முனைவர் த. உமாராணி
ஓர் அழகான பொருளைப் பார்க்கிறோம் என்றால்
அதுமட்டுமே அழகாக இருக்கும். அதை எடுப்பவரை அழகாக மாற்றாது. ஆனால், இலக்கியம் அப்படியல்ல!
அழகான இலக்கியத்தைப் படிப்போர் மனத்தில் இனிமையைத் தந்து, அவரை அழகு மிளிரச் செய்யும்
ஆற்றலைப் பெற்றது.
நாம் ஒருவரைச் சந்திப்போம் என்ற எண்ணத்தில்
இருந்தால் பிரிவு துன்பத்தைத் தந்தாலும் மனம் தேற்றல் அடையும். மீண்டும் பார்க்க மாட்டோம்
என்ற நிலையிலிருந்தால் அது கொடுமையானது. அந்த வருத்தத்தில் தலைவி தலைவனின் தூதுவர்களிடம்
கூறுவதாக அமைந்த பாடலை அறிவோம்.
இருஞ்சாய் அன்ன செருந்தியோடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்துமல ரன்ன வென் கண்அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே?
‘தண்டாங்கோரைப் புல்லோடு, நெட்டிக் கோரைப் புல்லும், நாணலும், கரும்பினைப் போல் அசைகின்ற வயலை உடைய ஊரன், பிரியமாட்டேன் என்று கூறிய பின், மலர்களைப் போல் உள்ள என் கண்கள் அழுமாறு என்னைப் பிரிந்து விட்டான்’ என்று மனமுருகி அழும் தலைவியின் கண்ணீர் வறண்ட நிலமானது விண்ணைப் பார்த்து வெதும்பும் காட்சியின் தோற்றமாக வெளிப்படுகிறது.
இந்நிலைக்கு இணையான குறள்
கதுமெனத் தானோக்கி தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து
நோக்கி இன்று தாமே அழுகின்றன. இது நகைக்கத்தக்க தன்மை உடையது என்று தலைவி பாடுவதாக
உள்ளது. இத்தகைய பிரிவானது ஊரிலுள்ளோர் தன்னைப் பார்த்து நகைப்பார்கள் என்ற கருத்தையும்
கொண்டுள்ளது.
கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ?
காலம் இனிமேல் நம்மை
ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?
என்ற வரிகளானது, மீண்டும் சந்திப்போமா
என்று ஆச்சரியத்தை முன்வைத்து எல்லையில்லாச் சோகத்தில் ஆழ்த்தும் பெண்ணின் நிலை உணரத்தக்கதாகும்.
No comments:
Post a Comment