'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

தெய்வப் புலவன் மும்மணிமாலை - பகுதி 1


முனைவர் அர. விவேகானந்தன் 


இத்தரை மாந்தர் இனிமையாய் வாழ்ந்திடச்
சொத்தென முப்பால் சொரிந்தவன் - பித்தெனும்
இன்னலைப் போக்கி இனித்தவன் தேவனவன்
என்று முலகத்தின் ஏற்பு!                                                                                                1

ஏற்பின் மனித உளமதின் மாண்பா யெழிலுறையும்
மாற்றம் உலகில் பெருகி நிலையாய் மகிழ்ந்துலவும்
தேற்றப் பொருளாம் அவன்மொழி யெண்ணித் தெளிந்திடுவோம்
கூற்றன் வருமுன் குறளனுள் சிந்தையைக் கூட்டுவமே!                                 2

கூட்டிடும் சொல்லில் குணத்தைத் தேக்கி
நாட்டினில் நன்னெறி நாளும் நாட்டினான்
வாழ்வின் நெறியாய் வாய்த்தான்
தாழ்வெனும் நிலையைத் தகர்த்தான் போற்றுமே                                            3

போற்றும் பொதுமறையைப் பூட்டி ஒழுக்கமெனும்
கூற்றில் ஒளிவெள்ளம் கூட்டினான் - ஏற்ற
வழிதந்தான்! ஏட்டில் வகைகண்டான் பாட்டன்
வழியென்றும் வண்மை வனப்பு!                                                                              4

வனப்பெனும்  கல்வி வளமாய்க் கருத்தை வழங்கியவன்
மனப்பிணி நீக்கும் மருந்தாய்க் குறளினை மாந்தியவன்
முனைந்திடும் ஊக்கம் முதற்பொருள் என்றே முழங்கியவன்
முனைப்புடன் போற்றின் முழுதாய் இளமை முளைத்திடுமே!                   5

முளைத்திடும் நட்பின் முன்வேர் ஆய்ந்து
திளைக்கும் வழியைத் தேர்ந்திடு வென்றான்
நட்பினில் நலத்தை நாட்டும்
திட்பமே சொன்னான்! திருப்பம் என்றுமே!                                                          6

என்றும் பொறுமையே ஏத்தும் வகையென்றான்
ஒன்றாச் செயலினால் ஓடிடும் - இன்பென்றான்
நாவினைக் காக்கின் நலமென்றான் சிந்தையுள்
பூவாய் மணந்திட்டான் பூத்து!                                                                                    7

பூத்துக் குலுங்கித்தான் பூமி விளையப் புதுமைசொனான்
பாத்தி நிறைந்து பசுமை யொளிர்ந்திடும் பாங்குரைத்தான்
ஏத்திட வேண்டும் உழவினைப் பாரி லெனவுரைத்தான்
மூத்தோன் அவன்சொல் அமிர்த மதனை முறைகொளுமே!                        8

ஏற்ற பொழுதி லெதையுஞ் செய்திடின்
மாற்றம் வந்தே வாழ்த்து மென்றான்
கொக்கைக் காட்டிக் கூறினான்  
சொக்கும் பாட்டில் சொரிந்தான் உவமையே!                                                     9 

உவமையெலா மாக்கி உணர்வைப் பொழிந்தான்
தவம்போலும் தங்கருத்தைத் தந்தான் - அவமெனும்
தன்மை யழியத் தகைசெய்தான் மண்மீதில்
வண்மையாம் வாய்ச்சொல் வளம்!                                                                         10

வளத்துட னன்பு நெறியினைக் காட்டும் வகையளித்தான்
உளத்தில் மழலை யிசையினைத் தேக்கு முணர்வுரைத்தான்
அளவாய்ப் பொருளினை யாக்கியே வாழு மழகுரைத்தான்
இளமை யுலகின் இனிப்பா மவன்றாள் இணைகுவமே!                                 11

இணைந்த உறவில் இல்லாள் ஊடல்
அணையா ஒளியாம் அன்பே என்றான்
விட்டுக் கொடுத்தே வாழ்ந்தால்
வட்ட நிலவாய் வாழ்வும் ஒளிருமே!                                                                          12

ஒளிரும் மொழியில் உயர்வினைச் சொன்னான்
தளிருஞ் செடியுந் தழைக்கக் - குளிர்ந்த
மொழியைக் கொடுத்தான் குலத்தினைக் காத்தான்!
விழியா மவன்சொல்லே வித்து!                                                                                 13 

வித்தாய் முளைத்துமே நம்முயிர் வாழ வினையுரைத்தான்
சொத்தா யுறைந்துமே நம்முள் நிலையாய்ச் சுகமளித்தான்
முத்தா மவன்சொலில் மூச்சை இயக்கித்தான் மூழ்கிடுவோம்
நித்தமும் ஓதுவோம் நீள்பு கழது நிறைந்திடுமே!                                             14

நிறைந்திடு மெண்ணம் நிறைவே என்றால்
நிறையெனு மாக்கம் நிறையு மென்றான்
குறையெனு மெண்ணம் குறைய
முறையென நெஞ்சுள் முகிழ்த்தா னூக்கமே!                                                     15 
                                                                                        (தொடரும்)

No comments:

Post a Comment