'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

பைந்தமிழ்ச் சோலை – சென்னை இலக்கியப் பேரவையின் ஆறாம் கூடல்!


பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை சென்னை - இலக்கியக் கூடல்-6,  கடந்த 28/04/2019 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை அசோக்நகர் சங்கமம் உணவகத்தில் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது.

பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை சென்னை - நிறுவுனர், தலைவர் மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் தொடக்கவுரை யாற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

கடல்கடந்து தமிழைப் பரப்பித் தமிழுணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற, எண்ணற்ற நூல்களின் வழியாகத் தன்னுடைய உணர்வையும் உந்துதலையும் மற்றவர்களுக்குச் சேர்க்கும் விதமாகத் தமிழ்ப்பணியாற்றி வரும் கவிஞர் பரமநாதன் கணேசு அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாகப் பைந்தமிழ்க்குவை விருது வழங்கப்பட்டது. அதனுடன் பைந்தமிழ்ச் செம்மலாகிப் பைந்தமிழ்ச்சோலையில் சிறப்பாகப் பாடம் நடத்தியமைக்காக, நற்றமிழாசான் விருது  வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே தமிழ்மொழியின்பால் நாட்டமும் பேரார்வமும் கொண்டு அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்ற பணியாகச் சாதிக்கின்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகிய பைந்தமிழ்க்குருத்து எனும் விருது பைந்தமிழ்ச் செம்மல், நற்றமிழாசான், ஆசுகவி, பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் தலைவர் முனைவர்  அர.விவேகானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் முனைவர் இரா.கஸ்தூரிராசா அம்மையார் அவர்கள் விருதுவழங்கிப் பாராட்டி உரையாற்றினார். கவிமழையில் நனைய வைத்தார்.

இருவரையும் கவிஞர்கள் அழகர்சாமி, சியாமளா ராசசேகர், இரா.கண்ணன், சாமிசுரேசு, விவேக் பாரதி, தமிழகழ்வன் ஆகியோர் பாமாலை பொழிந்து பாராட்டினர்.

கவிஞர் பரமநாதன் கணேசு அவர்கள் ஏற்புரையும், கவிஞர் முனைவர்  அர. விவேகானந்தன் அவர்கள் நன்றியுரையும் ஆற்ற, அறுசுவை உணவோடு விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment