'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

நடுப்பக்க நயம்


மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

நற்றிணை காட்டும் நயத்தகு உறவு

அதுவொரு இனிமையான மாலை நேரம். இருள் கவிந்தும் கவியாததுமாகிய பொன்மாலைப் பொழுது. பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தத்தம் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. கொண்டு வந்த இரையைத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டும் "கீச்..கீச்...” ஒலிபரப்பிய அந்தப் புன்னை மரத்தின்கீழ் காதலர் இருவர் தனிமையில் பேசிக் களிப்பெய்திக் கிடந்தனர். காதலர் சந்தித்தால் நேரம் போவதா தெரியும்? இந்த உலகமே நாம் இருவர் மட்டும்தான் என்ற நினைப்பில் கிடந்த அப்போழ்து காதலனின் கைகள் தலைவியைத் தழுவப் போந்தன.

சட்டென்று விலகினாள் அவள். மீண்டும் அவன் முயன்றான்... மீண்டும் அவள் விலகக் கடுஞ்சினமுற்ற தலைவன், "ஏன், நான் தொட்டால் என்ன? இதற்குமுன் பலமுறை தழுவியிருக்கிறேனே... இப்போது மட்டும் என்னவாம்?" என்று கேட்டான். தலைவியோ, "எனக்கு முன் பிறந்த என் அக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன் இவ்வாறிருக்க நாணமாயிருக்கிறது." என்றாள்.

தலைவன் சுற்றுமுற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் அதோ அந்த வேம்பின் நிழலில் தலைவியுடன் வந்திருந்த தோழி மட்டுமேயிருக்க மற்றபடி ஒருவருமேயில்லை. தலைவனுக்குச் சினம் மிகுந்தது.

"பொய்யுரைக்கிறாயா? " என்றான்.
"இல்லை... உண்மையைத்தான் உரைக்கிறேன்" என்றாள்.
"இங்கு நம்மையும் உன் தோழியையும் தவிர வேறொருவருமே இல்லை" என்றான்.
"என் தமக்கையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்" என்றாள் அவள்.

இப்போது தலைவனுக்குச் சினம் விலகி ஊடலேற்படத் திரும்பியமர்கிறான். தலைவியோ அவனைப் பார்த்தபடி... ஒருவிதத் தவிப்புடன் அமர்ந்திருக்க... தொலைவிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த தோழி, 'ஏதோ ஊடலுண்டாகியிருக்கிறது' என்பதை ஒருவாறு ஓர்ந்தவளாக அவர்களிடத்தே சென்றாள்.

"என்னாயிற்று?" தோழி.
"அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும்" தலைவன்.
"அப்படியேதுமில்லை. நம் அக்கை பார்ப்பதால் விலகினேன். அவர் தவறாகப் புரிந்துகொண்டார்" தலைவி.

தோழிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. மென்மையாக நகைத்தவாறே தலைவனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

"யாழில் புதிய பண் கூட்டிப் பாணர் எழுப்பும் விளரி இசை போல் வலம்புரிச் சங்குகள் ஒலி எழுப்பும் நெய்தற் றுறையின் தலைவனே! எங்கள் அன்னை தன் சிறுவயதில் தோழியருடன் விளையாடும்போது மணலுக்குள் புன்னங்கொட்டையை மறைத்து விளையாடும் போது அதனை எடுக்காமல் மறந்துவிட்டுச் சென்றுவிட அது முளைத்துக்கொண்டது. பின்னர் எமக்கு அதைக் காட்டிய எம் அன்னை "அது உமக்கு நுவ்வை (உன்னுடன் பிறந்தவள்) ஆகும்" என்று சொன்னாள். எனவே எமக்கு உண்ணக் கொடுத்த பாலை அதற்கு ஊற்றி வளர்த்து வந்தோம். இப்போது அது மரமாக நிற்கிறது. தலைவ! அதன்கீழ் உன்னோடு சிரித்துக்கொண்டு விளையாட வெட்கமாக இருக்கிறது. (எம் உடன்பிறந்தவள் பார்த்துக்கொண்டிருக்கும் போது உன்னோடு எப்படி உறவாட முடியும்?)" என்கிறாள் தோழி.

"உயர்ந்த இதன் நிழலில் பிறவும் பார்த்துக் கொண்டிருக்கும்போது பட்டப் பகலில் நீர் என்னைத் தழுவ முனைவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது." தலைவி தலைவனிடம் இப்படிக் கூறுகிறாள்.

அடடா...! என்னே உயர்ந்த உறவு! அஃறிணையான மரத்தைத் தன் அக்கையாகக் கொள்ளும் மனப்பாங்கு எத்துணை உயர்வானது. அஃறிணையாயினும் அவற்றிற்கும் உணர்வுண்டென்று சொன்ன தொல்காப்பியப் பாட்டன் வழியில் வந்தவரல்லவா நாம்.!? அதை மெய்ப்பிக்கும் காட்சியன்றோயிது? மரப்பாச்சி பொம்மைக்கும் மாராப்புப் போட்டு விளையாடக் கற்றுக் கொடுத்ததல்லவா நம்மினம்? பெற்றவன் தீண்டலும் முற்றும் வரையே (பூப்பருவம்) என்கிறதே நம் பண்பாடு.

இத்தகைய பண்பாட்டுத் தொட்டிலில் வந்து பிறக்க "என்ன தவம் நாம் செய்தோம்?" ஆகா... ஆகா... என்று அகமகிழ்ந்து கிடப்போம்... அன்பியைந்த வாழ்வை அகவிலக்கணத்தை மீறாது காப்போம்.

இதோ அந்த உறவாய் இயைந்த உணர்வு பாடல்...

(நெய்தல் திணை: பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடுமாம். ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

விளையாடு ஆயமொடு வெண்மண லழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்
றன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமா ருளவே!
(நற்.172)  

2 comments: