'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

புலம்பெயர் நாடும் வாழ்வும்


பைந்தமிழ்ச் செம்மல் இணுவையூர் வ-க-பரமநாதன்



பகுதி - 2

டென்மார்க்கிலிருந்து…

கல்வி

இப்பகுதியில் இந்நாட்டுக் கல்விமுறை எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட முற்படுகிறேன்.

ஒரு குழந்தையானது 6 அல்லது 7 ஆவது அகவையிலிருந்து பாடசாலைக்கு கட்டாயமாகப் போகவேண்டும். அதுவரை பெற்றோராலும், பகுதி நேரப் பராமரிப்பு நிலையங்களாலும் அவர்கள் வளர்த் தெடுக்கப்படுகிறார்கள். பராமரிப்பு நிலையங்களில் சிறுவர் பாடல்களைப் பாடி மகிழ்வதோடு அதிகமான நேரம் விளையாட்டிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எமது நாடுகளைப் போல் அப்பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதாகக் கூறிப் பிஞ்சு உள்ளங்களைக் காயப்படுத்துவதில்லை.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி கட்டாய மாக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் அரசினாலும் தனியாரினாலும் நடாத்தப்படுகின்றன. 8 ஆவது வகுப்பிலிருந்து 10 ஆவது வகுப்புவரை பாட சாலையில் தங்கிப் படிப்பதற்கான தனியார் பாட சாலைகளும் ஆங்காங்கு இயங்குவதையும் குறிப்பிடலாம். அத்தோடு இங்கு ஆங்கில மொழியில் கற்பிக்கப்படும் தனியார் பாடசாலைகளும் உண்டு. இப்பாடசாலைகள் லண்டன் பாடசாலைகளின் பாடத்திட்டதின் வழியே இயங்குகின்றன. அரச பாடசாலைகளில் கட்டணம் அற்ற கல்வியே ஊட்டப்படுகின்றது. தனியார் பாடசாலைகள் கட்டணத்தை எமது நாடுகளைப் போலவே அறவிடுகின்றன. எனினும் பெற்றோர்கள் பெரும்பாலும் அரச பள்ளிகளுக்கே பிள்ளைகளை அனுப்புகின்றார்கள். தனியார் பாடசாலையாயினும் அரச பாடத்திட்டத்தையே மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

ஏதிலியாக இந்நாட்டிற்கு வரும் பிள்ளைகள் அவர்களின் அகவைக்கேற்ப வகுப்பினில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். மொழிதெரியாத அப்பிள்ளைகள் தன்வகுப்புத் தோழர்களுடன் பழகும்போது பேச்சு மொழியினை இலகுவாகப் பெற்றுக் கொள்கிறார்கள், எனினும் எழுதுவதற்கான இலக்கண மொழியாற்றல் குறைவாகவே இருக்கும் என்பதனால், அவர்களுக்குத் தனியாக ஆசிரியர் மூலம் சிலமணி நேரம் பாடசாலையில் டெனிஷ் மொழியினைக் கற்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

6 அகவையிலிருந்து 10 ஆண்டுகளுக்கான கல்வி யானது அனைத்துப் பிள்ளைகளுக்கும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. 7 ஆவது வகுப்பிலிருந்தே மாணவர்களுக்குத் தேர்வு அறிமுகப்படுத்தப் படுகின்றது. 9 ஆவது வகுப்புத் தேர்வில் சித்தி யடைந்த பிள்ளைகள் வகுப்பாசிரியர் அனுமதித்தால் மட்டும் நேரடியாக உயர்தர வகுப்பில் படிப்பதற்கான அனுமதியைப் பெறுகின்றார்கள். (உயர்தர வகுப்பானது 11, 12, 13ஆம் வகுப்புகளாகும்) வகுப்பாசிரியர் மறுத்தால் 10 ஆவது வகுப்பினை முடித்த பின்னே உயர்தர வகுப்பிற்குச் செல்ல முடியும்.
 
3 ஆண்டுகளுக்கான உயர்தர வகுப்புக் கல்வியின் இறுதியாண்டுப் பரீட்சையின் பெறுபேறுகளைப் பொறுத்தே பல்கலைக்கழகப் படிப்பினை மேற்கொள்ளலாம்.

உயர்தர வகுப்புவரை இந்நாட்டு மொழியான டெனிஷ் மொழியிலேயே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. உயர்தர வகுப்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடைபெறும். இத்தேர்வானது மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் மூலமாகவே நடாத்தப்படுகின்றது. எனினும் இறுதியாண்டுப் பரீட்சையானது டென்மார்க் நாட்டு அனைத்து உயர்தரவகுப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஒரேமாதிரியான பொதுப்பரீட்சையாக நடாத்தப்படுகின்றது.

உயர்தர வகுப்பின் முதல் இரண்டாண்டுத் தேர்வில் கிடைத்த புள்ளிகளின் சராசரியும் இறுதியாண்டுப் புள்ளியும் சேர்த்தே உயர்தரத்தில் சித்தியடைந்த புள்ளியாகக் கொள்ளப்படும். இதனை அடிப்படையாக வைத்தே மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான நுழைவுக்கு அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஆங்கிலவழிக் கல்விமுறையில் லண்டன் கல்வித்திட்டத்தில் இயங்கும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான புள்ளிகள் டெனிஷ் வழிக்கல்வி கற்கும் பிள்ளைகளை விட வேறு விதமாகக் கையாளப்படுகின்றது.

9 ஆம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை, நடாத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளுக்கும் பிள்ளைகள் பாடப் புத்தகத்தையோ பாடக் குறிப்புகளையோ கொண்டு போகக்கூடாது என்ற கட்டுப்பாடில்லை. அனைத்தையும் மாணவர்கள் எடுத்துச் செல்லலாம்.  அப்படியா? பரீட்சையில் எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதிவிடலாம் என்று மட்டும் தப்புக்கணக்குப் போடாதீர்கள். எங்கள் நாடுகளில் நேரடியான கேள்விகளே வினாத்தாளில் இருக்கும், ஆனால் இங்கு அப்படியல்ல. நேரடிக் கேள்விக்கே இடமில்லை.

எமது நாடுகளில் அனைத்தையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தாலே பெரும் புள்ளிகளைப் பெற்றுவிடலாம். இங்கு அப்படியல்ல. எடுத்துக் காட்டாக... நியூட்டனின் விதிகள் என்ன என்ற கேள்வியே கேட்கப்படாது. அவ்விதியினை மாணவன் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வான். அப்படியாயின் இவ்விதியினைப் பயன்படுத்தி விடையளிக்கக் கூடிய கேள்வி வினாத்தாளில் காத்திருக்கும். இக்கேள்விக்கு விடையளிக்க நியூட்டனின் விதி பயன்படுத்த வேண்டும் என்று மாணவனுக்குத் தெரிந்தால் மட்டுமே விடையளிக்க முடியும். அதனாற்தான் பாடப் புத்தகங்களைக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஏதிலியாக வந்து இந்நாட்டுப் பாடசாலைகளில் படித்தாலும் அவர்கள் பெறும் புள்ளிகளை வேறுபடுத்திப் பார்க்கும் தன்மை இங்கு அறவேயில்லை. இதனால் பல வெளிநாட்டுப் பிள்ளைகள் மிகச்சிறந்த பட்டப் படிப்பினைப் பெற்று உயர்வடைந்திருக்கிறார்கள் என்பதை இங்குப் பதிவுசெய்ய விரும்புகின்றேன். எடுத்துக் காட்டாக எனது மூன்று பிள்ளைகளும் உயர்ந்த பட்டப் படிப்பினைப் பெற்றவர்களாக இருப்பதைக் குறிப்பிடலாம். இலங்கையில் தமிழர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் என்னும் கூரிய ஆயுதம் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு மாணவனும் தனக்குரிய கல்வியினைப் பெற்றுக் கொள்ள எவ்விதமான கட்டுப்பாடுகளும் இங்கில்லை. ஐரோப்பா நாடுகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையிருந்தாலும் சிறு மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். டென்மார்க்கில் பல்கலைக் கழகப் படிப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை, எனினும் மற்றைய நாடுகளில் பல்கலைக் கழகங்களுக்கு ஆண்டிற்கு இருமுறை கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவனும் படிப்பதற்காக அரசிடமிருந்து பணத்தினைக் கடனாகப் பெற முடியும். இப்பணமானது தொழில்புரியும் காலத்தில் மீளச்செலுத்தலாம்.

பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு (bachelor degree) அல்லது முதுகலைப் பட்டப் படிப்பு (master degree) முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா எமது நாட்டினைப்போல் அல்லது இலண்டன் நாட்டினினைப் போல் நடைபெறுவதில்லை. ஆயினும் அனைவரையும் அழைத்து அவர்களுக்கான சான்றிதழ்களை மட்டும் வழங்குவார்கள். இவ்விழாவிற்கு அவரவர் விரும்பிய உடையிலேயே வருவார்கள்.  கலாநிதிப் பட்டம் பெறுபவர்களுக்கு மட்டும் அவர்களின் இறுதிப் பரீட்சை முடிவடைந்து தேர்வில் வெற்றியடைந்ததும், மாணவன் படித்த அத்துறையினைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் இணைந்த ஒரு எளிமையான விழா நடைபெறும். வெற்றியடைந்த மாணவன் ஏனையநாடுகளில் பட்டமளிப்பு விழாவிற்கு அணியும் ஆடையினை அப்போது அணிந்திருப்பார். அதாவது  கலாநிதிப் பட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமே அவ்வகை ஆடையினை அணிய அனுமதிக்கிறார்கள்.

அனைத்துத் தொழில்களுக்கும் தொழில்சார் கல்வியும் ஊட்டப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.  முடிதிருத்தல், துப்பரவுப்பணி, தச்சுவேலை, வீடு கட்டுமாணத் தொழில்... எதுவாக இருந்தாலும் அதற்கான கல்வியும் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. இதன்வழி மாத ஊதியமும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள படியே வழங்கப்படுகின்றது. எனவேதான் ஒரு அலுவகத்தில் தலைமையாளரும், அடிமட்டப் பணியாளரும் வேலைக்குத் தமது சொந்த மகிழுந்திலேயே செல்லுமளவிற்கு வாழ்வாதாரம் ஊழலற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்னுமோரிடத்தில் விரிவாக விளக்கலாம் என எண்ணுகிறேன்.
                                      தொடரும்...

No comments:

Post a Comment