அன்பானவர்களே வணக்கம்!
தமிழ்க்குதிர் ஆறாம் மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
‘நாடும் மொழியும் நமது இரு கண்கள்’ என்பார் பாரதியார். இரண்டுமே இப்போது இடர்ப்பட்டு நம் கண்முன்னே காணாமல் போய்விடுமோ என்னும் அச்சம் நம்முள் குடிகொண்டு விட்டது.
‘குணம் நாடி வாழாது பணம் நாடி வாழும் போக்கில் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது’ என்பதை மறுப்பதற்கில்லை. எல்லாவற்றையும் இழந்து பணத்தை மட்டும் வைத்து எப்படி வாழ முடியும்? இந்த அடிப்படைப் புரிதலாவது நாடாள்வோர்க்கும் நாட்டு மக்களுக்கும் வேண்டும். நம்மை நாம்தான் காக்க முடியும். தெளிவான தொலைநோக்குப் பார்வை நமக்கு வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் நாடு தளர்ந்துள்ளது. அடிப்படை உரிமைகளுக்கும் கையேந்தும் நிலையில் நம்மை விட்டுவிட்டனர்.
பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பது மட்டும் பெருமையில்லை. அப்பழமையைக் காப்பதும் நம் கடமை. ஆங்கிலம் படித்து அழகான தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பே சமற்கிருதத்தைக் கலந்து கெடுத்துவிட்டோம். இலக்கணம் என்று ஒன்று இருப்பதால்தான் இன்னும் தமிழ் பாடுபட்டும் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் எத்தனையோ மலையாளமும் கன்னடமும் தெலுங்கும் இங்கு உருவாகியிருக்கும். தமிழைக் கெடுக்கும் எம்மொழித் திணிப்பையும் எதிர்ப்பதே தமிழனின் கடமை. தமிழனின் உரிமை. மொழிப்போரெல்லாம் விளையாட்டுப் பொருளென எண்ணுவோர்க்கு எதுவும் புலப்படப் போவதில்லை.
நாட்டையும் மொழியையும் காப்போம். உரிமைகளை நிலைநாட்டி நலத்தொடும் வளத்தொடும் வாழ்வோம்.
No comments:
Post a Comment