'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

குறித்தபடி தொடுத்த பாடல்கள்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1.    கவிஞர் வெ. நாதமணி

அமிழாதா தமிழென்று பகைவர் நெஞ்சில்
   அறமில்லாக் கோட்டைகளைக் கட்டு கின்றார்
இமைகளினால் விழியிரண்டை இறுக்கிக் கொண்டால்
   எழுங்கதிரோன் இருளாகி இறந்தா போவான்?
தமிழுக்கோர் இழுக்கிழைக்க எவரால் முடியும்?
   தமிழ்நீரில் எரிதழலும் தானாய் மடியும்!
நிமிர்ந்தெழுந்தே தமிழினத்தார் ஒன்றாய்க் கூட
   நீசரெலாம் நில்லாமல் போவார் அந்தோ!


2.    கவிஞர் பொன். இனியன், திருமுல்லைவாயில்

அமிழாதா தமிழென்று பகைவர் நெஞ்சில்
   அறமில்லாக் கோட்டைகளைக் கட்டு கின்றார்
தமிழேதான் தன்மொழிக்கும் கொடைய ளித்த
   தகவினைத்தா மறிகல்லா மூடர் தாமே
விழிமூடிக் கொண்டதொரு பூனை தன்னால்
   விரிஞாலத் திருள்சூழ்ந்த தாக வெண்ணும்
அழுகுணிக ளாயிரவ ராயி ருந்தும்
   அங்கையினால் ஆதவனை மறைத்தற் காமோ


3.    கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

அமிழாதா தமிழென்று பகைவர் நெஞ்சில்
   அறமில்லாக் கோட்டைகளைக் கட்டு கின்றார்
குமிழ்தானே உடைப்போமே என்றே எண்ணிக்
   குதுகலங்கொண் டலைகின்றார் குறைகள் தீர்க்கத்
தமிழ்தானே வரவேண்டும் அவளே நந்தாய்!
   தமிழருக்கும் பிறருக்கும் நன்மை சேர்க்கும்
தமிழெங்கள் வளமிக்க உள்ளம் உற்ற
   தனித்தியங்கும் தீயாவாள் தாங்கி நிற்பாள்

No comments:

Post a Comment