'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

தெய்வப் புலவன் மும்மணிமாலை


பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர. விவேகானந்தன்



பகுதி – 2

ஊக்க முளத்தி னுரைக லெனவுரைத்தான்
ஆக்க மதன்வழி யாக்கிவைத்தான் - தேக்கமில்லா
மாண்புரைத்தான் தேவன் மணிமொழி தேமொழியாம்
தீண்டும் மனத்தில் தெளிவு!                  16

தேர்ந்தளித்தான்
குளிர்ந்த மொழியில் குவலய இன்பம்
குழைத்தளித்தான்
ஒளியாய் வளியாய் உயிரில் நிறைந்தே
உரமளித்தான்
பளிங்கென மின்னிடும் பண்பை யுரைத்தான்
பணிகுவமே!                        17

ஏத்தும் பொருளென எங்கும் நிறைந்தவன்
வாழும் முறையை வழங்கினான்
சூழுங் கொள்கைக் குன்றவன் போற்றுவமே!  18

போற்றுகின்ற இல்லறத்தைப் பொன்போல் பொழிந்திட்டான்
ஆற்றுகின்ற நற்சொல் அளித்திட்டான் - தேற்றி
நமைக்காக்கும் தேங்குறளை நம்முள் விதைத்தான்
இமைபோலுங் காப்போ மினி!               19

இகழ்ந்துரைத்தான்
தனியெனும் வாய்ச்சொல் தழைத்திட நாளும்
தகையுரைத்தான்
கனியெனும் வாழ்வினைக் கண்முன் விளிக்குங்
கருணைசெய்தான்
பனியென வின்னல் மறைந்திடச் செய்தான்
பசுமையிலே!                       20

ஏற்ற நீரின் ஏற்றமே நீட்டமாம்
ஏற்றிடு முள்ள வெழுச்சியே உயர்வாம்
நாளு முண்மை யுரைத்தான்
தாளைப் பணிவோம்! தனித்திருப் போமே!    21

தனித்திருப்போம் இன்னல் தடையுடைப்போ மென்றும்
இனித்திருப்போம் வள்ளுவ னின்பம் - நனிந்திருப்போம்
இல்லற மோங்க இயம்பும் நெறியினில்
நல்லறம் செய்வோம் நடந்து!                 22

நடந்திடுஞ் செய்கையில் நல்வினை கூடும்
நலமுரைத்தான்
விடமெனும் நட்பினை விட்டே ஒழிக்கும்
விதியுரைத்தான்
திடமெனும் அன்பில் திளைக்கும் வழியைத்
தெளிந்துரைத்தான்
கடனென என்றும் அவன்வழி செல்வோம்!
கனிகுவமே!                         23

கனியு மின்பம் கவிக்குறள் கற்றால்
பனிபோல் மறையும் பகைமை முற்றாய்
அறிவி னாக்க மறிவோம்
செறிவை மனத்துள் சேர்த்தே உயர்வமே!      24

உயர்வெனும் நோக்க முளத்தினில் வைத்தான்
அயர்வினை நீக்கினான் ஆங்கே - மயக்கம்
தெளிய மதுவெறுத்தான் தெண்ணீர் வடிவாய்க்
களிப்பைக் கொடுத்தான்  களைந்து!           25

களைந்த வுளத்தைக் கலையென வாக்குங்
கவின்குறளன்
விளைந்த கதிராய் விளைவினைக் கூட்டும்
வியன்குறளன்
அமுதமவன்
உளத்தை யுயர்த்திடு முண்மை மறவன்
உணருவமே!                       26

உணர்வா யொன்றி யுறைந்தவன் மாந்தர்
குணத்துள் மலையாய்க் குவிந்தவன் என்றும்
உலகோர் நெஞ்சுள் உறைபவன்
குலத்தின் காப்பவன் கூடி யொளிர்வமே!     27

ஒளிருஞ் சுடராய் ஒளிர்பவன்! ஓங்கும்
தளிரென ஞாலில் தனித்து - மிளிர்பவன்
கண்ணாம் கவிதைக் கருத்தவன் வாழ்வினில்
வண்ணம் தெளிக்கும் வனப்பு!               28

வனப்பாய்ப் பலவகை வண்மையைப் பாட்டில்
வழங்கியவன்
வனமென் னுளத்தினில் வாரி வழங்கும்
வளமையவன்
இனமென் றியலா இருப்பினை யேற்றே
இயங்குபவன்
மனமெனுங் கூட்டினில் மானுடங் காப்பவன்
வாழ்த்துவமே!                     29

வாழ்த்துப் பொருளவன் வாழும் மாண்பவன்!
வாழ்க்கை நெறியவன் வறுமை களைபவன்!
தெய்வப் புலவனுள் திளைப்போம்
உய்வோம் உலகி லோதுவோம் குறளையே! 30

No comments:

Post a Comment