'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

அருவி அந்தாதி



 கவிஞர்  இரா.சேது பாலசுப்பிரமணியன்

சருகும் விழுந்தால் சரியுமென் நெஞ்சம்
உருகும் இரங்கிப் புலம்பும் - பெருகும்
புதுவெள்ளம் ஓட்டநீ போய்விழுந்து ஆர்ப்பின்
அதுவுள்ளம் ஊட்டுங் களிப்பு                   1

களிப்பூட்டும் உன்னெழிற் காட்சி விழிக்குன்
வெளித்தோற்றம் முற்றிலும் வெண்மை - அளித்தாய்
பெருங்கல் மலையின் பெயர்ந்து விழும்மெல் 
கருக்கொண்ட பஞ்சுமலை காண்                2

காணும் நொடிதொறும் காட்சி புதிதுநீ
பூணும் உடைநீர்த் துளிபுதிது - ஆணிப்பொன்
நேரில்லை ஆழ்கடல் முத்தும் இணையில்லை
பாரில்நீ என்றும் புதிது                         3

புதிதாய்ப் பிறந்த புலமை எனக்குள்
குதித்தே அடிக்குது கூத்து - மதியொளி
என்னும் உளியால் வடித்தாய் மிளிர்ந்தது
பொன்னென என்முன் புலம்                    4

புலம்சேர எண்ணிப் பொழிந்தாய்நீ காற்றில்
அலைந்தாடும் காட்சி அழகு - நலத்தொடு
மண்ணுயி ரென்றும் வழங்க  நடந்தனை
விண்ணுயர் தன்னின் விழுந்து                  5             

விழுந்தால் உடையா விழுப்பம் உடையாய்
எழுந்தாய் உடனே இயல்பாய் - உழந்து
துயருள் அழுந்தித் துவளா ஒழுக்கம் 
பயிலும் மனமுனைப் பார்த்து                  6

பார்த்தால் ஒருநொடி பாலெனக் கண்கொள்ளப் 
போர்த்தாய் வெளுத்த புனலுடை - தீர்ப்பாயென்
வேட்கை தணிவெயில் வெக்கையுன் தண்குடை
ஆட்சி தவறாமல் ஆற்று                       7

ஆற்றுநீர் தந்தாய் அருட்கொடையாய் உள்ளமுன்
தோற்றுவாய் காணத் துயர்மறக்கும் - சாற்றினாய்
வாழ்க்கையின் மெய்ப்பொருள் வானுயர ஓங்கினும்
தாழ்குழியில் வீழ்ந்துமில்லை தாழ்வு            8

தாழ்ச்சி அடையா தகைசால் உனக்குநீர்
வீழ்ச்சி பெயரா வியந்துநின்றேன் - ஆழ்ச்சியுற்றேன்
உன்பெருமை கண்முன்னே ஓங்க எழுச்சிபெற்றேன்
என்சிறுமை நீங்கியது இன்று                   9

இன்றி அமையா இருநிலத்து உன்கொடை 
என்றும் உயிர்கள் இயைந்தொழுக - குன்றா
இளமை எனதுடல் எய்தும்நீ தொட்டால்
தளிர்த்தெழும் மீண்டும் சருகு                  10

No comments:

Post a Comment