'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

இயற்கையின் அழகு

 பைந்தமிழ்ச் செம்மல்

நிர்மலா சிவராசசிங்கம்


செங்கதிர் உதிக்கும் போது

    செவ்வானம் அழகு  சிந்தும்  

தங்கமாய் ஒளியைப் பாய்ச்சத்

    தரணியும் ஒளிர்ந்து மின்னும்

பங்கயம் மெல்லப் பூக்கப்

    பரவச மடையும் வண்டு

மங்கல ஒலியும் கேட்க

    மகிழ்ச்சியில்  மனமும்  மேவும் 1


மனத்தினை மேவிச் சென்று

    மயக்குமே தென்றல் காற்று

கனத்திலே மறைந்து செல்லக்

    கன்னமும் சிவந்து நிற்கும்

இனிமையாய் வருடிச் செல்ல

    இலைகளும் அசைந்தே ஆடும்

தினசரி ஆற்றல் காட்டிச்

    சிட்டெனப் பறக்கும் மெல்ல 2


மெல்லென மழையும் தூவ

    மேதினி மகிழ்ச்சி கொள்ளும்

சில்லெனக் குளிரும் போது

    சிந்தையும் மகிழ்வு காணும்  

செல்லமும் சிணுங்கல் காட்டி

    செம்மையைத் தருமே எங்கும்

நல்லவர் நலமாய் வாழ

    நன்றென மழையும் பெய்யும் 3


நன்றென மழையும் பெய்ய

    நலந்தரச் செழிக்கும் காடு

பொன்னென மிளிரும் எங்கும்

    புதர்களில் பாம்பு வாழும்

வன்சிறை யின்றிச் சிங்கம்

    வண்ணமாய் எங்கும் ஓடும்

இன்னொலி இசைக்கும் பட்சி

    இசையுடன் அசைந்தே  ஆடும் 4


இசையுடன் அசைந்தே ஓடி

    இலங்குகள் நிறைத்துப் பாயும்

நசையுடன் எங்கும் தொட்டு  

    நானிலம் சிறக்க வைக்கும்

திசையெலாம் பசுமை பொங்கச்

    சிறப்பென நீரை நல்கும்

கசிகிற இடங்க ளெல்லாம்

    கழனிகள் விளையு மன்றோ 5


ஓங்கலும் உயர்ந்து நிற்க

    உலகமும் வியந்து பார்க்கும்

மூங்கிலும் இசைக்கும் போது

    முகில்களும் முட்டி மோதும்

பூங்குயில் பாட்டுப் பாடப்

    புன்னகை சிந்தும் யாவும்

பைங்கொடி படர்ந்து நிற்கப்

    பசுமையும் மிளிரு மன்றோ 6


பசுமையும் மிளிரு மன்றோ

    பாரினில் மரங்கள் நின்றால்

அசைகிற இலைகள் யாவும்

    அசதியைப் போக்கி நிற்கும்

நசையுடன் நாமும் பேண

    நலத்தினைத் தந்து நிற்கும்

திசையெலாம் வளர்த்து விட்டால்

    தென்றலும் இதமாய் வீசும் 7


தென்றலும் இதமாய் வீசச்

    சில்லெனப் பனியும் கொட்டும்

பொன்மழை பொழியும் போது

    பூமியே வெண்மை யாகும்

வெண்பனித் தூள்க ளெங்கும்

    வெண்மலை போல நிற்கும்

கண்களை வியக்க வைக்கும்

    காட்சிகள் நிலவு மாங்கே 8


எண்திசை யெங்கும் விண்மீன்

    இருளதில் ஒளிர்ந்து மின்னும்

தண்மதி ஒளியை நல்கத்

    தாரகை எழிலாய் நிற்கும்

கண்களைச் சிமிட்டி நன்கு

    காவலாய் என்றும் சுற்றும்

கொண்டலும் மெல்லத் தொட்டுக்

    குலாவியே நகர்ந்து செல்லும் 9


இயற்கையின் அழகைக் கொஞ்சும்

    இன்றமிழ்ச் சுவையில் தொட்டேன்

வியப்புறும் காட்சி கண்டு

    விழிகளும் விரிய நின்றேன்

அயர்வினை நீக்கும் சக்தி

    அவனியில் இயற்கைக் குண்டு

செயற்கைகள் மோதி நிற்கச்

    சிகரமாய் ஒளிரு தன்றோ 10

No comments:

Post a Comment