'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

ஆசுகவிச்சுழல்


இரண்டாம் அமர்வு:

தலைவர்:
கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்

தலைப்பு:
தாய்மையைப் போற்றுவோம்
(வாய்பாடு :விளம் மா விளம் மா
விளம் காய்)

இணையிலா அன்பி னாலவள் சேயை
எண்ணுவாள் உலகோரே
அணையிடா வெள்ளம் பாய்வது போலே
அவளுடைச் சேவையன்றோ
எனக்குடைப் பிறவி தீர்வதன் மட்டும்
இயலுமால் என்றாய்க்கு
மனத்தினால் வாக்கால் மெய்கொடும் உழைத்து
மகிழ்வொடு பணிபுரிவேன்

புரிவதெச் செயலோ அதன்பயன் வேட்பர்
புவிதனில் மாந்தரெல்லாம்
பரிவொடு பாசம் காட்டுத லெல்லாம்
பயன்றனை வேண்டியன்றோ
எரிபசி தன்னை வாட்டுதல் கண்டும்
இம்மியும் வருந்திடாது
பரிவொடு சேயின் பசிதனைத் தீர்க்கப்
பலவகை உழல்வாளே

உழலுவள் உடலம் தேய்குவள் தன்நோய்
ஒதுக்குவள் தன்குழந்தை
அழுகுரல் கேட்டுப் பதறுவள் புகுவாள்
அதன்வலி தீர்ப்பதற்கே
விழலினில் இட்ட நீரது போல
வீணென அவள்பாசம்
அழுகிட லாமோ அவனியீர் தாயின்
அன்பினைப் போற்றிநிற்பீர்

போற்றுத லுக்கும் நன்றியோ டெண்ணிப்
புகழுவ தற்குந்தாய்
ஆற்றிய பணிகள் எத்தனை உளவே
அத்தனை நீர்மறந்து
காற்றினில் கலக்கும் சொற்களைப் போலே
கரைத்திடல் சரியாமோ
வேற்றுமை இல்லாக் கருத்திது காணீர்
விரிகடல் உலகோரே

கவிஞர் மோகன சுந்தரம்

விரிகட லுலகில் வாழுயிர் எல்லாம்
விளைவது தாயாலே
அருமுற வவளே அவளிணை என்றே
அவனியில் ஏதுமிலை
கருவினில் சுமந்து காத்தருள் வாளே
கண்ணிமை காப்பதுபோல்
உருகிடு மவளும் ஒருகுர லுக்கே
ஓடியும் வருவாளே!

ஓடியும் வருவாள் உணர்வினில் கலப்பாள்
உருவதைத் தந்தவன்னை
வாடிய போதில் வாஞ்சையாய் நம்மை
வாரி அணைத்தவளாம்
தேடிய செல்வம் யாவுமே தாய்க்குச்
சிறப்பினை நல்குவதாய்
நாடியும் சென்று வணங்கிடு வோமே
நாமவள் தாளினையே

      கவிஞர் கவினப்பன் தமிழன்

நாமவள் தாளின் நீழலில் வளர்ந்தோம்
நமக்கவள் தனித்தெய்வம்
தாமவள் கொப்பூழ்க் கொடியில்ம லர்ந்த
தாமரை மொட்டுகள்நாம்
ஆமவள் நமக்குத் தாயென வந்த
அணங்கவள் தாள்தொழுதால்
ஏமமு யிர்க்காம் ஏமமு யிர்க்காம்
ஏதமென் றேயிலையே

ஐயவள் நமக்காம் அரணவள் என்றும்
அமிழ்தொழு குஞ்சிலையாம்
வெய்யவள் நோய்க்கு விளக்கவள் மெய்க்கு
விழிகளில் கருணைமழை
பெய்யுமா முகிலாய்ப் பிறவி வளர்க்கும்
பெருந்தகை யேயவளாம்
செய்யப தத்தால் வரந்தரு வாளவள்
சேய்க(ள்)நாம் மறுப்பவளோ

ஓமெனத் தொடங்கி யதோவுல கறியோம்
உன்னிலே தொடங்கினம்யாம்
தாமுள வரைக்கும் இதையுண ராது
தவிப்பவர் பலருளரே
ஊமையி தழ்க்குப் பாலொடு தோய்த்தோர்
உயிரினைக் கொடுத்தவளே
ஆமெனத் தொழுதோம் அணங்குநீ அம்மா
அடியெனக் கருள்குவையே

கவிஞர் சாமி சுரேசு

அடிக்கரும் பெனவே இனிக்கிற உவப்பே
அன்னையே தாள்பணிவேன்
துடிதுடித் தெம்மை இறக்கிய நொடியைச்
சுடும்வரை யான்மறவேன்
கொடிமலர் மணமே மலரிதழ் தேனே
கோவினும் உயர்ந்தவளே
குடிவளர் செய்யும் குலமகள் நிறையே
குற்றமில் பொற்குவையே

பொற்பத நிழலின் அற்புத குளுமை
பொன்னினும் மேலென்பேன்
முற்படு வினையின் பெற்றதின் பயனே
முளைகிற செடியானேன்
கற்பகத் தருவும் என்செயும் இவளின்
கருணையின் முன்னாலே
இற்கடை தெய்வம் என்றிருப் பவளை
இம்மியும் பிழையேனே

பிழைபொறு தெய்வம் பெருநிலம் யாவும்
பிறங்குப அன்னையன்றி
உழையுள ஏதும் உடன்சொல வுளதா
உண்மையை உணர்வோமே
கழைச்சுவை கூடக் கசக்கவுங் கூடும்
கனவிலும் இனியவளே
இழையணி கழஞ்சும் மரகத முத்தும்
இவளிணை ஆகாதே

தேன்மழை சிந்தும் மாநறுஞ் சோலைத்
தென்றலும் இவள்தானே
வான்மழை யன்ன பொழிதலை என்றும்
மனத்தினில் கொள்ளாளே
தானெனு மெண்ணம் தவறியு மெண்ணாத்
தவத்தினும் மேலாளே
மீன்விழி மன்ற உடலுயிர் ஓம்பும்
மீப்பெரு இறையிவளே.

கவிஞர் நெடுவை இரவீந்திரன்

உடலுயிர் ஓம்பும் மீப்பெறு இறையை
உணர்த்திய தாயவளே
உடலியல் அறிவை உளவியல் முறையில்
ஒழுங்குடன் வளர்த்தவளே
உடலது மெலிந்தால் மருந்தினைத் தந்தே
உயிரினைக் காத்தவளே
மடியினில் வைத்து மாசிலா அன்பை
வடித்தவள் தாய்நீயே

மாசிலா அன்பைச் சேர்த்தவள் தாயின்
மதிப்பினைக் காட்டுவளே
ஆசிரி யர்போல் கல்வியில் சிறக்க
அறிவுரை ஊட்டுவளே
காசிலாப் பண்பைக் கற்றேற நமது
காதினில் தீட்டுவளே
ஆசிடைச் சொல்லி அவனியில் வாழ
ஆறுதல் கூட்டுவளே

கூட்டுற வுச்சிந் தனைகளைப் பிள்ளை
கூரத னிலேற்றுவாள்
பாட்டினைப் பாடி மடியினில் போட்டுப்
பாலினைப் பீச்சுவளே
மாட்சிமை யோடு வளமிகு கதையை
மனத்தினில் பாய்ச்சுவளே
மேட்டினை நீக்கிச் சமத்துவம் அறிந்து
மேவிட வைப்பாளே

மேவிட வைத்துப் பாரினில் சிறக்க
வேள்வியும் செய்வாளே
காவடி தூக்கிப் பால்குடம் ஏந்திக்
கந்தனைத் தொழவைத்தாள்
சேவகம் செய்தே தேய்ந்தவள் நம்மை
செறிவுடன் வளர்த்தவளின்
சேவடி தொட்டுத் தினந்தினம் தொழுது
செம்மையாய் வாழ்வோமே!

கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம்

செம்மையாய் வாழப் பற்பல நல்ல
சிறப்புகள் செய்வாரே
தம்மையும் வருத்தி எம்மையும் நன்று
தரமென உயர்த்துவாரே
நம்பியும் எல்லாக் காரியம் வெல்ல
நன்றெனச் செய்திடுவார்
தெம்புடன் என்றும் தந்திடும் அவளின்
தீந்தமிழ் அன்பன்றோ

அன்பினைக் காட்டும் தாயவள் அவளே
அகிலமும் போற்றுமன்றோ
தன்னையும் வருத்தி எம்மையும் நன்கு
தரமென வளர்த்திடுவாள்
இன்புற அறிவு பற்பல தந்தே
ஏற்றமும் தருவாளே
என்றுமே எம்மைக் காத்திட இனிய
இன்னுயிர் தருவாளே

தருவதை யென்றும் மகிழ்வுடன் நாளும்
தயக்கமும் காட்டாரே
அருகிலி ருந்து நன்றெனப் பொழிந்து
அன்பையும் தருவாரே
விருப்பமெல் லாமே தீர்த்திட நாளும்
வியர்வையும் சிந்துவாரே
உருகியே அருகில் நித்தமு மிருந்து
உள்ளமும் மகிழ்வாரே

No comments:

Post a Comment