'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

திருமுருகாற்றுப்படை

 உரையாடல் - பகுதி - 8


பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


புலவர்: அருமை ஐயனே! வேலன் மகளிரோடு கூடி ஆடும் குரவைக் கூத்தைப் பற்றிச் சொன்னீர்.  அவன் திருமுருகப் பெருமானாகத் தன்னை ஆக்கிக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடுவது கேட்கவே இன்பமாயிருக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மேலிடுகிறது.

நக்கீரர்: அது மட்டுமா? மற்றுமொரு விழாவைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள் புலவரே!

புலவர்: அஃது என்ன விழா ஐயனே?

நக்கீரர்: செறிவான மலைப்பக்கங்களில் வாழும் மக்கள் அனைவரும் திருமுருகப் பெருமானை வாழ்த்திப் பாடி விழாக் கொண்டாடுகிறார்கள்.

விழாக் கொண்டாடுவதற்கான களத்தில் கோழிக் கொடி நட்டுக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். அவ்விழாவில் சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில் பரப்பிப் 'பிரப்பு அரிசி'யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்துக் கொண்டாடுகிறார்கள்.

[பிரப்பு - கூடை நிறைய இட்டு வைக்கும் நிவேதனப் பொருள்]

புலவர்: அவ்விழாவைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே! எங்கெல்லாம் அந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

நக்கீரர்: அன்புடைய அடியார் திருமுருகப் பெருமானை 

வழிபட்டுப் போற்றத் தக்க பொருத்தமான இடங்களிலும்,

வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் களத்திலும், 

காட்டிலும், சோலையிலும், அழகான தீவு போன்று ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலத்திலும்,

ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும்,

நான்கு தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [நாற்சந்தி, சதுக்கம்], 

மூன்று தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [முச்சந்தி], 

புதுமலர்களை உடைய கடம்பு மரத்தின் அடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தின் அடியிலும், 

மக்கள் கூடும் பொது மேடையை உடைய மன்றங்கள், பொதியில் ஆகியவற்றிலும்,

கந்து நடப்பட்டுள்ள இடங்களிலும் கொண்டாடுகிறார்கள்.

புலவர்: ஓ! நன்று ஐயனே! அவ்விழாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: அவர்கள்

நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து கோயிலின் வாயிலில் அப்புவர்;

திருமுருகப் பெருமானின் திருப்பெயரை மென்மையாக உரைத்து, இரு கைகளையும் கூப்பி வணங்குவர்; 

வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவுவர்; 

வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்திருப்பர்;

கையில் சிவப்பு நூல் காப்பு நூலாகக் கட்டியிருப்பர்; 

வெண்மையான பொரியைத் தூவி, வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாகப் பல இடங்களில் வைப்பர்; 

சிறிய பசுமையான மஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்திருப்பர்; 

செவ்வரளி மலரால் ஆகிய மாலையைச் சீராக நறுக்கிக் கோயிலைச் சுற்றித் தொங்க விட்டிருப்பர். 

புலவர்: ஓ! மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் ஐயனே! அவர்கள் இவ்விழாவில் வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்?

நக்கீரர்: 

மணப்புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்; 

குறிஞ்சிப் பண்ணில் இயற்றப் பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்; 

மலைமீதிருந்து விழும் அருவியின் ஓசைக் கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்; 

பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்.

இவை மட்டுமா? 

புலவர்: இன்னும் வேறு என்ன சிறப்புள்ளது ஐயனே?

நக்கீரர்:  குறமகளின் வெறியாடலைக் கேட்பீர்.

திருமுருகப் பெருமானுக்கு விருப்பமான குறிஞ்சி யாழ், துடி, தொண்டகம், சிறுபறை போன்ற இசைக் கருவிகளைக் குறமகள் இயக்கிப் பாடி ஆடுகிறாள். அவ்வாறு ஆடித் திருமுருகப் பெருமானைத் தன்மீது வரவைக்கிறாள். மாற்றுக் கருத்துடையோரும் இந்நிகழ்வைக் கண்டு அஞ்சும் அளவுக்கு ஆவேசம் அடைகிறாள். இவ்வாறு திருமுருகன்பால் வழிப்படுத்துகின்றாள். அத்தகு  அழகு பொருந்திய அகன்ற ஊரில் கோயில் வழிபாடு அமைகின்றது.

புலவர்: ஓ! நன்று… நன்று. இத்தகு கோயில்களிலும் திருமுருகப் பெருமான் தங்குகிறார் எனச் சொல்ல வருகிறீர். அப்படித்தானே ஐயனே!

நக்கீரர்: ஆம் புலவரே! அவ்வாறு, மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம் ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத வலிமையுடைய யானையை அல்லது மயிலினை வாழ்த்தித், தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு அடைய வேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில் திருமுருகப்பெருமான் தங்குகிறான்.

புலவர்: நன்றி ஐயனே! 

(தொடரும்)

No comments:

Post a Comment