'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

எங்கே முனியப்பன்?

 (சிறுகதை)

இரா. இரத்திசு குமரன்


ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை அவன் கடக்கும்போது மனம் ஏனோ சங்கடத்திற்கு உள்ளானது.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் அது. நந்தாவின் கிராமத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கிராமத்தின் கிழக்கே அந்த நிலம் இருந்தது. தன் மூதாதையார் சம்பாதித்ததில் மீதம் விட்டுப்போன 1.8 ஏக்கர் நிலம். அந்த நிலத்துக்கு வடக்கே மூன்று ஏக்கர் நிலம் தன் பூட்டன் காலத்தில் எப்போதோ விற்றாகிவிட்டதாம். சிறிது நிலம்தான் என்றாலும் பனை மரங்கள் அடர்த்தியாக வரிசையாக ஒரு பக்கமும் மற்றொரு பக்கம் இடைவெளிவிட்டு 8 பனைமரங்கள், இடையிடையே புதர்ச்செடிகள்,  அருகிலேயே சிறிய பாறை மற்றும் பாறையின் ஒருபுறம் பெரிய வேலிகாத்தான் மரமும் மற்றொரு புறம் சிறிய வேப்ப மரமும் இருந்தன. 


பள்ளி விடுமுறைக் காலங்களில் பனை நுங்குக்காக அவ்வப்போது தனது சகாக்களுடன் வந்துபோவது நந்தாவுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. அந்த நிலத்தில் நடந்து போனால்  கால் பாதங்களை வருடி வரவேற்கும் மனப்பாங்கு பூமி அது. நந்தாவின் நினைவு தெரிந்த நாளில் இருந்து பாசனப் பயிர் ஏதும்  வைத்ததாக அவன்  நினைவிலில்லை. அங்குக் கிணறு இல்லை என்பதால் அது சாத்தியப் படவில்லை. பாட்டன் முப்பாட்டன் காலங்களில் பக்கத்து நிலத்தாரிடம் இருந்து நீர்கொண்டு பாசனப் பயிர் செய்தனரோ என்னவோ. யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வில்லை. 


மானாவாரி  வேர்க்கடலை, துவரை, உளுந்து, கொள்ளு மற்றும் சோளம் போன்ற தானிய வகைப் பயிர்களைத் தன் தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் அறுவடை செய்ததைக்  கண்டுள்ளான். அந்த இடத்திற்கு வந்து போவதே நந்தாவுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக  இருக்கும். ஏன் அப்படி? அங்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடக்குமா? ஆம். ஆனால் எப்போதோ ஒரு சில முறைகள்தான். அவை மறக்க முடியாத நினைவுகளாக மனத்தில் பதிந்துவிடும். அது ஏன் அப்படி? அந்த நிலம் அவனுக்கும் சொந்தமானதாக இருந்ததனாலா?  இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் அங்கு இருந்ததுதான். 


நிலத்தின் வடகிழக்கு மூலையில் வரப்பு ஒட்டிக் கருக்கு, பற்றுக் கொடிகள் நிறைந்த ஒரு பனை மரம்; அதைத் தொட்டுக் கொண்டே வளர்ந்த ஒரு வேப்ப மரம்; அதன் அடியில்தான் அமர்ந்திருந்தார் முனியப்பன் சாமி. முனை மழுங்கிய முக்கோணக் கல்தான் நந்தாவின் குல தெய்வம் முனியப்பன். முனியப்பனின் சிறப்பு அவரை எங்கு வைத்து வேண்டுமானாலும் வழிபடலாம். நிலத்திற்கும் அவரே காவல்; குடும்பத்திற்கும் அவரே காவல். கருங்கல்லைக் கழுவி விபூதி பூசிவிட்டால் போதும் முனியப்பன் பிரவேசம் செய்துவிட்டார் என்று பொருள். ஆணிவேராக இருக்கும் இந்த நம்பிக்கைதான் கிராமங்களில் வாழும் மக்களின் யதார்த்த பக்தியை ஊற்றெடுக்க வைக்கும். 


படையல்  தயாராகிவிட்டது. ஆவி பறக்கப் பொங்கல், அரிசிமா விளக்கில் தீபம், மூன்று, நான்கு வெற்றிலையில் சில பாக்குக் கொட்டைகள், இரண்டு வாழைப் பழங்கள் ஜோடியாக, ஊதுவத்தி, கற்பூரம் எனப் பொதுவான பூஜை பொருட்களுடன் பொரி, அவல், சுருட்டு, சாராயம், கருமணி கருவறை போன்ற சிறப்புப் பொருட்களும் காணப்பட்டன. அரைக்கால் சட்டையுடன் கருப்பு வெள்ளைக் கட்டம் போட்ட சட்டை போட்ட பத்து வயது சிறுவனாக ஓடிவந்து இவற்றைக் கண்டான் நந்தா.


"எல்லாம் தயார், கற்பூரம் ஏத்துங்க" அம்மாவின் அழைப்பின்படி படையல் அருகே அப்பா நெருங்கினார். தன் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்தார்.


"வரிசையா நில்லுங்க" எங்களை வரிசைப்படுத்தி அம்மா பக்தியுடன் மௌனமாக நின்றதை நந்தா கவனித்தான்.


"ம்ம்… கற்பூரம் ஏத்திடலாமா?" அப்பா அனைவரையும் பொதுவாகக் கேட்டார்.  எல்லோரும் அங்கு வந்து நிற்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான். கற்பூரக் கட்டி ஏற்றப்படுகிறது. ஒரே அடியில் தேங்காய் ஏறக்குறைய சமமாக பகிரப்படுகிறது. பத்து பதினைந்து அடி தள்ளிச் சென்று கொண்டுவந்த சேவலின் கால்களில் இருந்து சணல் கயிற்றை அவிழ்த்தார் நந்தாவின் அப்பா.


"கெட்டியா புடிச்சுக்கோ, ரத்தம் மேல பட்டுடப் போகுது. உடனே கீழே போட்டுவிடு" என்று கூறிக்கொண்டே கொடுவாளோடு  தயாராக நின்றார். சேவலின் தலையில் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டது. சேவலின் சம்மதத்தை வாங்க அனைவரும் காத்திருக்க உடனே சேவலும் தன் தலையைக் குலுக்கி சம்மதம் தெரிவித்தது. தலையைத் தான் பிடித்துக்கொண்டு மற்ற உடல் பாகங்களைக் கொத்தாகப் பிடிக்கச் சொல்லி நீட்டினார் நந்தாவின் அப்பா. சில நொடிகளிலேயே தலை வேறு உடல் வேறாக பிரிக்கப்பட்டுவிட்டது.


"தூர தூக்கி கீழே போடு... கீழ போடு" அம்மா ஒரு திசையைக் காட்டிக்கொண்டே கூறியதும் தன் முழு பலத்தையும் சேர்த்து அந்த தலையில்லாச் சேவலைத் தூரத் தூக்கி போட்டான் நந்தா. அந்தச் சிறு வயதில் சிரித்துக்கொண்டே உற்றுப் பார்த்தான் சேவல் துடித்துக்கொண்டே இருந்ததை.  அந்தச் சேவலுக்கு உயிர்போன வலிதான் அதைத் துடிதுடிக்கச் செய்தது.


இப்போது வளர்ந்துவிட்ட நந்தா உணர்ந்தான் ஒரு வலியை. நந்தாவிற்கு வலிக்கிறது. உயிர் போகும் வலியல்ல. உயிர் போகும் வலியை யார்தான் கூறிவிட முடியும்? ஆனாலும் அதைவிட அழுத்தமான வலி இருக்கத்தானே செய்கிறது என்று உணர்வதைப்போல் துடிக்கிறான். அந்த நிலத்தில் மண்ணில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட வலிதான் அது. வருடங்கள் பல உருண்டோடின. நந்தாவின் மூதோர்  விட்டுச்சென்ற நிலம் விற்று ஆகிவிட்டது. நிலம் விற்று அவர்களுக்குக் கிடைத்த பணம் சரியான முறையில்தான் செலவழிக்கப்பட்டது. நந்தாவின் மேல்படிப்பு, சகோதரிகள் படிப்பு, இரண்டு அறைகள் கொண்ட அரசு இலவச வீட்டிற்கு, குடும்பச் செலவுக்கு எனச் சில வாரங்களிலே…


இப்போது வீடு ஒழுகுவது இல்லை. படித்த படிப்புதான் இன்று குறைவின்றிச் சோறு போடுகிறது. நல்ல மதிப்போடு வாழ வைக்கிறது. நல்லதுதான். ஆனால் எங்கே சென்று முனியப்பனுக்குப் பொங்கலிடுவது?


உடனடியாகத் தோன்றும் வலி நாளடைவில் குறைந்து போகலாம். சிறுகச் சிறுகத் தோன்றும் வலி நீடித்துக் கொண்டே இருக்கும். சில காயங்கள் வலியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பது அவை தோன்றும்போது உணரப்படுவதில்லை. 


இம்முறை தன் வண்டியை அந்த நிலத்தின் பக்கம் திருப்பினான். சீரான இடைவெளியில் இருந்த பனை மரங்களுக்கு பதில் கருங்கற்கள். தானியங்களுக்கு பதில் மழுங்கடிக்கப்பட்ட தலையில் வரும் மயிர்ப்பூச்சிகளைப் போல புற்கள்.  பாதங்கள் வருடப்படவில்லை. தனியாய் நின்ற ஒற்றைப் பனை மரம் இல்லை. துணையாய் நின்ற வேப்ப மரமும் இல்லை. முனியப்பன் எங்கே?  அங்கு இல்லை. அவன் வீடு அகற்றப்பட்டுவிட்டது. அந்த இடம் புல்டோசர் கொண்டு சுரண்டப்பட்டுவிட்டது. நந்தாவின் கண்ணில் நீர் மட்டும்தான் சொரியவில்லை. ஏதோ ஓர் உணர்வு தன் நெஞ்சை அழுத்துவதாக  நந்தா உணர்ந்தான். என்ன அது? பால்ய வயது ஞாபகங்களா? மண் வாசனையா?  அந்த மண்ணில் அனுபவித்த சந்தோஷங்களா?  இனி, தன் வாழ்வில் எந்த நிகழ்வும் இந்த மண்ணில் இல்லை என்ற கவலையா?  இல்லை என்றால் காணாமல் போன முனியப்பனா?

No comments:

Post a Comment