'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து


பகுதி – 9  கொரோனாவும்  காதலும்


ஊகான் உருவாகி உச்சம் உலகளந்து

மீகாமன் கண்வலையால் மீனள்ளல் போலவே..!


நச்சுக் கொரோனாஅ நாளும் மனிதரைக்

கொத்தும் குலையுமாய்க் கொள்கொலைக்(கு) அஞ்சுகிறோம்..!


ஊரடங்கால் இன்னும் உலகடங்கிப் போனதால்

யாரெங்கும் செல்ல எதுவும் வழியின்றி


வீட்டுள் முடங்கிக் கிடக்கின்றோம் வேதனைக்

கூட்டுள் அழுந்தித் தவிக்கின்றோம்.. வேறென்ன


ஐம்பது நாளாய் அவள்முகம் காணாது

பைம்புதல்மேல் நூலாம் படைவிரித்த கொல்வலையில்


ஈச்சிக்கித் தப்பிக்க ஏலாது துள்ளல்போல்

பூச்சிக்கும் வண்ணப் பொலிமாலை சூடுமவள்..!


பேச்சுக்கும் கண்விழி வீச்சுக்கும் ஊதுலை

மூச்சுக்கும் ஏங்கி உயிர்சிக்கி வாடுகின்றேன்..!


வாள்மேல் படுத்துறங்கும் தன்மைபோல் இக்கொடிய

நாள்மேல் கிடந்துறங்கி நாளைக் கழிக்கின்றேன்


நங்கை நினைப்பூட்டி நாகணவாய்ப் புள்பாடும்

புங்க மரத்தடியில் இன்னும் புலம்புகின்றேன்..!


செங்கை மலராளைச் சேர வலிகூட்டி

அங்குயில் கூவுகின்ற ஆலடியில் வேகின்றேன்..!


கொங்கை குளிர்காயக் கோல நிலவொளியில்

மங்கை மடிசாய்ந்து மார்பாட ஏங்குகின்றேன்..!


கைகழுவி..! மேலும் கடைத்தெரு போய்வந்தால்

மெய்கழுவி..! இன்னும் முகக்கவசம் மேலணிந்து


நுண்மீ நுழையாது நுட்பமாய்க் காப்பதெல்லாம்

கண்மணியாள் பஞ்சுக் கரம்பற்றல் வேண்டியன்றோ..!


காதலுக்கும் காற்றில் பரவும் கொரோனாக்கும்

நோதல் வலியுண்டு நோய்க்குமருந் தில்லை


தனித்திருந்தால் காதலோ சாகவைக்கும்.! நுண்மீ

தனித்திருந்தால் மட்டுமே வாழவைக்கும்..! என்பாடோ..!


வாழ்வதற்குச் சாவதும், சாவாதால் வாழ்வதுமாய்,

வீழ்வதற்(கு) எண்ணாமல் வெற்றிமேல் கண்ணாக


நெய்யுண்டேன் நேர்த்தியுடன் செய்தமுட்டை கீரையுண்டேன்

கையிற் கிடைத்தபழம் காய்கறியும் பாலுமுண்டேன்


மெய்யிலெதிர்ப் பாற்றல் மிகுத்தாலே வாழ்வுண்டாம்

பொய்யில்லை காதலுக்கும் நுண்மீ கொரோனாக்கும்


தீண்டாத தன்மையும், தேர்ந்த இடைவெளியும்

மாண்புமிகு காதல் கொரோனாக்கு நேரொக்கும்..!


தாமரைபோல் கண்ணுடையாள் தாலாட்டும் பூவிழிகள்

சாமரை வீசத் தனித்துறங்க வேண்டுமன்றோ..!


கார்மேகக் கூந்தல் கருப்பருவி போல்வீழப்

போர்மோகந் தீர்த்தப் புனலாட வேண்டுமன்றோ..!


செம்பவள வாய்க்கடலில் மூச்சடக்கி நாக்குளித்து

வெண்முத்தப் பல்துழவித் தோற்றுவர வேண்டுமன்றோ..!


நெற்றிப் பிறையுதிர்த்த நித்திலங்கள் தாமுருண்டு

முட்டிப் புருவக்கரை மோதி வழிந்திறங்கிக் 


கன்னக் குழிநிரம்பக் கார்வண்ண மீசைகுத்தி

ஒன்றிரண்டாய்த் தூக்கி உருளவிட வேண்டுமன்றோ..! 


பூக்கரங்கள் பற்றிப் புலவியாட வேண்டுமெனின்

தீக்கொரோனாத் தப்பிப் பிழைத்தாக வேண்டியதால்...!


(மீகாமன் - கப்பலோட்டுபவன், மீனவன், 

நூலாம்படை- சிலந்திவலை, 

நாகணவாய்ப் புள் – மைனா, 

நித்திலம் – முத்து, 

நுண்மீ - நச்சு, வைரஸ்)


தூது தொடரும்...

No comments:

Post a Comment