பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் இரண்டாம்
ஆண்டு தொடக்க விழாவில் பைந்தமிழ்ச் சோலையைப் பற்றிக் கவிஞர்கள் பொழிந்த கவிப்பொழிவு
1.
கவிஞர் சியாமளா ராஜசேகர்
பாமலரும் சோலையிது பைந்தமிழின் சோலை
பாவலர்மா வரதராசன் தோற்றுவித்த
சோலை!
தேமதுர மரபிலவர் பயிற்றுவிக்கும் சோலை
தீந்தமிழை முகநூலில் அலங்கரிக்கும்
சோலை!
நாமகளும் நனியழகாய் நடமாடும் சோலை
நற்றமிழாள் மகிழ்ச்சியுடன்
உறவாடும் சோலை!
பூமணத்தை விஞ்சிநிற்கும் பாமணத்தை நுகர்ந்தோர்
பூரிப்பில் மனமுவந்து
வாழ்த்துகின்ற சோலை !!
விருத்தங்கள் விளையாடத் திளைத்திருக்கும் நெஞ்சம்
வியக்கவைக்கும் சந்தத்தில்
வண்ணங்கள் கொஞ்சும் !
அருவியென வெண்பாக்கள் அமுதாகப் பொழியும்
அதில்நனைந்த உள்ளத்தில்
கவிபொங்கி வழியும் !
இருள்விலக்கும் தமிழ்க்கூடல் நினைத்தாலே இனிக்கும்
இணையில்லாச் சேவைகண்டு விழியிரண்டும் பனிக்கும் !
பெரும்பேறு பெற்றதனால் இணைந்தோமிச் சோலை !
பேரழகாய்ச் சூட்டிடுவோம்
யாப்பினிலே மாலை !!
பெருங்கவியாம் பாவலரின் வழிகாட்ட லோடு
பீடுநடை போடும்பைந் தமிழ்ச்சோலை
பாரில்!
திருவண்ணா மலையினிலும் தன்கிளையை
விரித்துச்
சிறப்பாக ஓராண்டை நிறைவுசெய்த
சோலை!
அருந்தமிழின் எழில்மரபைக் காப்பதேதன் பணியாய்
அரவிவேகா னந்தனிங்கே செயலாற்றும்
சோலை!
விருந்தாக மாதமொரு கவியரங்கம் நடத்தி
வெற்றிக்கு வித்திட்ட
திருவருணைச் சோலை!
பொறுப்போடு கற்பிக்கும் பயிலரங்கம்
உண்டு
போட்டிகளு முண்டிங்கே
விருதுகளும் உண்டு!
சிறப்பான ஏடுகளின் அறிமுகமு முண்டு
சிந்தைக்கு விருந்தாகச்
சிறப்புரையு முண்டு!
முறையோடு நெறிப்படுத்தும் முனைவரிவர் தொண்டால்
முத்தமிழும் மனங்குளிரும்
பேரவையைக் கண்டு!
குறைவின்றி இச்சோலை பணிசிறக்க வேண்டும்
குவலயமே வியக்குவண்ணம்
உயர்வடைய வேண்டும் !!
தேவைகளைக் கண்டுணர்ந்து புகட்டும்நற் றாயாய்
செந்தமிழைத் தெவிட்டாமல்
ஊட்டிவிடும் சோலை !
பாவகைகள் பலவற்றை ஆவலுடன் இங்கே
பாட்டறிந்த புலவோரும்
கேட்டறிந்து செல்வார் !
காவியமும் படைத்திடுவார் மரபறிந்த பின்னால்
கணினிவழிக் கனித்தமிழைக் கற்பிப்பார் பின்னாள்
!
பாவலரால் உருவான பைந்தமிழின் சோலை
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாண்டு வாழி !!
2.
கவிஞர் சொ.சாந்தி
கூரையில்லாக் கல்விச்சாலை
கூகிள்வழி முகநூலில்
பைந்தமிழைப் பாவலரும்
பயிற்றுவிப்பார் பகலிரவில்..!
வாவென்றே வரவேற்கும்
வந்தார்க்குத் தமிழ்வார்க்கும்
வயதிங்கே தடையில்லை
வளமையுடன் கற்பதற்கும்.!
உலகினையே ஒன்றுகூட்டி
இலக்கணங்கள் ஊட்டுகின்றார்
தலைக்கனங்கள் ஏதுமின்றி
தவமாய்த்தான் கற்கின்றோம்..!
எதுகையும் மோனையென்பார்
எங்கள்கை எழுதிப் பார்க்கும்
அடியென்பார் தளையென்பார் - தமிழ்க்
கொடியினிலே பாப்பூக்கும்..!
தமிழ்வித்தை கற்றறிய
தமிழ்வித்தை ஊன்றுகிறார்
செழித்தோங்கப் பாவளர்போம் - பாவலர்
வழித்தோன்றல் நாங்களென்போம்..!
புத்தகங்கள் தேவையில்லை
புத்தியொன்றே போதுமென்பார்
வல்லமையில் ஆசானாம்
வரதராசனவர் வாழியவே..!
"யூ"குழாயில் கொட்டுந்தமிழ்
வலைத்தளத்தின் இணைப்பினிலே
குவலயமே அருந்துது காண்
இலக்கணமாய் யாத்ததையே..!
வகைவகையாய் இலக்கணத்தில்
வாசனையாய்த் தமிழ்ப்பூக்கள்
எடுத்தெடுத்துக் கொடுக்கின்றார்
தொடுக்கின்றோம் பாமாலை..!
எங்கள் குரு பாவலர்க்கு
தட்சணையாம் எம்பாக்கள்
வணங்குகிறோம் வாழ்த்துகிறோம்
வாழ்ந்திடுவீர் வையமுடன்..!
3.
கவிஞர் அ.ஜெ. அமலா
கலையாத கனவுகளாய்த்
தொடங்கிய
என்
கன்னித் தமிழ்ப் பயணம்
கன்னி விடாமல்
காத்திடும் அரணாய் - நம்
பைந்தமிழ்ச்சோலை
எனக்குப் பிடித்த பரிதியாய்
என்னை எழுதச் சொல்லி
என் தமிழ்
சுடர்விட ஆரம்பித்தது
சொல்லினியன் ஐயா முன்.
சங்க காலக் காதலிலும்
எங்கள் காலக் காதலிலும்
கவியின்பம் கண்டோம்
தமிழகழ்வன் ஐயா தலைமையில்.
காதலாய் மட்டுமல்ல
கருணையுடனும்
கவி சமைத்திட
மனிதம் விதைப்போம் எனக்
களமிறங்கிக் கரங்கோர்த்துக்
கசியும் கண்களுடன் - நம்
கவிஞர்கள்.
4.
கவிஞர் செஞ்சி அ.சிவநாதன்
அன்பு 'மழலை' 'பைந்தமிழ்ச் சோலையே'
அகவை இரண்டைத் தொட்டு விட்டாயே!
இன்று... உனக்கு இனிய 'பிறந்தநாள்' விழா
இனிக்கும் தமிழுக்கு இன்பத் திருவிழா
'தனித்துவம்' கொண்ட 'தங்கத்' திருவிழா
தத்தித் தவழ்ந்த 'பைந்தமிழ்ச்' சோலையாம்
தித்திக்கும் மொழிபேசி நடையும் பயின்றதாம்
'சோலை' எனில் பசுமையும் உண்டு!
பைந்தமிழ் நீயும் பசுமை அல்லவா?
நாவினிக்கக் கவிதைபாட நாங்கள் வந்தோம்...
பாவினிக்கச் செவிமடுக்க நீங்கள் வந்தீர்!
சோலைக் குயில்களாய்ச் சான்றோரும் கவிஞரும்
காலைப் பொழுதினில் கானம்பாட வந்திட்டோம்
அறிஞர் ஆன்றோர் போற்றுஞ் சோலை
அதுவே இன்பப் பைந்தமிழ்ச் சோலை
விவேகமும் வீரியமும் கொண்ட விவேகானந்தனே
வீறுநடை போட்டுச் சாதனை படைத்திட்டாயே
மரபுமாமணி பைந்தமிழரசு
பாவலர் வரதராசனின்
பைந்தமிழ்ச்சோலை சென்னைவிழா
சிறக்கச் சிறகடித்துப் பறந்தாயே!
பாடும் பைங்கிளியாய்ப் பைந்தமிழ்ச்சோலை
ஆடும் மயிலழகாய்ப் பைந்தமிழ்ச்சோலை
ஓடும் நீரோடையாய்ப் பைந்தமிழ்ச்சோலை
கூடும் கவிச்சங்கமமாய்ப் பைந்தமிழ்ச்சோலை
பைந்தமிழ்ச் சோலையில் இணைந்திட வாரீர்
செந்தமிழ்ச் சான்றோராய் உயர்ந்து நின்றிடுவீர்
5.
கவிஞர் தமிழகழ்வன்
தமிழ் வாழ்த்து
மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி! 1
அவையடக்கம்
நன்கவி நற்கவி நாடியோர் முன்பென்
புன்கவி புகுமெனப் புகுந்தனன்; புலவோர்
இன்கவி இயற்றுவர்; எளிதினில் இயலா(து)
என்கவி இயற்றுவன்? எனைப்பொறுத் தருள்க 2
பைந்தமிழ்ச் சோலை
தமிழண்டா தமிழண்டா என்று சொல்வார்
தமிழ்மொழியை அண்டாவில் தூக்கிப்
போட்டுத்
தமிழ்வளர்ப்போம் தமிழ்வளர்ப்போம் என்று சொல்லும்
தமிழறிஞர் பலருண்டு தமிழ்நன்
னாட்டில்
அமிழ்தான தமிழ்மொழியின் வளமை யான
அடுக்கடுக்காய்க் காய்நகர்த்தி
ஆடும் ஆட்டம்
இமைப்பதுவும் நொடிப்பதுவும் கணக்கா கும்மே
இதையறியான் எங்ஙனந்தான் தமிழ்வளர்ப்பான் 3
எழுத்தசைந்து சீராகித் தளைந்து நிற்கும்
எண்ணியெண்ணி அடிநிற்கும்
தொடுத்த மாலை
கழுத்துக்குப் புகழ்சேர்க்கும் கவினைச் சேர்க்கும்
கணக்கறியா தியற்றுவது கவிதை
யாமோ?
பழுத்ததமிழ் பாதைமாறிப் போதல் நன்றோ?
பாக்கள்ளைக் குடிப்பதற்குப்
பணம்வேண் டும்மோ?
விழுவதுவோ? வீணரெனத் திரிதல் நன்றோ?
விருப்புற்று மரபினிலே
கவிதை செய்வோம் 4
எனவெழுந்த பைந்தமிழச் சோலை இஃதே
எழிலாகப் பாவியற்றப் பயிற்சி
தந்து
கனவுகளை நிறைவேற்றும் செம்மை செய்யும்
கடிதினிலே பாட்டியற்ற வைக்கும்
சந்தம்
மனத்தினிலே பதிப்பிக்கும் வண்ணப் பாட்டு
மனம்பொருந்தப் பாடவைக்கும்
மகிழ்ச்சி கூட்டும்
தனனதன தானான தடங்க லின்றித்
தந்துசுவை கூட்டுமுயிர்
வாழ்வி னுக்கே 5
வாய்க்க ரும்பது வாய்தவக் கோளது
வாய்த்தி கழ்ந்திரு மாமழை மாமலை
வாய்க்கொ ழுந்தது மாமணி வாய்த்திரு
வாய்ச்சிந் துந்தமிழ் வானெனுஞ் சோலையே! 6
நின்றது நெஞ்சினில் நேயம்; விட்டெனைச்
சென்றது துயர்வழித் தேங்கல்; புலவரின்
மன்றினில் நிற்குமிம் மாயம் செய்தது
கன்றுளங் காட்டிய காவின் இனிமையே 7
இனியன வாகிய ஈயுஞ் சோலையே
நனிவளர் செம்மையை நல்குஞ் சோலையே
பனிநுனி நெடும்பனை பார்க்கும் சோலையே
தனித்திறம் கொண்டுளஞ் சாரும் சோலையே 8
பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மாலை
பார்ப்பவர் யாரையும் ஈர்க்கும்
ஐந்திலக் கணத்தின் அகத்தினை யெளிதில்
அறியநல் உய்வழி காட்டும்
நைந்துவி டாது செய்யுளின் திறத்தை
நானிலத் துக்குணர்த் தும்மே
பைந்தமிழ்ச் சோறு பகிர்ந்துணு மாறு
பண்பொடு படைத்துயர் வோமே! 9
நாடு நெஞ்சினை நாடிவி ரைந்தரு
நாவில் நேர்நிரை நாட்டியம்
ஆடுயர்
சூடு பாமலர் சுந்தரத் தேனிலா
சுற்றும் பூமியில் கால்பட
வேநிலார்
வீடு பேறளி வித்தக மாமறை
விந்தைப் பேரொளிப் பைந்தமி
ழாமறை
காடு; செய்யுளச் செய்யுடம் சோலையே
கன்று போலுளம் கொண்டவன் மாலையே! 10
சோலையை ஆற்றுப்படுத்தல்
நற்றமிழ்ப்பாச் சுமந்துவரும் நல்லுள்ளத் தென்றலிடம்
"பொற்றமிழில் பாட்டிசைக்கும் புலவன்யார்?" எனக்கேட்டேன்
"அற்றமிலாப் பைந்தமிழின் சோலையென ஒன்றுண்டு
சிற்றுளியாய் வந்தாரும் சிறப்பாகப் பாவடிக்கக்
கற்பிக்கும் பெருஞ்செயலில் கனிவுதனைக் கனியாக்கி
நற்றுணையாய் நிற்கின்ற நல்லதமிழ்ச் சோலையிலே
கற்றுவரும் கனியாகக் கவிஞர்கள் பலருண்டு
முற்றுமுணர்ந் தாயாநீ முகிழ்ப்பவெலாம் எங்கிருந்து?" 11
பைந்தமிழ்ச்சோலை வாழ்த்து
நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே! 12
மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே 13
காவலர் பூமி வாழ்க கதிரவன் மதியம் வாழ்க
நாவளர் சொற்கள் வாழ்க நகையுளங் கற்க வாழ்க
காவளர் கவிஞர் வாழ்க கனிந்துள கவிஞர் வாழ்க
பாவலர் மாலை வாழ்க பைந்தமிழ்ச் சோலை வாழ்க 14
No comments:
Post a Comment