது கருத்து. இப்பண்பே கல்லாதவரிடமிருந்து கற்றவரை வேறுபடுத்திக் காட்டும்.              .               

‘எள்ளற்க யார்வாயின் நல்லுரையும்’ என்கிறது பழமொழி நானூறு. இக்குறட்பா, கல்லாதவரைப் பற்றி அறிவுடையார் கொண்டுள்ள மதிப்பீடு பற்றியதன்றாம். அறிவுடையார்தம் கருத்தின் திறம் பற்றியதாகும்.

கல்லாத  ஒட்பங் கழியநன் றாயினுங்        
கொள்ளா ரறிவுடை யார்  (குறள்404)
எனும்  பாடத்துக்குரியது.

அறிஞர் தாமே கற்றுணராத நுட்பமொன்றை (ஆராயாது) ஏற்றுக்கொள்வதில்லை என்பது கருத்தாம். ஆய்ந்துணராது எதனையும் ஏற்றுக் கொள்ளார் அறிவுடையோர்  என்றவாறு.

அதாவது  நூலறிவோடு தம்மின் நுண்ணறிவுங் கொண்டு தாம் உணராத ஒன்று எத்துணை ஒட்பமுடையதாய்த் தோன்றினும் அதை ஒப்புவதில்லை என்பதாம். எதனையும் ஆய்ந்தறியாமல் ஏற்றுக் கொள்வது அறிவுடையார் செயலாகாது என்றவாறு.

No comments:

Post a Comment