'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

செங்கதிரே!


பைந்தமிழ்ச் செம்மல் அழகர் சண்முகம்

பொங்கு கடல்குளித்துப் பொன்னில்
முகம்நனைத்(து)
எங்கும் இருள்நீக்க எழும்கதிரே! - செங்குருத்துச்
சூழச் சுடர்விரித்துச் சுற்றும் புவிசெழித்து
வாழ ஒளிநிறைத்து வா!                       1

புவியேட்டில் பொற்கதிர்ப் பூவொளி தூவிக்
கவிவரையும் செவ்வான் கதிரே! - குவிந்தயர்ந்தோர்
வாழ்விலென்றும் நீங்கா வளமோங்கி எண்ணவிருள்
தாழ்வகழப் புத்தொளி தா!                      2

ஓவியச்செவ் வானில் ஒளிக்கதிர்த் தூரிகையால்
காவியம் தீட்டும் கதிரவனே - மேவியநற்
செல்வமெலாம் சேர்ந்து செழுமை செழித்தோங்கிப்
பல்வளமும் பெற்றுயரப் பார்!                   3

கார்கிழித்து வானுதிக்கும் காலை இளங்கதிரே!
ஏர்கிழித்து மண்ணில் எழில்பெருகி - நீர்கிழித்துத்
தாவிக் கயல்பாயும் தானைத் தரணியெங்கும்
ஓவியமாய்த் தாநல் உயர்வு                    4

சோலை மலர்விரிந்து சொக்க மணம்சொரியக்
காலையில் பூக்கும் கதிரவனே! - மூலையில்
தூங்கா(து) உழைப்பவர் தூய வளம்பெருகி
ஓங்கத் தருவாய் ஒளி!                         5

திங்களெழில் கூடித் திகழ ஒளியூட்டித்
தங்க முகம்காட்டும் தாய்க்கதிரே – மங்கலறப்
பாரில் சமத்துவவேர் பல்க வொளிவித்தைத்
தேரில்நீ வந்து தெளி                          6

ஓங்கு புவிவிழிக்க ஓயா மடல்வடித்துப்
பூங்கவிதை பாடிவரும் பொற்கதிரே - தாங்குமுயர்
ஏரெடுத்தோர் வாழ்வில் இடர்அறுந்து சீர்நிலைக்கத்
தாரெனும் பேரொளி தா!                       7

பூவிரிக்கச் சோலை புவிமகிழும் வேளையொளி
பாவிதைத்து நோக்கும் பகலவனே - தீவினையின்
வன்செயல் நீங்கி வளம்பெருகி வையமெலாம்
அன்புநெறி ஓங்க அருள்                       8

வாலை முகவானில் வண்ணக் கதிர்விரித்து
வேலைத் துலக்கியெழும் வெய்யோனே! –
                                    காலைமுதல்
மாலைவரை பாடுபடும் மக்கள் மகிழவொளி
ஓலை விடுத்தின்னல் ஓட்டு                    9

தேயாப் பெருவெளியும் தேடா துடையுடுத்த
ஓயாமல் வேய்தொளிரும் ஒண்கதிரே - சாயா
முறைநிலைத்து மண்ணில் மும்மாரி பெய்து
கறைமறையக் கண்ணொளியைக் காட்டு         10

No comments:

Post a Comment