'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

நடுப்பக்க நயம்


நடுப்பக்க நயம்


பாவலர் மா.வரதராசன்

       கம்பன் கவிநயம் – 3

. யார்கொல்இச் சொல்லின் செல்வன்?

னுமனைச் சொல்லின் செல்வன் என இராமன் அழைக்க என்ன கரணம்? இந்தக் கேள்வியைப் பல நாள்களுக்கு முன் சோலையிலும், சொல்மேடை என்ற என் தனிப் பக்கத்திலும் கேட்டிருந்தேன். அதற்கான விடையைக் கூறுமுகத்தான் கம்பன் கவிநயம் கட்டுரையின் வாயிலாகக் கொடுக்கிறேன்.

இராமன் சீதையைத் தேடிக் காட்டுவழியே கிட்கிந்தையை அடைகிறான். தொலைவில் அவர்களைப் பார்த்த., அனுமன் இவர்கள் தான் தருமத்தின் மாற்று வடிவம் என்பதைக் கண்டு, அவர்களை வரவேற்கிறான்.
இராமன் அனுமனை நோக்கி, 'நீ யார்? " என்று ஒரு கேள்வியைத் தான் கேட்கிறான். அனுமனோ,

"மஞ்செனத் திரண்ட கோல
மேனிய மகளிர்க் கெல்லாம்
நஞ்செனத் தகைய வாகி
நளிரிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சமொத் தலர்ந்த செய்ய
கண்ண,யான் காற்றின் வேந்தர்க் (கு)
அஞ்சனை வயிற்றில் வந்தேன்
நாமமும் அனுமன் என்போன் "

எனத் தெளிவாகக் கூறுமுகத்தான் தன் ஆன்ற அறிவுநுட்பத்தையும், தெளிந்ததோர் துணைவனாக ஆகப் போகின்ற அமைச்சுத் திறனையும், கொடுத்துப் பெற்றுப் பயன்கொள்ளும் இயல்பையும் காட்டி நிற்பதுடன் அல்லாமல்,
இராமனை முன்னரே அறியாதவனான அவன், இராமனை முன்னிலையாய் விளிக்கும் சொற்களைக் கொண்டே "சொல்லின் செல்வன் " என்று இராமனால் புகழப்படுகிறான்.
முதலில்,  பாடலின் பொருளைப் பார்ப்போம்.

"மஞ்செனத் திரண்ட கோல மேனிய "
- மஞ்செனில் மேகம். அதாவது மழையைப் பொழிந்து, இவ்வுலக உயிர்களைக் காத்து அருளும் மேகம். மேகம் கருமையானது. இராமனின் நிறமான கருமையைக் கண்ட அனுமனுக்கு உவமையாகத் தோன்றியது மஞ்சு - மழைமேகம். இராமனும் இவ்வுலக மக்களைக் காத்தருளும் மனித வடிவில் உள்ள திருமாலே என்பதை அறிந்த அனுமன் "மஞ்செனத் திரண்ட மேனி " என்கிறான்.

"மகளிர்க் கெல்லாம் நஞ்செனத் தகைய வாகி "
- இராமாயணத்தின் மையப் பொருள்களில் ஒன்று "ஒரு இல் " (ஒரு தாரம்)
இராமன் தன்மனையாள் சீதையைத் தவிர மற்ற பெண்களுக்கு நஞ்சு போன்ற (அவர்கள் தன்னைக் காமுறா வண்ணம்) இயல்பை உடையவனாதலால் இவ்வாறு கூறுகிறான்.

"நளிரிரும் ...கண்ண"...
- நளிர் - குளிர், பகை எனப் பொருள்.
குளிர்ந்த பனியால் வாடாத தாமரையைப் போன்ற கண்ணனே என்னும் பொருளும்,
பகையைக் கண்டு வாடாமல் மலர்ந்த. முகத்தோனே என்ற பொருளையும் (இராவணனைக் கண்டு கலங்காதவன்)
நளிர், தேம்பா என்ற இரு சொற்கள் மடங்கிப் பொருள்தருமாறு கூறுகிறான்.

"யான்....என்போன் "
- நான் காற்றின் வேந்தனுக்கும், அஞ்சனைக்கும் பிறந்தவன். என்பெயர் அனுமன்.

இவ்வாறு, இராமனைக் கண்ட நொடியிலேயே அவனைப் பற்றிய இயல்பு, அவனுடைய பகைவன், அதில் அடங்கிய அவனுடைய வீரம், கடவுளின் தோன்றல் என அனைத்தையும் உணர்ந்து கொண்ட அனுமன் தேர்ந்த சொற்களால் இராமன் கேட்ட ஒற்றைக் கேள்விக்கு இந்தத் தெளிந்த விடையைக் கூறிய காரணத்தால் தான்,
வியந்து போன இராமன் தன் தம்பியிடம்,


"கல்லாத கலையும், வேதக்
கடலுமே, என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே
யார்கொல்இச் சொல்லின் செல்வன்? "

என்று அயர்ந்து கேட்கும் காட்சியைப் படைத்துக் காட்டிய கம்பரின் கவிநயத்தைக் கற்போர் களிப்பில் மூழ்குவர் என்பதே உண்மை.
இப்போது அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள்...

"மஞ்செனத் திரண்ட கோல
மேனிய மகளிர்க் கெல்லாம்
நஞ்செனத் தகைய வாகி
நளிரிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சமொத் தலர்ந்த செய்ய
கண்ண,யான் காற்றின் வேந்தர்க் (கு)
அஞ்சனை வயிற்றில் வந்தேன்
நாமமும் அனுமன் என்போன் "
 (கம்ப. கிட்கிந்.அனுமப். 15)


மீடூ


மீடூ     (எனக்கும் கூட)

  வலைநாடன்



ஐயா உங்களை நம்பித்தான் இருக்கிறோம் கட்டாயம் வந்துடுங்க.

ஆகட்டும்  என்று தலை அசைத்தது இன்னும் நினைவில்  வந்து போகிறது.

அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே விழாவில் சிறப்பு விருந்தினர்  நான்தான் என்று உறுதிப்படுத்தி, ஒப்புதலும் வாங்கி விட்டனர். இப்போது விழாவிற்கு வரமுடியாது என்றால் ஏற்றுக்கொள்வார்களா? ஏன் என்மனம் என்னவெல்லாம் சொல்கிறது. தன்னுள் பலவாறு  எண்ணிக்கொண்டிருந்தார் சு. பா (என்ற சுந்தர பாண்டியன்).

ஊரில் உள்ள ஒரே பழம்பெருமை வாய்ந்த கல்லூரியின் முதல்வர் என என்மீது அதிக மதிப்பு வைத்திருக்கின்றனர். எல்லா இலக்கிய விழாவிற்கும் என்னைத் தவறாமல் அழைப்பார்கள். ஏதோ கவிதை பாடுவேன், கட்டுரை வாசிப்பேன், உரையாற்றுவேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இம்முறை ஒரு பெண்கள் கல்லூரி ஆண்டுவிழாவிற்குச் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்துள்ளனர்.

இந்த மீடு (எனக்கும் கூட) போக்கு என்னைச் சுயபரிசோதனை செய்யத் தூண்டுகிறதே.

உங்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது. கடைசி நேரத்தில் வரமாட்டேன் என்றால் ஒத்துக்கிருவாங்களா ? முன்னாலே சொல்லி இருந்தால் வேறு யாரையாவது அழைப்பிதழில் போட்டுருப்பாங்க இல்லியா ? வயசாக வயசாக ஒன்னும் புரிய மாட்டேன்குது இவருக்கு என்று கடிந்து கொண்டாள் என் மனைவி.

நம்ம சொன்னால் தட்டமாட்டார்னுதானே அவரை புக் பண்ணுனோம். இப்ப பேக் அடிக்கிறாரே!

விழாக்குழுவினர் தலையில் அடித்துக் கொண்டனர். பின்னர் இருக்காதா பாவம். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த விழாவிற்கு  நிர்வாகத்திடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கினார்கள். எல்லாத்தையும் சொதப்பிட்டாரே சு.பா என்று கடுகடுத்தனர், மங்கை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டுவிழாக் குழுவினர்.

ஐயா! அம்மாவைக் காணோம், எங்கேயா ? அப்போதுதான் உள்ளே நுழைந்த  வேலைக்காரி சரசுவின் குரல்.

அம்மா வீட்டில் இல்லையா ! பக்கத்தில் எங்காவது போயிருப்பாள் என்று சொல்லிவிட்டுப் படாரென்று  அறைக்கதவைச் சாத்தினார் சு.பா.

வேதாளம் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிவிட்டதா?  சரசுவின் மனதில் பழைய அச்சம் வந்துபோனது.

தடாலென்று அவளது காலில் விழுந்தார்.

ஐயா என்னய்யா நீங்க போயி……” இழுத்தாள் சரசு.

என்னை மன்னிச்சிடு சரசு.  நான் அன்னைக்கு உன்னிடம் அப்படி நடந்திருக்கக் கூடாது என்றார் சு.பா

இப்பொழுதுதான்  சரசுக்கே புரிந்தது. அது என்னங்கய்யா. நான் மறந்து எவ்வளவோ வருஷமாச்சு என்றாள் அவள்.

தப்புத் தப்புத்தானே. எத்தனை வருஷமானால் என்ன.. சு.பா

அதையெல்லாம் விடுங்க ஐயா. நீங்கதான் எனக்கு இப்ப நெனவூட்டுறீக. சரசு

இவள் பிரபலமான பெண்ணாக இருந்தால் இந்நேரம் மீ டூவில் (எனக்கும் கூட)பதிந்திருப்பாள். படிக்காதவளாயும் ஏழையாக இருப்பதாலும் இவர்களது மீ டூக்கள் மலருவதே இல்லை. என்வீட்டில் வேலை செய்து சம்பளமும்  சாப்பாடும் அவ்வப்போது உதவிகளையும் பெறுவதால், எஜமான விசுவாசம் அவளது கண்களில்.  அவளது மன்னிக்கும் குணத்தால் மகா சக்தியாகத் தெரிகிறாள் எனக்கு.

நானும் ஆண் மட்டுமல்ல, ஆணாதிக்கம் பிடித்தவன்தான். ஒரு பெண்ணை ஆபாசப் படத்தைப் பார்க்கத் தூண்டினாலும், ஆபாசச் செய்திகளைப் படிக்கத் தூண்டினாலும் பாலியல் தொல்லையில்தான் அடங்கும் என்ற சட்ட நுணுக்கம் பற்றி இப்போதுதான் நானே கேள்விப்படுகிறேன்.

ஏதோ சுமை இறங்கியதைப் போல உணர்வு எனக்குள். தாழிட்ட கதவை நானே திறந்தேன்.  தென்றல் உள்ளேவர புளுக்கம் வெளியேறியது.

சரசு அடுக்களைக்குள் புகுந்துவிட்டாள், வழக்கம்போல்  பாத்திரங்களை எடுத்துவைக்கும் சத்தம் கேட்கிறது.

ஐயா, உடல்நலம் தேறிடுச்சா. இரண்டு மணிநேரத்திற்கு முன்னரே கார் அனுப்பட்டுமா ?  தொலைபேசியில் விழாக்குழு தலைவர்.

நானும் உடல் இன்னும் நலமடையவில்லை என்றே பொய் சொன்னேன்.  உண்மையில் மனம்தான் பிரச்சனை பண்ணுகிறது.

சமூக ஊடகத்தில் வந்திருந்த செய்தி சற்று ஆறுதலாக இருந்தது எனக்கு. இந்தித் திரைப்பட நடிகர் ஒருவரின் கருத்துதான் அது. மி டூவில் குற்றம் சாட்டப்பட்டவருடன் சேர்ந்து வேலைசெய்யக் கூடாது என்பதை  ஏற்கவில்லை அவர். குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஒருவர் குற்றவாளியாகித் தண்டனை பெற்றாலும்கூட அவரைத் தொழிலில் புறக்கணிக்கத் தேவை இல்லை என்றார்.

ஆனாலும் என் மனசாட்சி அந்தக் கல்லூரி விழாவில் பேசுவதற்கும் அங்குள்ள மாணவிகளுக்கு நான் ஏதேனும் சொல்வதற்கும் எனக்குத் தகுதி இல்லை என்றே கூறுகிறது.

வீட்டுத் தொலைபேசியின் ரிசீவரை எடுத்துக் கீழே வைத்தவர், கைப்பேசியையும் அணைத்துவிட்டார் சு. பா.

உழைத்து உண்

உழைத்து உண்

ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன் 

௫ கழுகு , தன் குஞ்சுடன் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டி௫ந்தது .
" அம்மா !  எனக்கு ரொம்பத் தாகமா இ௫க்கு ; குடிக்கத் தண்ணி வேணும் " என்றது குஞ்சு .
"கொஞ்சம் பொறு ; தண்ணி எங்கே இ௫க்குதுன்னு பாா்க்கிறேன் . ம்ம்ம்ம்...........
அதோ ! அந்த வீட்டின் கொல்லைப் புறத்திலே உள்ள ஒ௫ பானையில் கொஞ்சம் தண்ணி இ௫க்குது . வா ! நாம் போய்க் குடிக்கலாம் " என்றது தாய்க் கழுகு .

கழுகும் , குஞ்சும் பறந்து வந்து அந்தப் பானையின் விளிம்பின் மீது அமா்ந்தன .பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீா் இ௫ந்தது . அது கழுகுக்கும் , அதன் குஞ்சுக்கும் எட்டவில்லை .

"அம்மா ! தண்ணி எனக்கு எட்டலையம்மா ! "
என்று சொல்லி அழுதது கழுகுக் குஞ்சு.

" கவலைப்படாதே ! ஏதாவது ஒ௫ வழி பிறக்கும்.
அதுவரையில் அந்த மரத்தின் கிளை மீது உட்காா்ந்தி௫ப்போம் வா ! " என்று சொல்லி தன் குஞ்சுடன் அங்கி௫ந்த ஒ௫ மரத்தின் கிளை மீது அமா்ந்தது கழுகு .

சிறிது நேரம் சென்றது .அப்போது அங்கு ஒ௫ காகம் வந்தது. அதுவும் தண்ணீரைத் தேடியலைந்து களைத்தி௫ந்தது . பானையின் மேலே ஏறி நின்று பார்த்தது. பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீா் இ௫ப்பதைக் கண்டு காகம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டது . தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது . ஆனால் பாவம் ! காகத்திற்கும் தண்ணீா் எட்டவில்லை .

தண்ணீா் எட்டவில்லையே என்று காகம் வ௫த்தப்படவில்லை . அங்குமிங்கும் பார்த்தது .
பானைக்குப் பக்கத்தில் கொஞ்சம் கூழாங்கற்கள் குவியலாகக் கிடந்ததைக் காகம்  பார்த்தது . உடனே செயலில் இறங்கியது . ஒவ்வொ௫ கல்லாக எடுத்து வந்து பானைக்குள் போட்டது . தண்ணீா் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது . தண்ணீா் பானையின் விளிம்பைத் தொட்டவுடன் காகம் மிகுந்த மகிழ்வுடன் நீரைக் குடிக்க ஆரம்பித்தது
இந்த த௫ணத்திற்காகத்தான் கழுகு காத்தி௫ந்தது . மரத்தின் கிளையிலி௫ந்து சரேலெனக் காக்கையின் மீது பாய்ந்தது . இதைச் சற்றும் எதிா்பாராத காக்கை , தப்பித்தோம் , பிழைத்தோம் என்று பறந்து மறைந்தது . கழுகு ஆசை தீரத் தண்ணீரைக் குடித்தது . தன் குஞ்சையும் தண்ணீா் அ௫ந்தக் கூப்பிட்டது . குஞ்சு , பறந்து வந்து தாயின் அ௫கில் அமா்ந்தது . நீா் அ௫ந்தாமல் தாய்க் கழுகையே பாா்த்துக் கொண்டி௫ந்தது .

" ஏன் சும்மா இ௫க்கிறாய் ? தண்ணீரைக் குடி "
என்றது தாய்க் கழுகு .

" அம்மா ! அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா ! அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் ! அடுத்தவா் உழைப்பை நாம் தி௫டுவது பாவம் அம்மா ! "
என்றது கழுகுக் குஞ்சு .

" ஏய் ! மூடனே ! பேசாமல் தண்ணீரைக் குடி . தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்தி௫க்கும் தேனை மனிதன் தி௫டி உண்கிறான் ; தன் கன்றுக்காகத் தாய்ப் பசு சேமித்து வைத்தி௫க்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான். அதெல்லாம் தவறு இல்லையென்றால் , இதுவும் தவறு இல்லை. பிழைக்கின்ற வழியைப் பாா் ! பேசாமல் தண்ணீரைக் குடி ! " என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .
ஆனால் தாயின் பேச்சைக் கேட்காமல் குட்டிக் கழுகு பறந்து சென்றது .

தெண்ணீா் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில் . ( 1065 )

பொ௫ள் : தெளிந்த நீா்போல சமைத்த கூழே ஆயினும் , நம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

எந்தமிழ்


எந்தமிழ்
    சியாமளா ராஜசேகர்

முன்னவள் சுவையில் இனியவள் கன்னல்
***மொழியவள் இளமை யானவள் !
தன்னிக ரின்றித் தனித்துவ மாகத்
***தரணியை ஆளும் தன்மையள் !
நன்னய மிக்க இலக்கண வளமும்
***நல்லிலக் கியங்கள் கொண்டவள் !
தென்னவன் மன்றில் வளர்ந்தவள் புவியில்
***செம்மொழி யாகச் சிறந்தவள் !!

இயலுடன் இசையும் நாடக மென்றே
***இயல்பினில் மூன்றா யானவள் !
உயிரொடு மெய்யும் உயிர்மெயு மாகி
***ஓரெழுத் தாய்த மானவள் !
துயருறும் போது சுகம்பெற தமிழே
***துடைத்திடும் கையாய் நீள்பவள் !
தயவுடன் விரும்பும் அன்னியர் தமக்கும்
***தமிழமிழ் தம்போல் சுவைப்பவள் !!

கல்லையும் கனியச் செய்பவள் தம்மைக்
***கற்பவ ருள்ளம் நிறைபவள் !
வெல்லமாய் நாவில் இனிப்பவள் என்றும்
***வெற்றிகள் ஈட்டித் தருபவள் !
நல்லறம் காட்டி மிளிர்பவள் வாழ்வில்
***நைந்திடா வண்ணம் காப்பவள் !
வல்லவள் ழகரச் சிறப்பவள் எங்கும்
***மணப்பவள் வாழி வாழியே !!