'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

ஒழுக்கம்

 

பைந்தமிழ்ச் செம்மல் அழகர் சண்முகம்


ஒழுங்கிலா வெள்ளம் ஒளிர்பசுங்கான் வீழ்த்திப்

பழுதைப் படல்விரித்துப் பாய - விழுதாய்

மழையாள் கனிந்திரங்கி மண்மகிழ்பி றப்புக்

கிழைக்குமே யாம்பே ரிடர்! 1

(ஆற்றில் கட்டிலாத வெள்ளம் கரைகடந்து கரையிலும் காட்டிலும் உள்ள மரங்களை வீழ்த்திச் செல்லும். அப்படிச் செல்வதால்  ஆற்றில் நீரோட்டம் ஏற்பட ஏதுவான மழை, மரங்கள் வீழ்த்தப் படுவதால் குறைந்து ஆறும் வறண்டு விடும். தன்பிழையால் தன்பிறப்பிற்கே இழுக்கு.)


நச்சுக் கழிவொடுதுர் நாற்றக் கறையேந்தி

உச்சநுரை சூழ உழன்றோடும் - எச்ச

அழுக்குடை யாற்றி னளவிலா நீரும்

ஒழுக்கமில் ஓதலும் ஒன்று! 2

(நச்சுக் கழிவுகளைச் சுமந்து எந்நாளும் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுநீரால் யாருக்கும் பயனில்லை, அதுபோல் ஒழுக்கமின்றிக் கற்ற கல்வியாலும்)


கொதிப்பணை தண்பால் கொளுமுறை யூடப்

பதிந்திறுகி நான்கெனப் பல்கும் - பொதியுடைப்

பாலுமொவ் வாத்துளியால் பாழ்போன்ம் ஒழுங்கின்மை

நூலுடைத் தாரெண் நுழைவு ! 3

(காய்ச்சித் தணிந்த பாலில் முறையோடு உறையூற்றத் தயிர் மோர் வெண்ணை நெய் என நான்கைப் பெறலாம். அப்பாலில் ஒவ்வாத துளி  சிறிது கலந்தாலும் முறிந்துவிடும். அதுபோல், நல்ல நெறிகளைத் தன்னகத்தே கொண்டோரிடம் சிறிய தீய ஒழுக்கம் புகுந்தாலும் முற்றும் கெட்டுவிடும்.)


நெற்கட்ட!ப் பாயும் நெடுமலை நீளாற்றைக்

கற்கட்டால் கால்பிரிக்கும் கண்ணுடை - நற்கட்டும்

சிற்றஞ் சிறுதுளையால் சீர்கெட்டாற் போலொழுங்கில்

புற்றால் கெடுமே புகழ்! 4

(நீர்த்தேக்க அணையில் சிறுதுளை ஏற்பட்டால் அது நாளடைவில் பெரிதாகி அணையையே உடைத்து விடும். அவ்வணையால் நீரோட்டம் பெற்ற விளை நிலமும் காய்ந்து போகும். அதேபோல் சிறு தீய பழக்கமும் தன்னையும் தனைச் சார்ந்தோரையும் துன்பத்தில் தள்ளிவிடும்).


வெள்ளாவி இட்டு வெளுத்தபுத் தாடையிற்

கள்ளிக் கரியிழைக் காரொட்டுப் - புள்ளிவிழக்

கொண்ட குணமிருந்தும் கோலோச்சு வெண்தூய்மை

கண்மறைந்து காணும் கறை! 5

(வெளுக்கப்பட்ட வெள்ளை உடையில் சிறிய கறை பட்டால் உடைமுழுதும் இருக்கும் வெண்மை மறைந்து அக்கறையே கண்முன்நிற்கும். சிறந்த ஒழுக்கமுடையோரின் சிறு தவறு பெரிதாகத் தோன்றும்)


ஒழுக்கத் துணையால் உயர்வுண்டாம் அஃதில்

இழுக்கினிருள் மாய்க்கும் இடராம் - வழுக்கி

நடையற்று வீழ்ந்தார்துர் நாற்ற வழுக்கின்

உடைபோர்த்தெண் சாணுடம் பே 6

(ஒழுக்கத்தின் துணைசென்றால் உயர்வடையலாம் ஒழுக்கமில்லாதவர் துர்நாற்ற உடைபூண்ட பிணம்)


கற்றும் கலையறிந்தும் கண்ணாகப் பேரறிவு

பெற்று மொழுக்கமின்றேல் பேரிழுக்காம் - முற்றாய்ப்

பழுத்துடைந்(து) உண்ணப் பயனின்றிப் பாழும்

அழுக்கடை வீழ்ந்தகனி யாம் 7

(பழுத்த கனி உடைந்து அழுக்கினுள் விழுந்ததைப் போன்றதே ஒழுக்கமிலாரிடம் உள்ள கலையும் அறிவும்)


நன்னெறி சொல்லுயர் நல்லோர் துணையிருந்தும்

தொன்மை ஒழுக்கம் தொலைத்துநொந்தார் -முன்னிருக்கும்

கைவிளக்கை விட்டுவிட்டுக் காரிலொளி தேடிமடப்

பைவிரித்த லையும் பதர். 8

(நல்ல நெறிசொல்லும் நல்லோரின் துணையிருந்தும் கட்டில்லாமல் சென்று பின்வருந்துவோர் தன்மடமையால் கைவிளக்கை விட்டவர்)


முன்னோர் வகுத்தளித்த முப்பால் நெறியொழுங்கைத்

தன்னகம் கொண்டு தலையெடுக்கார் - நன்னீர்

வரத்துடை வாய்க்கால் வழியிருந்தும் தேக்க

வரப்பின்றிக் காயும் வயல்! 9

(நன்னெறி சொல்லும் முன்னோரின் அற நூல்களைப் படித்தும் அதைக் கைகொள்ளாதவர் நீரைத்தேக்க வரப்பில்லாமல் காயும் பயிர்செய்யும் வயலைப்போன்றோர்)


ஓங்கியெழி லாட ஒளிரும் உயர்மாடம்

தாங்குமடி சாயத் தகர்ந்தாற்போல் - தீங்கின்

மழுவேந்தித் தூய மதிதேய்த்து வீழ்த்தும்

ஒழுங்கின்மை யாற்பா ழுயர்வு 10

(உயர்ந்த அழகிய மாடமும் அதன் அடித்தளம் சிதைந்தால் விழுந்து விடும். அதுபோல் மாந்தருக்கு ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடித்தளமாகும் அது ஆட்டம் கண்டால் எல்லாம் பாழாகிவிடும்)


No comments:

Post a Comment