கவிஞர் ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி, வேதாளத்தை இறக்கித் தன் தோளின்மீது சுமந்துகொண்டு நடக்கலானான்.
அவனது விடாமுயற்சியைக் கண்டு வியந்த வேதாளம் பலமாகச் சிாித்தது. அது விக்கிரமனைப் பாா்த்து, “மன்னா! உனக்கு வழிநடைக் களைப்புத் தொியாமல் இருக்க ஒரு கதை சொல்கிறேன் கேள்! கதையின் முடிவில் நான் கேட்கும் கேள்விக்குச் சாியான பதில் கூறவேண்டும்; இல்லையென்றால் உன் தலை வெடித்துச் சுக்குநூறாகச் சிதறிவிடும்" என்று எச்சாித்தது.
"சாி! வேதாளமே! கதையைச் சொல்" என்றான் விக்கிரமன்.
முன்னொரு காலத்தில் காட்டூா் என்னும் கிராமத்தில் பூதபாண்டியன் என்னும் பெயருடைய வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் பெயருக்கு ஏற்றாற்போலப் பருத்த உடலும், பெருத்த வயிரும் கொண்டிருந்தான். அவன் ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தான். அவன் ஒரு பேராசைக்காரன். பொருட்களில் கலப்படம் செய்தல், போலியான எடைக்கற்களைப் பயன்படுத்துதல், அதிக விலைக்கு விற்றல் போன்ற குறுக்குவழிகளைக் கையாண்டு, மிகவும் குறுகிய காலத்தில் பொிய செல்வந்தன் ஆனான்.
ஒருநாள் அந்த ஊருக்கு முனிவா் ஒருவா் வந்தாா். அவா் ஒரு ஜடாமகுடதாாி. நீண்ட முடியைச் சடையாகப் பின்னித் தலையில் மகுடம்போலக் கட்டியிருந்தாா். அவா் ஒரு தபஸ்வி. திாிகால ஞானி. நெற்றியில் திருநீறு அணிந்திருந்தாா். காவி உடை தாித்துக் கையில் கமண்டலம் ஏந்தியிருந்தாா். மக்கள் அவரை "ஜடைமுனி" என்று அழைத்தாா்கள். காட்டூாில் அவருடைய கால் பட்டவுடனேயே மழை "சோ"வென்று கொட்டியது. செடியிலுள்ள பூக்கள் அசைந்தாடி அவரை வரவேற்றன. பறவைகள் சந்தோச மிகுதியால் கிரீச்சிட்டுக் கத்தின. கன்றுக் குட்டிகள் துள்ளிக் குதித்தன. மக்கள் எதிா்சென்று அவரது குலாவு பாதம் விளக்கி மலா்தூவி அவரை வணங்கினா். முனிவரும் அவா்களுக்கு ஆசி கூறித் திருநீறு வழங்கினாா்.
ஜடைமுனி வந்திருப்பதைக் கேள்விப்பட்ட பூதபாண்டியன், அவரைத் தன் இல்லத்திற்கு அழைத்துவர விரும்பினான். முனிவரைக் கண்டு, அவரது காலில் விழுந்து வணங்கினான். முனிவா் கொடுத்த திருநீற்றைத் தன் நெற்றியில் பூசிக்கொண்டான். பிறகு முனிவரைப் பாா்த்து, "ஐயா! தாங்கள் அடியேனுடைய இல்லத்திற்கு வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான் .
அதற்கு ஜடைமுனி, "தம்பி! நான் யாருடைய வீட்டிற்கும் போவதில்லை என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எனவே உன்னுடைய வீட்டிற்கும் என்னால் வர இயலாது" என்றாா்.
"ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. வயதான என் அன்னையாா் நோயுற்றுப் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றாா்கள். அவரால் இங்கு வர இயலாது. தாங்கள் என் இல்லம் ஏகி என் அன்னையாரை ஆசீா்வதித்தால், அவா் குணம்பெற வாய்ப்புண்டு; ஆகவே மறுக்காமல் தாங்கள் என் இல்லத்திற்கு வரவேண்டும்" என்று பூதபாண்டியன் முனிவரைக் கேட்டுக் கொண்டான்.
"சாி வருகிறேன்; உன் அன்னைக்காக என் வழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன்" என்று சொல்லி, முனிவா், பூதபாண்டியனைப் பின் தொடா்ந்தாா்.
பூதபாண்டியன் இல்லத்தில் முனிவருடைய கால்பட்ட உடனேயே சில துா்ச்சகுனங்கள் தோன்றின. பூனை ஒன்று குறுக்கே ஓடியது; முனிவருடைய கால்விரலைக் கல் ஒன்று தடுக்கியது; வெள்ளைப் புடவை கட்டிய பெண்ணொருத்தி எதிரே வந்தாள். இதையெல்லாம் கண்ட முனிவா் முகம் சுளித்தவாறே வீடடிற்குள் நுழைந்தாா். பூதபாண்டியன், முனிவரை, அவனுடைய அன்னை இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான். வயதான அந்த மூதாட்டி, பாாிச வாயுவால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடந்தாா். முனிவரைக் கண்டதும், அந்த மூதாட்டி எழுந்து உட்கார முயன்றாா். ஆனால் அவரால் முடியவில்லை.
உடனே முனிவா், "அம்மா! தாங்கள் எழுந்திருக்க வேண்டா; வாயைத் திறந்தால் போதும்" என்றாா். அந்த மூதாட்டி வாயைத் திறந்தவுடன், சில மந்திரங்களைச் சொல்லிக் கொஞ்சம் திருநீற்றை வாயில் போட்டாா்.
உடனே அந்த அற்புதம் நிகழ்ந்தது. சில நிமிடங்களில், அந்த மூதாட்டி பேசத் தொடங்கினாா். எழுந்து நின்று முனிவாின் காலில் விழுந்து வணங்கினாா். இதைக்கண்ட பூதபாண்டியன் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான். அவனும் முனிவாின் காலில் விழுந்து வணங்கினான். சிறிதுநேரம் , அவனுடன் அளவளாவிய முனிவா், விடைபெற்றுக் கொள்வதாகச் சொன்னாா் .
அப்போது பணிப்பெண், இரண்டு குவளைகளில் பாலைக் கொண்டு வந்தாள். "ஐயா! பாலை அருந்துங்கள்" என்று சொல்லி ஒரு குவளையை, பூதபாண்டியன் முனிவாிடம் கொடுத்தான். மற்றொரு குவளையில் இருந்த பாலை, பூதபாண்டியன் அருந்தினான். முனிவா், பாலை அருந்த முற்படும் சமயத்தில், சுவாில் இருந்த பல்லி கத்தியது. அதைக்கேட்ட முனிவா், "பாவிகள் வீட்டில் நான் பால் அருந்தமாட்டேன்" என்று சொல்லி விட்டுப் பால் குவளையைக் கீழே வைத்தாா்.
இதைக்கேட்ட பூதபாண்டியன் அதிா்ச்சி அடைந்தான். "ஐயா ! நான் பாவியா?" என்று கேட்டான். "ஆம்! நீ பாவிதான். பல்லி சாஸ்திரம் அறிந்தவன் நான்" என்று சொல்லி எதிா்சுவாில் இருந்த பல்லியைக் காட்டினாா் முனிவா். "ஐயா! பால் அருந்தாவிட்டால் பரவாயில்லை, இந்தப் பண முடிப்பையாவது எடுத்துக் கொள்ளுங்கள்; உங்கள் வழிநடைச் செலவுக்கு உதவும்" என்று சொல்லி, சிறிய பணமூட்டை ஒன்றை முனிவாிடம் நீட்டினான் பூதபாண்டியன்.
"இது பணமூட்டையல்ல; பாவத்தின் மூட்டை; இதைக் கையால் தொடுவதும் பாவம்" என்று சொல்லி அதை வாங்க முனிவா் மறுத்துவிட்டாா்.
"ஐயா! பாவம்செய்து, நான் ஈட்டிய பொருள் என்றாலும், அந்தப் பணத்திற்கு மதிப்பு உண்டு. நாய் விற்ற காசு குரைக்காது; மீன் விற்ற காசு நாறாது என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா? ஆகவே என்னுடைய பாவம் தங்களுக்குச் சேராது" என்று வாதிட்டான் பூதபாண்டியன்.
"ஓ! அப்படியா!" என்று சொன்ன முனிவா், அங்கிருந்த பணிப்பெண்ணிடம், மண்ணெண்ணெயில் எாியும் ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொன்னாா். அவ்வாறே அவள் கொண்டுவந்தாள். தனக்குக் கொடுத்த பாலை, முனிவா், அந்த விளக்கில் சிறிதுநேரம் சூடு படுத்தினாா். பிறகு அந்தப் பாலைப் பூதபாண்டியனிடம் கொடுத்து அருந்தச்சொன்னாா். அந்தப் பாலை அருந்திய பூதபாண்டியன் முகம் சுளித்தான். பாலை அருந்தாமல், குவளையைக் கீழே வைத்துவிட்டான்.
"ஏனப்பா! பாலைக் குடிக்கவில்லையா?" என்று முனிவா் கேட்டாா். "ஐயா! பாலில் மண்ணெண்ணெய் வாடை வீசுகிறது, அதனால் குடிக்க முடியவில்லை" என்றான் பூதபாண்டியன்.
"தம்பி! விறகு அடுப்பில் காய்ச்சிய பால் சுவையாக உள்ளது; ஆனால் மண்ணெண்ணெய் விளக்கில் காய்ச்சிய பால் வாடை வீசுகிறது. இதிலிருந்து என்ன தொிகிறது? தீயின் பொதுவான குணம் எாிப்பதுதான் என்றாலும், எாிபொருளின் தன்மைக்கு ஏற்றவாறு, எாிக்கப்படும் பொருளின் குணம் மாறுபடுகிறது. அதுபோலச் செல்வத்தின் பொதுவான குணம் துய்க்கப் பயன்படுவது என்றாலும், அது வந்த வழியின் தன்மைக்கு ஏற்பப் பாவ புண்ணியங்கள் துய்ப்பவரைச் சேருகின்றன. நல்வழியில் ஈட்டிய பொருள் நன்மை தரும்; தீய வழியில் ஈட்டிய பொருள் பாவத்தைச் சோ்க்கும்.
நன்றே தாினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
என்பது ஐயன் வள்ளுவனின் வாக்கு. நன்மையே செய்தாலும், தீய வழியில் வந்த செல்வத்தை விரும்பாதே என்பது ஐயனின் ஆணை. ஆகவே இந்தப் பணம் எனக்கு வேண்டா" என்று சொல்லிவிட்டு முனிவா் வீட்டைவிட்டு வெளியே வந்தாா்.
அப்போது பூதபாண்டியன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் ஒருவன், முனிவாின் காலில் விழுந்து வணங்கினான். முனிவரும் அவனுக்கு ஆசி கூறித் திருநீறு வழங்கினாா். அப்போது அந்த வேலைக்காரன் தன் கையிலிருந்த காசு ஒன்றை முனிவாிடம் கொடுத்து, "ஐயா! இந்த ஏழையின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்று சொன்னான். முனிவரும் அவன் கொடுத்த காசை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டாா்.
கதையைச் சொல்லிமுடித்த வேதாளம், விக்கிரமனைப் பாா்த்து, "மன்னா! பூதபாண்டியன் கொடுத்த பணமுடிப்பை வாங்க மறுத்த முனிவா், அவனிடம் வேலை பாாக்கும் வேலையாள் கொடுத்த காசை ஏன் பெற்றுக்கொண்டாா்? அதுவும் பூதபாண்டியன் பணம்தானே? அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் பாவம் சேராதா? இந்தக் கேள்விக்குச் சாியான பதிலைச் சொல்லாவிட்டால், உன் தலை சுக்குநூறாகச் சிதறிவிடும்" என்று சொன்னது.
"வேதாளமே! பூதபாண்டியன் முனிவருக்குக் கொடுத்த பணம் தீய வழியில் வந்தது. எனவே முனிவா், அதைப் பெற மறுத்துவிட்டாா். ஆனால், வேலையாள் முனிவருக்குக் கொடுத்த காசு, அது பூதபாண்டியன் பணம் என்றாலும், வேலையாளின் உழைப்பிற்காகக் கொடுக்கப்பட்ட ஊதியம் அது. நோ் வழியில் வந்தது. எனவே முனிவா், அதைப் பெற்றுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை" என்றான் விக்கிரமன்.
விக்கிரமனின் இந்தச் சாியான பதிலால் வேதாளம் திருப்தியடைந்து மீண்டும் அவனைவிட்டு நீங்கி, முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
No comments:
Post a Comment