'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

தமிழச்சி திருப்பள்ளியெழுச்சி

கவிஞர் ஆதி கவி (எ) சாமி.சுரேசு

(பாவை பாடல்கள் - இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா) - பகுதி – 2

மாத்திறங் கொண்ட மறத்தமிழ் தொன்னிலத்தில்
காத்திரங் குன்றியதே னென்று வினவுதற்கு
நாத்திற மில்லா நயவஞ்சர் வாழுகிறார்
ஆத்திரம் மீக்கொண்டே ஆண்மையுடன் கேட்டதிலர்
தோத்திரம் பாடியவர் மூத்திரம் மாந்துகிறார்
கோத்திரம் தோண்டிப்பின் சாத்திரம் பேசுகின்றார்
தூத்தறி என்றே உமிழ்ந்தெழுப்பத் தூயவளே
பூத்திரி கையமர்க்கண் பூக்கேலோ ரெம்பாவாய்.  11

கோட்ட கொடும்புருவம் கொண்டிலங்கு மீன்விழியே!
நாட்ட உறங்கதியோ நல்லபிள்ளை செய்கையடி
தேட்டந் தொழிலென்றே தேடித் திரிவார்கள்
மாட்சி மிகக்கொண்டே ஆட்சி புரிகின்றார்
வேட்ட விழைவதில்லை வென்றியெனுமாக்கனியும்
பூட்டுத் திறக்கின்ற பொற்கோலும் நீயேதான்
கூட்டு தமிழ்ப்படையைக் கொல்லத்தமிழ்ப்பகையை
வேட்டதிர் வேட்டாய் வெடியேலோ ரெம்பாவாய். 12

அக்கார் அடிசிலுடன் அன்பொழுக நிற்கின்றோம்
தக்கார் தகுகூட்டந் தாக்கத் தவிக்கின்றோம்
மிக்கார் உனையன்றி வீதியில் யாருமில்லை
செக்கர் அடிவானம் சேதிசொலும் பொன்விடியல்
ஒக்க வொருவரிலா ஒண்டமிழ் ஓவியமே
புக்கார் விழிதிறப்பப் புன்மனத்தார் புல்திறத்தார்
கொக்கார் உறுமீனை கொத்தவருங் காலமிதே
திக்கெட்டுந் தீப்பிடிக்கச் செற்றேலோ ரெம்பாவாய்.  13

உந்திக் கொடிவழியே ஊட்டிய ஊட்டமெலாம்
முந்திப் பிறந்ததிரு முத்தமிழின் வித்தன்றோ
சந்தி சிரிக்கின்ற சச்சரவம் கேட்டிலையோ
எந்திரிக்கும் எண்ணமின்றி ஏனிந்த கண்ணுறக்கம்
அந்திப் பரிதியை ஆன்றரவம் தின்பதுபோல்
நந்தாய் வளன்றன்னை நாய்நரிகள் தின்பதுவோ
அந்தோ! முலைக்காம் பறுக்கும் தருக்கிரிடை
நொந்தோ மெனவோட நோக்கேலோ ரெம்பாவாய்    14

உம்பர் முதற்றோன்றி ஊனுலர் சித்தர்களும்
கம்பர் இளங்கோவர் கண்திறந்த வள்ளுவரும்
நம்மண் தரைமீது நாட்டமுடன் வந்திலங்கிச்
செம்பொருள் செய்வித்துச் சேமமுறச் சொன்னதெலாம்
கம்பி இலாவுலர் காரைபோல் வீழ்வதற்கோ?
வெம்பிப் பழுத்துக்காய் வீணாக ஆவதற்கோ?
அம்பாரங் கண்மூட அங்கலாய்ப்(பு) ஈதென்ன
செம்மாந்த சீரா ளெழயேலோ ரெம்பாவாய்.    15

கொள்ளி எரிகுடிக்கண் கொற்றன் குழல்போலும்
முள்ளி எரிகுடியின் மூள உறங்கதியோ
அள்ளிக் குழல்முடித்(து) அன்றலர்ந்த பூமுடித்(து)
எள்ளி நகையாடி இன்பிருந்த நம்மாந்தர்
துள்ளி விளையாடும் தூமானை வன்புலிகள்
உள்ளி விருந்தாடி உண்பதுபோல் உண்டனவே
கள்ளி உனையன்றிக் காத்தருள யாருமிலர்
பள்ளித் துயில்களைந்து பார்க்கேலோ ரெம்பாவாய்  16

ஏழ்பரியோன் தங்கரத்தை எட்டி உயர்த்துகிறான்
தாழ்திறவாய் தண்ணிலவே தங்கத் தளிருடலே
ஆழ்பனியின் கீழ்வெம்மை ஆட்டுதடி ஆரணங்கே
வீழ்படிவாய் நீகிடந்தால் மீள்வதெங்கே மீன்கொடியும்
கூழ்காய்ச்சும் நன்மகளிர் கூடிக் குடம்போந்தார்
சீழ்க்கை யொலிசிந்திச் சில்வண்டும் ஆர்ப்பரிக்கும்
பாழ்துயில் பாய்களைந்து பார்க்கா தொருக்களித்(து)
ஊழ்வலிபோல் கண்வளர்த்தல் ஊடேலோ ரெம்பாவாய்  17

செவ்வானம் பொன்னொளியைச் சிந்த முயலுதடி
செவ்வாய் நிறத்தழகு செம்பொன் மேனியளே
அவ்வியான் ஆக்கம் அவர்க்கும் பயமின்றித்
தவ்வை தனக்கென்று தாங்கோளும் பொருண்மன்ற
நுவ்வாய் கிடக்கின்றோம் நுண்ணியளே சோர்வுற்றோம்
அவ்வைத் திருக்கரத்(து) அன்புடையாள் வேண்டுகிறோம்
வவ்வுந் தெருநாயும் வாடி ஒடுங்குதெனத்
தவ்வி யவளெழுப்பித் தாரேலோ ரெம்பாவாய்  18

தார்தாங்கும் மென்முலையாள் தண்ணீர்மை உண்மனத்தாள்
போர்தாங்கிச் செல்வாருள் பொல்லாக் கொடுங்கரத்தாள்
சேர்வார்கள் யார்யாரும் தேய்க்கின்றார் தாய்நிலத்தைக்
கூர்வாள் கொணர்ந்திலையோ கொற்றவளே! தொல்குடிப்
போர்வாள் தமிழ்தரும் போற்றித் தொழுதற்கண்
சீர்மிகு நம்மன்னைத் தீந்தமிழ் நன்கருளும்
கார்மழை அன்னாள் கருச்சுமந்தாள் சேவித்தால்
வேர்மழை பெய்தருளும் வேண்டேலோ ரெம்பாவாய் 19

பாடித் தொழத்துலங்கும் பைந்தமிழ்த் தாய்க்கோயில்
நாடி வருகின்றோம் நற்பிள்ளை நாங்களென்று
ஓடித் திறவீரோ ஒண்டமிழின் காவலர்காள்!
தேடி வருவாரைத் தென்றலெனத் தாலாட்டுங்
கோடி மொழிக்குழவி பெற்றாலும் வற்றாளைக்
கூடித் தலைவணங்கிக் கும்பிட்டுத் தாள்தொழு(து)
ஆடிப் பெருக்கன்ன அன்னையருள் வேண்டுதற்கே
சேடியுடன் வந்தோம் திறக்கேலோ ரெம்பாவாய்  20

No comments:

Post a Comment