'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

இலக்கியச் சாரல் - 1

முனைவர் . உமாராணி
    
இலக்கியங்கள் யாவும் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அறிவதற்கான நல்லதொரு வாய்பை அளிக்கவல்லன. அந்த நிலையில், இலக்கியத்தை நாம் படிக்கும்போது மனத்தில் ஏற்படும் சில்லென்ற சாரலை ஏற்படுத்தும் பாடல்களை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற திருமூலரின் இனிய வரிகளுக்கேற்ப, இவ்வின்பத்தை அனைவரும் பெறுக!

தலைவி,தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல்,

நள்ளென் றன்றே யாமம் சொல்அவிந்(து)
இனி(து)அடங் கினரே மாக்கள் முனி(வு)இன்றி,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே!
    
அதாவது, நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கிவிட்டன. வெறுப்பு எதுவும் இன்றி, உலகத்திலுள்ள மக்கள் இனிமையாக உறங்குகின்றனர். ஆனால், நான் மட்டும் உறங்காமல் இருக்கின்றேன் என்று தலைவனின் பிரிவைத் தாங்காமல் தோழியிடம், தலைவி கூறுவதாக இயற்றப்பட்டுள்ளது.
    
அதே மனநிலையில், திருவள்ளுவரின் குறளானது,

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

அன்று கடலும் தாங்க முடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள் இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றனஎன்று தலைவி புலம்புவதாக இக்குறள் அமைந்துள்ளது.

கானுறங்குது காற்றும் உறங்குது
நானுறங்கவில்லை நானுறங்கவில்லை

என்று கண்ணதாசனின் பாடலும் இயம்புகின்றது.
    
மனம் தவிக்கும்போது கண்கள் உறங்க மறுப்பதை எண்ணும்போது, மனத்திற்கும் உடல் உறுப்பிற்கும் உறவுண்டு என்ற உளவியல் உண்மையை  அறிய முடிகிறது.

No comments:

Post a Comment