பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுவில் 30-03-2019 அன்று நேரலையாக ஒன்றரை மணி நேரத்தில் ஆசுகவி விருந்தாகப் படைக்கப்பட்ட 100 பாடல்கள்.
பாடியோர்:
ஒற்றை இலக்கப் பாடல்கள்: பாவலர் மா.வரதராசன். இரட்டை இலக்கப் பாடல்கள்: கவிஞர் விவேக்பாரதி.
நிலவுதரு தண்மை நினைவுதனைக் கொல்லக்
கலையழகே வந்தென்னைக் கா 1
காதல் கிளியே கனிவாய் மலர்ந்துநீ
ஓதாய் எனதுபெயர் ஓர்ந்து 2
துவர்வாய் செழிப்பில் துவண்டு கிடத்தல்
எவருக்கு வாய்க்கும் இனி 3
இனியும் வழியில்லை இன்பக் கிளியே
மனத்தில் துடித்தேன் மருண்டு 4
மருண்டோடும் மானாய் மலைக்கின்ற கண்கள்
உருள்கின்ற தேர்க்கச்சாம் ஓர் 5
ஓர்மொழி சொல்வாய் உடனே மனம்தருவேன்
பார்வையி லேனும் பகர் 6
பகலும் இரவும் பரிதவிக்கச் செய்வாய்
அகலாதே என்னுள் ளிரு. 7
இருளும் இரவும் இதயத்தைத் திண்ணும்
மருள்நீங்க நீயே மருந்து 8
மருந்தாகும் கொங்கை மயக்குந்நோய் செய்யும்
அருந்தினால் தீரா தது 9
தீரா தெனதுதுயர் தீர்க்கநீ இல்லாமல்
ஆரா தடியே அழல் 10
அழற்செய்யும் செவ்வாய் அதுகொட்டும் தேனைப்
பழச்சாறாய்க் கொள்வேன் பதத்து 11
பதட்டம் எதுக்கடி பைங்கிளியே கொவ்வை
உதட்டில் உறிவேன் உயிர் 12
உயிரே உறவே உணர்வின் கலப்பே
அயிர்க்காமல் வாவென் னுடன் 13
உடனிருக்க நீவேண்டும் உள்ளம் மகிழக்
கடனியற்ற வேண்டும் கனன்று 14
கனலைப் பொசுக்கும் கருங்குவளைக் கண்ணால்
எனக்குள் குளிர்வாய் இருந்து 15
வாயிருக்கு பெண்ணே வளரின்பம் நாம்கொள்ளப்
பாயிருக்கு வாவா பழகு 16
பழகுதமிழ்ப் பாவாய்ப் பனிமலர் தேனாய்
அழகுமயி லேவா அருகு 17
அருகே இருந்தால் அழலும் பனியாம்!
உருகும் மெழுகே உடல் 18
உடலென்ப தொன்றில்லை ஓர்ந்தால் உயிர்க்குள்
படர்ந்தாலே இன்பந்தான் பார் 19
பார்த்தால் பசியடங்கும்? பாவாய் உடலிரண்டும்
வேர்க்கப் படைப்போம் விருந்து! 20
விருந்தாகும் முன்னிரண்டா அல்லால் குடமாம்
பருத்த பழமா பறை. 21
பறைகொட்டிச் சொல்வேனிப் பாருக்கு! நீயென்
நிறையான செல்வம் நிமிர்! 22
நிமிர்ந்தகூ ரம்பால் நிலைகுலைந்தேன் கண்ணே
திமிர்ந்தெழச் செய்யா திரு 23
திருவாய் மகிழத் திறமான முத்தம்
தருவாய்! உடனே சரண் 24
சரணமுன் பாதம் சரணமுன் கேசம்
சரணமுன் நெஞ்சே கதி 25
கதிவே றிலையெனக் காதலைச் சார்வோம்!
விதியே புரியும் வினை 26
வினையோ விதியோ விளைவறியேன் பெண்ணே
முனைதேயா முள்ளால் முறி 27
முறித்தெடுக்கும் உன்பார்வை முள்ளாய்க் கிழிக்க
உறித்தேன் நினைவை உதிர்த்து 28
துவக்கம் கலக்க விருப்பினும் கண்ணே
சுவர்க்கம் அதுவென்று சொல் 29
சொல்லெல்லாம் உன்முன்னம் சொக்கும் பிறகெதனைக்
கல்லாதான் கொள்வேனென் காப்பு? 30
காப்பிட்ட கொங்கைக்குள் காணாதென் னுள்ளத்தைத்
தாப்பிட்டேன் காப்பென்று நான் 31
நானென்றால் நானல்ல நீயுந்தான் மேலேபார்
வானென்றால் வெண்ணிலவு மாம் 32
மாம்பழக் கன்னமும் மாராப்புச் சோலையும்
ஆமென்னை சாய்க்கின்ற அம்பு 33
அம்பு கிழிக்கா அழகான கேடயம்
வம்பென்று கொண்டாயோ மார்பு? 34
புண்ணாக்கும் நெஞ்சே புதிராக நோய்தீர்க்க
என்னென்பேன் விந்தை யிது 35
துவளும் இடைமீது தூங்கத்தான் ஆசை
அவிழா மலர்மார் பணை 36
பணைத்த பெருமார்பில் பக்குவயமாய்ச் சார்த்தி
அணைத்தென்னைச் செய்வாய் அணை 37
அணைபோடக் கூடுமோ ஆர்ப்பரிக்கும் காதல்
எனைத்தள்ள வீழ்ந்தேன் எதிர் 38
எதிர்நிற்கும் வேலும் எழுந்தோடச் செய்யும்
குதிரோவுன் கொங்கைகள் கூறு 39
கூற்றினைக் கண்டேன் குளிர்செவ்வாய் கொண்டுநீ
நாற்றுநட்ட போது நடந்து 40
நடக்கின்ற சோலை மலர்வனமே நெஞ்சத்
தடக்கும் அழகென்னைச் சேர் 41
சேர்கின்ற போதே செழிப்பாகும் அல்லாலென்
கூர்நெஞ்சே வெல்லுமெனைக் கொன்று 42
கொன்று களிக்கும் கொடுங்கூற்றின் மேலாமுன்
நின்று முறைக்கும் முனை 43
முனைவேலா உன்கண் முழுதுமெனைச் சாய்த்துப்
பணியென்ப தென்னே பயம் 44
பயந்தென்னை ஈன்ற பரிவான தாயின்
நயமேநீ என்பேன் நயந்து 45
நயந்து வருந்தென்றல் நங்கையுனைச் சொல்லி
மயலைக் கிளப்பும் மனத்து 46
மனத்தி லிருக்கின்ற மாணிக்கப் பூவாய்
தனத்தாளே என்னைத் தணி 47
தணிப்பாள் பிரிவைத் தகிக்கும் உடலால்
அணைப்பாள் விலகும் அயர்வு 48
அயர்விலா நெஞ்சத் தடைவே அணியே
உயர்வோம்நாம் வாழ்வில் இணைந்து 49
இணைந்த தினம்முதலாய் இன்னும்தன் நாணம்
பிணைந்த முகமவளின் பீடு 50
பீடார் நறுந்தமிழாய்ப் பேச்சில் மயக்குவாய்
நாடாத துண்டோ வுனை? 51
உனைவிட வேறொன் றுயர்வில்லை என்பேன்
மனம்கொஞ்சிச் சாய்வாள் மலர் 52
மலர்வனமே மாய்க்கும் மதுக்குடமே என்னைக்
கலங்காமல் வைப்பாய் கரத்து 53
கரமிணைப்போம் கொஞ்சிக் கதைபடிப்போம் நாணச்
சுரமிசைப்பாள் பின்னர் சுவை 54
சுவைத்துங் குறையாத செங்கனியே என்றன்
தவிப்பை யடக்கப் பழகு 55
பழக வினியள்தான் பார்வைக்குள் தீயின்
பிழம்பும் இருக்கும் பிணைந்து! 56
பிணைந்த எழிலரசி பேசாமற் பேசி
இணைந்தாளே என்னெஞ்சத் தேர் 57
தேராட்டம் வஞ்சி தெருவில் நடந்துவரப்
பாராட்டி உள்ளூறும் பாட்டு 58
பட்டோ பனிமலரோ பார்போற்றும் பைங்கிளியோ
இட்டேனே ஏஎழெட் டிச்சு 59
இச்செச் செனுஞ்சத்தம் இன்பம் எனச்சொல்வேன்
நச்சரிக்கா தேயென்பாள் நாண் 60
நாணும் பயிர்ப்பும் நயந்து நடக்குமாம்
வானும் அவட்கில்லை யொப்பு 61
ஒப்பா யொருவரிலை ஓங்குபுகழ் மாமனே
தப்பாதீர் என்பாள் தரம்! 62
தரத்தினில் கால்சேரத் தாரமா யாவாய்
உரமாகக் கொள்வே னுனை 63
கொள்வேன் அவளைக் கொடுப்பேன் எனைநானும்
துள்ளும் இளமைத் தொடர்பு 64
புதுமலர்த் தேனோ பொசிந்தெழு மானோ
மதுவென மாய்ப்பாள் மனம் 65
மனம்வைத்தேன் காதல் மலைவைத்த தாகா
முனம்வைத்த தெல்லாமே முத்து 66
முத்துப்பல் காட்டிச் சிரித்து முகிழ்காதல்
பொத்துவாள் என்றும் புனைந்து 67
புனைந்த கவியாய்ப் புதிராம் இடையாள்
மணக்கும் குழலும் மது 68
மதுக்குடமே மாய்க்கும் மலர்ச்சரமே என்னைப்
புதுக்குவாய் நெஞ்சுள் புதைத்து 69
புதைத்தேன் எனையவள் புத்திளமை மார்பில்
அதைத்தேன் என்பேன் அறிந்து! 70
அறிந்தும் அறியாமல் ஆகாத தென்பாய்
புரிந்தும் புரியாப் புதிர் 71
புதிரான பார்வை புயலாட்டம் வீச்சு
நிதம்நூறு காதல் நிலை 72
நிலைகுலையச் செய்தாள் நிறுத்தாமல் கொய்தாள்
அலையலையாய் என்னுள் அதிர்வு 73
அதிர்வாள் சிலபோதென் ஆண்குரல் கேட்டால்
குதலைபோல் தோன்றும் குறி 74
குறித்த இடஞ்சேர்ந்து கொள்ளும் மகிழ்வில்
தெறித்துக் கிடப்போம் திளைத்து 75
திளைத்திருக்கக் காமம் திறன்வாய்ந்த ஒன்று
முளைத்திருக்கும் காதல் முகிழ்ந்து 76
முகிழ்ந்து கிடப்போம் முளைக்கும் விடியல்
நெகிழ்ந்து கிடக்கும் உடை 77
உடைதளரும் பின்னால் உடலிணைக்கும் போப்பா
விடையறியா முன்னை விழா 78
விழாதிருக்கும் வேர்ப்பலா என்னை இழுக்கும்
அழாஅமற் காக்கும் அது 79
துன்பத்தில் வாழ்ந்தாலும் தூய்மைநற் காதலது
இன்பத்தில் ஆழ்த்தும் இதம் 80
இதத்துக்கும் மேலாம் பதத்துக்கும் நீயே
விதமாவாய் என்பைங் கிளி 81
கிளியாட்டம் நாணம் கிளர்த்திடும் பாவம்
களியாட்டம் பெண்ணின் கதை 82
கதைக்கின்ற வூரார் கதையெல்லாம் போக்கி
வதைக்காமல் என்னை வருடு 83
வருடுவேன் கொஞ்சி வளைவாள் உளத்தைத்
திருடியவள் நிற்பாள் திகைத்து 84
கைத்தாலும் கைக்காத காயுனக்குக் கொள்ளாமல்
வைத்தாலும் தாக்கும் வதைத்து 85
வதைக்காதே பெண்ணே வனைந்திருக்கும் கூந்தல்
அதைக்காட்டிச் சாய்க்காதே ஆம் 86
ஆமென்பாய் சின்னேரம் இல்லென்பாய் சிற்றிடையே
போமென்னும் என்னை வெறுத்து 87
வெறுத்தேன் இரவேநீ வேதனைசெய் யாதே
பொறுத்தேன் அவளில்லாப் போது 88
போதாய் மலராய்ப் புதுநிலவாய் உள்ளத்தில்
தோதாக வந்தாள் துணை 89
துணைக்கவ ளில்லை துவளும் மனமே
நினைக்காதே சும்மா நிலை 90
நிலைத்ததோர் இன்பம் நெடுங்காலம் வாய்க்கக்
கலையாக் கனவே கரு 91
கருத்துக்குள் காதல் கடைவிரித்தாள் கொஞ்ச
வரத்துக்குள் போனாள் விரைந்து 92
விரைந்தென்னைச் சேர்வாய் விரிகுழ லாளே
நரைக்காத இன்பம் கொடு 93
கொடுமை பொறுப்பதில்லை கொள்ளை இரவே
நடுங்கவைக் காதே நலிந்து 94
துணையாவாய் பெண்ணே துணிவோ டிணைக
அணையேது மில்லை யறி 95
அறிவாள் எனையிருந்தும் அண்டித்தான் வாரா
திருந்தாள் எதற்கோ? இணை 96
இணைவாய் எழிலாளே இன்றமிழாய் வாழ்வோம்
பிணைவோம் பிரியா திரு 97
இருக்கின்ற போதே இழுக்கின்ற காற்றே
வருத்தாதீர் இல்லையவள் வம்பு 98
வம்பில்லை தும்பில்லை வாழ்வொன்றே
நோக்காகத்
தெம்போடு நீவந்து சேர் 99
சேர்க்கின்ற காலம் சரியாக்கும் நெஞ்சத்தில்
நீர்க்கின்ற ஊடல் நிலவு 100
No comments:
Post a Comment