'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

கண்ணீர் அஞ்சலி - மரபு மாமணி புதுவை பொன்.பசுபதி


பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

பொற்றமிழுக்கும் புதுவை மண்ணுக்கும் நீண்ட நெடிய தொடர்புள்ளது. ஆம்… தன் வீரம் செறிந்த பாக்களால் விடுதலைப் போராட்ட வேட்கையை மக்கள் மனத்தில் விதைத்த முண்டாசு கவிஞன் வாழ்ந்த புதுவை…

தமிழன்னை வேற்று மொழிகளின் கலப்பால் பொலிவிழந்து கிடந்த காலத்தில் தன் வீச்சான பாக்களால் தமிழுணர்வையும், இனவுணர்வையும் ஊட்டிய புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பிறந்து வளர்ந்த புதுவை…

அத்தகு சிறப்பு வாய்ந்த புதுவை மண்ணில் 1937-ஆம் ஆண்டு திரு.து.பொன்னுதுரைசாமி-பொ.நீலாம்பாள் இணையருக்கு அன்பு மகனாகப் பிறந்தார். இளமையில் திண்ணைப் பள்ளியிலும், பின் கலவை சுப்புராய செட்டியார் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் தொலை தூரக் கல்வியில் இளங்கலை பயின்றார். இவர் தன் எட்டு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். அன்னாரின் குடும்பமே அக்காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு உடையது.

பொன். பசுபதியார் இயல்பாகவே தமிழின்மீது பற்றுக் கொண்டவர். முத்தமிழிலும் ஆற்றல் பெற்றவரான இவர் சில நாடகங்களிலும் நடித்துள்ளார். இசைப்பாடல்கள் பல இயற்றியுள்ளார்.  ஐயா அவர்கள் நடுவணரசு அலுவலராக இருந்தாலும் அவருடைய தமிழ்ப்பற்றின் காரணமாகப் பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் பங்கு பெற்றதனால் அனைவருடனும் மரியாதை கலந்த அன்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

திரு.பசுபதி அவர்கள் மிகவும் அமைதியானவர், அடக்கமானவர், ஆற்றலுள்ளவர், இன்முகத்துடன் பழகுதற்கு இனியவர். அதிர்ந்து பேசாத பண்பாளர்.

அவர் தன்னுடைய ஆசானாக முத்தமிழ்ச்சுடர் முனைவர் இரா.திருமுருகன் அவர்களையும், வழிகாட்டியாகத் தமிழ்மாமணி புலவர் அரங்க.நடராசன் அவர்களையும் போற்றி வாழும் வகையிலேயே அவரின் தமிழார்ந்த அறிவை நன்கறியலாம். மரபில் தோய்ந்த மாணிக்கமாக எண்ணரும் இலக்கணங்களில் அவர் பாட்டெழுதி யிருப்பது அவரின் திறமையையும், புலமையையும் காட்டுகிறது.

“ஈழத்தமிழரும் இந்தியத் தமிழரும்” என்னும் நூல் அவருடைய தமிழ்ப்பற்றுக்கும், தமிழினப் பற்றுக்கும் எடுத்துக்காட்டு. இந்நூல் இவருடைய 75-ஆம் அகவையில் வெளியிடப்பட்டது. அந்நூலைத் தமிழ்மாமணி புலவர் பூங்கொடி பராங்குசம் ஆய்வுரை செய்தார். அதன் மூலம் அந்நூலைப் பற்றிய பல நிகழ்வுகளையும், கவிஞரின் எண்ணத் தாக்கத்தையும் உணர முடிந்தது. பலருக்கும் அவர் மீது மேலும் பன்மடங்க மதிப்புயர இதுவும் ஒரு காரணமான அமைந்தது.

இவர் இயற்றிய நூல்கள்:
1) அருள்முருகும் அம்பிகையும், 
2) எண்ணங்கள் தீட்டிய வண்ணங்கள்,
3) பண்ணையில் விளைந்த பயிர்கள்,
4) உள்ளத்தில் ஊறும் உணர்வுகள்,
5) அருச்சனைப் பூக்கள் 108,
6) ஈழத்தமிழரும், இந்தியத் தமிழரும்,
7) பயன்கருதாமல் பணிகளைச் செய்வோம்,
8) உதிரும் முன்னே உதிரும் பூக்கள் ஆகியவை.

இவர் பெற்ற விருதுகள்:
1) மரபுமாமணி,
2) கவிஞர் திலகம்,
3) சாதனைச் செம்மல்,
4) பாத்தென்றல்,
5) குறள்மணிச் செல்வர்,
6) கவிமணிச்சுடர்,
7) கவியருவி,
8) தமிழ்மாமணி,
9) கவிச்சூரியன்,
10) பைந்தமிழ்ப்பாமணி,
11) பொற்றமிழ் நற்கவி,
12) முத்தமிழ்ச் செம்மல்,
13) பைந்தமிழ்க்குவை.

தமிழுக்கு அரும்பெருந்தொண்டாற்றித் தமிழோடு வாழ்ந்த அண்ணல் 10.06.2019 அன்று பொன்னுடல் நீத்துப் புகழுடல் எய்தினார். அவருடைய தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை “இந்தக் கவிக்குயில் தனது கூட்டைத் தானமாகத் தந்து செல்கிறது” என்று அறிவித்தது. தமிழே வடிவாய் வாழ்ந்த ஓருயிர் தன் பயணத்தை முடித்துக் கொண்டது என்று கதறினார் பாவலர் மா.வரதராசனார். மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றாரே! அந்தோ!

“பாவலர் மா.வரதராசனார்க்கு மறக்காமல் சொல்லுங்கள்; பைந்தமிழ்ச்சோலையின் வளர்ச்சிக்கு உதவுங்கள்” என்று அவர் இறுதி வேண்டுகோள் விடுத்தார்.

புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்குத் தன்னுடலை ஆய்வுக்காகத் தானமாகக் கொடுத்து விட்டார் அந்த வள்ளல்!

பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.  அன்னாரின் திருவுரு மறைந்தாலும், அனைவரின் உள்ளத்திலும் நீங்காமல் நின்று அன்னாரின் புகழுரு என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

எதிர்வரும் 'பைந்தமிழ்ச்சோலையின் நான்காமாண்டு விழா பசுபதியார் நினைவரங்கமாகவும் நிகழவுள்ளது என்பதில் எம் சோலை பெருமையடைகிறது.

வாழிய அவர்தம் புகழ்.!

No comments:

Post a Comment