பைந்தமிழ்ப் பாமணி ஆசுகவி
இல. சுந்தர ராசன்
வீரத் திருவிழிப் பார்வை நயந்தெனை
வேக முறச்செய லேற்றி மொழியினில்
வித்தை கொடுத்திவன் கத்தும்
மழலையைக்
கேட்டு ரசிப்பவளாம்! அதி
காரத் திமிரெனை அச்ச முறச்செயும்
போது நொடியினில் கூட இருந்திவன்
கேடு விலகிடக் கீழ்மை நொறுங்கிடக்
கண்டு சிரிப்பவளாம்!
சோரத் தனங்களைச் சொல்லி அடிப்பவள்!
சீறுந் துயர்களை வெட்டி
யழிப்பவள்!
ஏறுந் தலைக்கனம் எட்டி உதைப்பவள்!
என்றும் இருப்பவளாம்! ஒரு
நேரம் தனிலெனைக் கட்டி யணைப்பவள்
நேருஞ் சிலபொழு தெட்டி யிருந்திடப்
பாலன் தனிமையில் பாடு படுவதைப்
பார்த்து மகிழ்பவளாம்!
யாதவன் சோதரி காளி - புரி
யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
திங்கள் அணிந்த ஒய்யாரி!
சுற்றிப் பிணக்குவை பற்றி எரிந்திடத்
தக்கத் தகத்திமி தாள நடத்துடன்
சொக்கப் பனையென மக்க ளிடர்களைச்
சுட்டுப் பொசுக்கிடுவாள்!
விதி
முற்றிப் பழவினை முட்டித் தளநமைக்
கட்டி அவளடிக் காவென் றலறிடத்
துட்ட வினைகளை பட்பட் படவென
வெட்டி எறிந்திடுவாள்!
பற்றைத் துறந்தவர் பற்றி இருப்பவள்!
கொட்டி வெளியினிற் கோடி
யுருண்டைகள்
சுற்றிச் சுழன்றிட விட்டுச்
சுகிப்பவள்!
அட்ட புயகரத்தாள்!தமைக்
குற்ற மிழைத்திடின் கூடப் பொறுப்பவள்!
பற்று மடியவர்க் கூறு நினைந்திடின்
ஒற்றைக் கணத்தினிற் றோன்றி
யவர்தமை
முற்று மழித்திடுவாள்!
யாதவன் சோதரி காளி - புரி
யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
திங்கள் அணிந்த ஒய்யாரி!
மோகத் தமிழ்பவர் மோக மவள்நகை!
யோகத் திருப்பவர் யோக மவட்கொடை
சோகத் துடைபவர் சோகந் துடைத்தொரு
வேகங் கொடுப்பவளாம்! வெள்ளை
நாகத் தணையினில் நீளத் துயில்பயில்
நீலத் திறையவன் பூமித் தமக்கையாய்
யோக மாயாவெனும் பேரில் புவியினில்
வந்து மறைந்தவளாம்!
பாகத் திருந்துநல் யோகத் திருச்சிவ
நாத னருட்செயல் யாவுந் தடையற்
மேவி நுழைந்திடுஞ் சக்தி
யெனவுடன்
கூட இருப்பவளாம்! கடுந்
தாகத் தினில்மழை கோடை வெயிற்குடை
யாக அடியவர்க் காக விரைவினில்
ஓடி அருள்தர வேக முடன்சி(ம்)ம
மேறி வருபவளாம்!
யாதவன் சோதரி காளி - புரி
யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
திங்கள் அணிந்த ஒய்யாரி!
No comments:
Post a Comment