'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

புலம்பெயர் நாடும் வாழ்வும் - 1

  இணுவையூர்  வ-க-பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

குடும்ப அமைப்பும் கட்டுமானமும்
              
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில்...

என்று மணிமேகலை கூறும் கூற்று ஐரோப்பிய நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி இத்தொடருக்குள் நுழைகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை மற்றும் உறைவிடம் என்பன அடிப்படை உரிமையாக உள்ளன. 30 அகவைக்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வி கற்பதற்கு ஏதுவான வகையில் கொடுப்பனவுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

இக்கொடுப்பனவானது அரசிற்கு மீள அளிக்கப்படத் தேவையில்லை, ஆனால் இத்தொகைக்கு மேலாக ஒருவர் விரும்புமிடத்து கடனாகப் பெறமுடியும். இத்தொகையானது வேலை செய்யும் காலத்தில் அதற்குரிய வட்டியுடன் மீளச் செலுத்த வேண்டும். மாதம் மாதம் எவ்வளவு செலுத்த முடியும் என்பதைக் கடன் பெற்றவரே தீர்மானிக்கலாம்.

வாழ்வதற்கான வீட்டினை வீட்டு வாரியங்களில் பெறமுடியும். மாதாந்த வாடகையானது, ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு சரிசெய்ய முடியாதவிடத்து அதற்கான உதவித் தொகையையும் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பிள்ளைகள் இருக்குமிடத்து ஒருவருக்கு 3 மாதத்திற்கு ஒருதடவை குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கப்படும். அதிகபட்சம் 2 பிள்ளைகளுக்கே இக் கொடுப்பனவு வழங்கப்படும்.

தாய் தந்தையர் பணிபுரிபவர்களாக இருந்தால் அவர்கள் தம் பிள்ளைகளைக் காப்பகத்தில் ஒப்படைக்கலாம். காலை பிள்ளைகளை அவ்விடங்களில் ஒப்படைத்துப் பணி முடிவடைந்த பின் திரும்ப அழைத்துச் செல்லலாம். இதற்காகப் பெற்றோர் அரசிற்குப் பணம் செலுத்த வேண்டும்.

7 அகவை வரை விளையாட்டுடன் எழுத்துகளையும், இலக்கங்களையும், சிறுவர் பாடல்களையும் மட்டும் கற்பிக்கின்றார்கள். பாடசாலைக்கு 7 அகவையிலிருந்தே அனுமதிக்கப்படுகின்றார்கள். பாடசாலையுடன் கூடிய காப்பகங்களில், பாடசாலை முடிந்தபின் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும்வரை பிள்ளைகள் பராமரிக்கப் படுகின்றார்கள்.
.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த திகதி, மாதம், ஆண்டு என்பனவற்றுடன் மேலதிகமாக 4 இலக்கங்கள் சேர்ந்த அடையாள அட்டையினை அரசு வழங்கும். இதனடிப்படையில் ஒருவரின் வருமானம் மற்றும் உடல்நலம் போன்ற அனைத்தும் பாதுகாக்கப்படும். ஒருவர் தான் வாழும் பகுதியிலிருந்து இன்னோர் பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லும்போது அப்பகுதியில் உள்ள நகரசபையில் தனது இடப்பெயர்வினை அறிவிக்க வேண்டும். ஆயின் நகரசபையானது உரியவரின் அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளும். தற்போது அனைத்தும் இலந்திரவியல் மயமாக்கப்பட்டதனால் இணையத்தின் மூலம் அனைத்தும் பாதுகாப்பாகப் பேணப்படுகின்றது. இதனால் ஓரிரு நாட்களில் அனைத்தும் சரி செய்யப்படும்.

கல்வியும், மருத்துவ உதவியும் அனைவருக்கும் கட்டணமின்றிக் கிடைக்கும் வகையில் நாட்டுச் சட்டமானது அமைந்துள்ளது. இவ்வகையில் ஒரு குடும்பத்தின் வாழ்விற்கான தேவை அரசினால் தீர்மானிக்கப்பட்டுச் சட்டத்தின் மூலம் பாதுகாப்பளிக்கப்படுகின்றது.
                                                                                                                  தொடரும்...

No comments:

Post a Comment