'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

ஈர மனம்

(சிறுகதை)

கவிஞர்  சொ. சாந்தி


சுற்றிலுமாய் மகிழ்ச்சிக் குரல் கேட்டுக் கொண்டிருக்க, அந்த ஹோட்டலின் பேமிலி அறையில் நிலவிக் கொண்டிருந்த அமைதியை அப்பாதான் அவ்வப்போது விரட்டி அடித்துக் கொண்டிருந்தார்.

“சாப்பிடுங்க... என்ன பிடிக்குதோ ஆர்டர் பண்ணுங்க... வயிறார சாப்பிடுங்க...”

அருகில் அமர்ந்து காஷ்மீரி புலவ் சாப்பிட்டுக் கொண்டிருந்த வருணை வாஞ்சையாக வருடினார் செந்தில்நாதன். மனதுக்குள் கவலைகள் பிசைந்து கொண்டிருக்க அவருக்காக வைக்கப்பட்டிருந்த இட்டிலி அவரால் பிசையப்பட்டுக் கொண்டிருந்தது.  

"கமலி உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணட்டுமா...?" 

"இதை முடிச்சிட்டு சொல்றேன் டாடி.." என்று கமலி  சொன்ன சோலாப்பூரி பாதி காலியாகி இருந்தது.

"தாரணி, நீ சாப்பிடலையா.. நூடுல்ஸ் அப்படியே இருக்கு."

செந்தில் இப்படிக் கேட்கவும் விழிகளில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் மடைதிறந்து  பெருக்கெடுத்து வழிந்தது. உடல் குலுங்க புடவைத் தலைப்பினைக் கொத்தாய்ச் சுருட்டி வாயில் வைத்து மூடிக்கொண்டாள். அழுகை ஒலி முந்தானைக்குள் சிறைப்பட்டது. மகிழ்ச்சியாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த செந்தில்நாதன் கண்ணீர் சிந்தி… இப்போது தோற்றுப்போனார். 

"அப்பா ஏன் அழறீங்க.. அம்மா ஏன் அழறீங்க" 

கமலியும் வருணும் ஒரே நேரத்தில் கேட்கவும் சுதாரித்துக் கொண்டனர் செந்தில்நாதன்  தம்பதியர். அது வந்துடா செல்லம்.. நாம இப்படி சாப்டு ரொம்ப நாள் ஆகுதுல்ல. அதான்.  

"சாப்பிட்டுவிட்டுக் கோவிலுக்குப் போலாமா செல்லங்களா.."

சர்வர் உள்ளே நுழையவும் பேச்சை திசை திருப்பினார் செந்தில்நாதன்.

“கஸாட்டா ஐஸ்கிரீம் ரெண்டு...” என்று இரண்டு விரல்களை உயர்த்தி சர்வருக்குக் கட்டளை யிட்டுவிட்டு, "உனக்கு ஏதாச்சும்...."  செந்தில்நாதன் முழுதுமாகக் கேட்டு முடிக்கும் முன்பாக வேகமாகத் தலையசைத்து மறுத்தாள் தாரணி...

இன்னமும் அவள்  தட்டில் அந்த நூடூல்ஸ் அப்படியே இருந்தது… வைக்கப்பட்டபோது இருந்த உஷ்ணத்தைத் தொலைத்து.  

உணவை வீணடிக்க விரும்பாது தொண்டை அடைக்க விழுங்கினர் செந்தில்நாதனும் தாரணியும். தாலி விற்ற பணத்தின் கடைசிக் கையிருப்பு ஆயிற்றே.

பிள்ளைகள் கஸாட்டாவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். "ம்ம். டேஸ்ட்டு.. டேஸ்ட்டு... உனக்கு வேணுமா டாடி" ஓரமாக வெட்டி எடுத்த கஸாட்டா ஐஸ்கிரீமை அப்பாவிடம் நீட்டினாள் கமலி.  அப்பா வேண்டாம் என்றவுடன்

"அம்மா... உனக்கு.. கொஞ்சம்ம்மா... ப்ளீஸ்..."  மகளின் திருப்திக்காக வாய்திறந்து பெற்றுக் கொண்டாள். ஐஸ்க்ரீம் ஏனோ உஷ்ணமாக இருந்தது தாரணிக்கு.

டிப்ஸ் இருபது ரூபாயுடன் பில் தொகையினைச் செலுத்திவிட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர இரவு எட்டு மணி ஆகியிருந்தது. எத்தனை விளக்குகள் எரிந்தாலும் இருண்ட சூழலாகவே இருந்தது.

கொரோனா வந்த பிற்பாடுதான் பல இன்னல்கள்.  லாக் டவுனைத் தொடர்ந்து இருவருக்கும் வேலை போனது.  இயன்றவரை கடன் வாங்கியாகிவிட்டது.  வேலை கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை. எங்கு சென்றாலும் கைவிரிப்பு. ஏராளமானவரை   ஏழைகளாக்கி விட்டது இந்தக் கொரோனா.

இனியும் கடன் வாங்க திராணி அற்று எடுத்த முடிவு. சுண்டக் காய்ச்சிய பாலில் கலக்கப் பட்டிருந்தான் எமன். பிள்ளைகளைக் கட்டிக் கொண்டு அழுதாள் தாரணி. ஏன் அம்மா அழுகிறாள்..? புரியாது நோக்கினார்கள் பிள்ளைகள்.

"எல்லோரும் ஒண்ணா இன்னிக்கு பாலைக் குடிப்போம் செல்லங்களா. அப்பா ஒன்-டூ-த்ரீ எண்ணுவனாம். த்ரீ சொல்லும்போது குடிக்கணுமாம்.   சரியா..?"

கூறியவுடன்  பிள்ளைகள் தலையை ஆட்டியபடியே பால் தம்ளரை கையில் எடுத்தார்கள். அப்பா எண்ண ஆரம்பித்தார். 

ஒன்-டூ........ டூவை நீட்டிக்கொண்டிருந்தார் கண்களில் கண்ணீர் வழிய..

தட்... தட்.. கதவை யாரோ தடதடக்கத் தட்டிக்கொண்டிருக்க இரண்டுடன் நின்றது எண்ணிக்கை. 

செந்தில்நாதன் டம்ளரை அப்படியே தரையில் வைத்துவிட்டுக் கதவைத் திறக்க, உயிர் நண்பன் ஜீவா நின்று கொண்டிருந்தான். "என்னை  மன்னிச்சுடு செந்தில்.  யார் கிட்டயும் நீ கையேந்தி நிக்க மாட்ட. உழைப்பாளி நீ. உனக்குக் கேட்ட மாத்திரத்தில் உதவ முடியல. எப்படியோ பணம் பத்தாயிரம் என் அப்பா கிட்ட இருந்து வாங்கினேன் இந்தா வச்சுக்க இப்ப செலவுக்கு… அப்படியே உனக்கும் துணிக்கடையில் வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்..."

சொல்லிக்கொண்டே இருக்க... அணைத்துக் கொண்டான் நண்பனை, செந்தில்... ஜீவாவின் முதுகில் செந்திலின் கண்ணீர் நன்றியினை எழுதிக் கொண்டிருந்தது...

பாலைக் குடித்துக் கொண்டிருந்தது வாஷ் பேசின்.

No comments:

Post a Comment