'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

நடுப்பக்க நயம்



அழுகையிலும் இன்பம் - பாவலர் மா.வரதராசன்



சுப்ரதீபக் கவிராயர்… பெயரைப் பார்த்தாலே சிற்றிலக்கியக் காலத்துப் புலவர் என்றுணரலாம்.

இக்காலத்தைச் சேர்ந்த புவவர் தம் ஆற்றலைச் சொன்னயத்திலும், பொருணயத்திலும் மட்டுமின்றி, உத்திகளாற் பாடற்சிறப்பை உய்த்துணரச் செய்வதிலும், நுட்பங்களால் புதிய இலக்கணத்தைப் படைப்பதிலும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினர். அவ்வாறு நுட்பத்தைப் புகுத்திப் பாட்டைச் சுவைக்கும் முறையையும், புதிய நெறியையும் வகுத்த ஒருபாடலை இன்று காணலாம்.

தலைவி வருத்தமாக அமர்ந்திருக்கிறாள். இதைக்கண்ட தோழி, “என்னாயிற்று!? ஏன் கவலையுடன் இருக்கிறாய்?” என்று கேட்கிறாள்.

தலைவி, “அவர் முன்புபோல் என்னிடம் அன்பாக இருப்பதில்லை. என்னைக் கண்டாலே சினந்து கொள்கிறார். கடிந்து பேசுகிறார்” என்று தன் கவலைக்கான காரணத்தைக் கூறுகிறாள்.

“ஏன் உனக்கென்னவாம்! இனிக்க இனிக்கப் பழகியவர்தானே? இப்போது என்னவாயிற்றாம்?” என்ற தோழியின் உசாவலில் தலைவிக்குக் கண்களில் கண்ணீர் சேர்ந்து, தொண்டைக் கமறலுடன் குரலும் உடைந்துபோய், அந்த அழுகையினூடே…

“மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டி இளமை வனப்புடன் நானிருந்தபோது அவருக்குக் கரும்பைப் போல் இனித்தேன். மணமாகிக் குழந்தைகள் பெற்றதால் என் மார்பு தளர்ந்து, உடலில் வனப்பும் குறைந்து போனதால் இன்று அவருக்கு நான் வேம்பாகக் கசந்து போனேன். கண்களில் நஞ்சு கொண்டு கவர்ந்திழுக்கும் பரத்தையர் இன்று அவருக்குக் கரும்பைப் போன்று இனிக்கின்றனர்… அதனால் இப்போதெல்லாம என்னைக் 'கண்டாலே கசக்கிறது அ…வ…ரு...க்...கு’…" என்று அழுகையினூடே சொல்லிக் கொண்டுவந்தவளுக்கு இறுதியில் ‘கண்டாலே கசக்கிறது’ என்னும்போது அழுகை பீறிட்டுக் கிளம்புகிறது. அவருக்கு என்று சொல்லி முடிக்கும்போது சொற்கள் முழுமை பெறாமல் குமுறி அழுகிறாள்.

ஆம்… முழுமை பெறாத அந்தச் சொல் வெண்பாவின் ஈற்றுச்சீராக வரவேண்டியது. ஆனால் வரவில்லை... பாடலைப் படியுங்கள்… அந்தத் தலைவியாக உங்களை வைத்துக்கொண்டு அழுதுகொண்டே பாடலைப் படியுங்கள். கவிராயர் என்ன நுட்பத்தை வைத்திருக்கிறார்… புதிதாக எந்த நெறியை வகுத்திருக்கிறார் என்பது விளங்கும்.

கச்சிருக்கும் போது கரும்பானேன் கைக்குழந்தை
வச்சிருக் கும்போது வேம்பானேன் - நச்சிருக்கும்
கண்ணார் கரும்பானார் காணவும்நான் வேம்பானேன்
அண்ணா மலையரசுக் கு.

என்ன நுட்பம் என்று விளங்குகிறதா?

அவலச்சுவையாக அமைந்த இப்பாடலில், தலைவியின் துன்பநிலையால் ஏற்பட்ட அழுகை யொலியால் பாடலின் ஈற்றுச் சீராக ஒலிக்க வேண்டிய 'கு' என்னும் சீர் ஒலிக்காமல் அழுகையாக விசும்பலாக மட்டுமே கேட்கிறதா? ஆம்… அதேதான்… நுட்பமும்.!

வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியவேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. தனிக்குறில் ஈற்றுச்சீராக வாரா என்பது எழுதப்படா விதி.

மேற்கண்ட பாடலில் ‘கு’ என்ற குறிலை… அதுவும் குற்றியலுகர எழுத்தையன்றோ இந்தப் புலவர் வைத்திருக்கிறார்…! குற்றியலுகரம் அரை மாத்திரை யென்பதால் அது அலகுபெறாது. அந்த எழுத்தை வைத்துப் பாடலின் அவலச்சுவை நன்கு புலப்படும் ஈற்றுச் சீராக வைத்து, அழுகையின் காரணமாக அந்த எழுத்தே தோன்றாதபடி அதைக் குற்றியலுகரமாக வைத்து அழுகையிலும் நமக்கு இன்பத்தைக் கொடுத்த புலவரின் ஆற்றலை வியக்காமலிருக்க முடியுமா?

புலவர் நினைத்திருந்தால் ‘அண்ணா மலையர சுக்கு’ என ஈற்றடியை அமைத்திருக்கலாம். ஆனால் பாடலின் அவலச்சுவை நன்றாகப் புலப்பட வேண்டும் என்பதற்காகவே மேற்கண்டவாறு தனிக்குறிலாகக், குற்றியலுகரமாக வைத்துப் பொருண்மை வேண்டின் விதிகள் புதிதாக அமையலாம் என்ற நெறியைக் காட்டுகிறார்.

No comments:

Post a Comment