மீடூ (எனக்கும்
கூட)
வலைநாடன்
“ஐயா உங்களை நம்பித்தான்
இருக்கிறோம்” கட்டாயம் வந்துடுங்க.
ஆகட்டும் என்று தலை அசைத்தது இன்னும் நினைவில் வந்து போகிறது.
அவர்கள் மூன்று
மாதங்களுக்கு முன்னரே விழாவில் சிறப்பு விருந்தினர் நான்தான் என்று உறுதிப்படுத்தி, ஒப்புதலும் வாங்கி
விட்டனர். இப்போது விழாவிற்கு வரமுடியாது என்றால் ஏற்றுக்கொள்வார்களா? ஏன் என்மனம் என்னவெல்லாம்
சொல்கிறது. தன்னுள் பலவாறு
எண்ணிக்கொண்டிருந்தார் சு. பா (என்ற சுந்தர பாண்டியன்).
ஊரில் உள்ள ஒரே
பழம்பெருமை வாய்ந்த கல்லூரியின் முதல்வர் என என்மீது அதிக மதிப்பு
வைத்திருக்கின்றனர். எல்லா இலக்கிய விழாவிற்கும் என்னைத் தவறாமல் அழைப்பார்கள்.
ஏதோ கவிதை பாடுவேன், கட்டுரை வாசிப்பேன், உரையாற்றுவேன் என்று
வைத்துக் கொள்ளுங்கள்.
இம்முறை ஒரு பெண்கள்
கல்லூரி ஆண்டுவிழாவிற்குச் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்துள்ளனர்.
இந்த மீடு (எனக்கும் கூட)
போக்கு என்னைச் சுயபரிசோதனை செய்யத் தூண்டுகிறதே.
“உங்களுக்கு என்ன கிறுக்கா
பிடித்திருக்கிறது. கடைசி நேரத்தில் வரமாட்டேன் என்றால் ஒத்துக்கிருவாங்களா ? முன்னாலே சொல்லி
இருந்தால் வேறு யாரையாவது அழைப்பிதழில் போட்டுருப்பாங்க இல்லியா ? வயசாக வயசாக ஒன்னும்
புரிய மாட்டேன்குது இவருக்கு” என்று கடிந்து கொண்டாள்
என் மனைவி.
“நம்ம சொன்னால்
தட்டமாட்டார்னுதானே அவரை புக் பண்ணுனோம். இப்ப பேக் அடிக்கிறாரே!”
விழாக்குழுவினர் தலையில்
அடித்துக் கொண்டனர். பின்னர் இருக்காதா பாவம். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த
விழாவிற்கு நிர்வாகத்திடம் கெஞ்சிக்
கூத்தாடி அனுமதி வாங்கினார்கள். எல்லாத்தையும் சொதப்பிட்டாரே சு.பா என்று
கடுகடுத்தனர், மங்கை கலை மற்றும்
அறிவியல் கல்லூரி ஆண்டுவிழாக் குழுவினர்.
“ஐயா! அம்மாவைக் காணோம், எங்கேயா ?” அப்போதுதான் உள்ளே
நுழைந்த வேலைக்காரி சரசுவின் குரல்.
“அம்மா வீட்டில் இல்லையா !
பக்கத்தில் எங்காவது போயிருப்பாள்” என்று சொல்லிவிட்டுப்
படாரென்று அறைக்கதவைச் சாத்தினார் சு.பா.
“வேதாளம் மீண்டும் முருங்க
மரத்தில் ஏறிவிட்டதா?” சரசுவின் மனதில் பழைய
அச்சம் வந்துபோனது.
தடாலென்று அவளது காலில்
விழுந்தார்.
“ஐயா என்னய்யா நீங்க போயி……” இழுத்தாள் சரசு.
“என்னை மன்னிச்சிடு
சரசு. நான் அன்னைக்கு உன்னிடம் அப்படி
நடந்திருக்கக் கூடாது” என்றார் சு.பா
இப்பொழுதுதான் சரசுக்கே புரிந்தது. “அது என்னங்கய்யா.
நான் மறந்து எவ்வளவோ வருஷமாச்சு “ என்றாள் அவள்.
“தப்புத் தப்புத்தானே.
எத்தனை வருஷமானால் என்ன..” சு.பா
’அதையெல்லாம் விடுங்க ஐயா.
நீங்கதான் எனக்கு இப்ப நெனவூட்டுறீக.” சரசு
இவள் பிரபலமான பெண்ணாக
இருந்தால் இந்நேரம் மீ டூவில் (எனக்கும் கூட)பதிந்திருப்பாள். படிக்காதவளாயும்
ஏழையாக இருப்பதாலும் இவர்களது மீ டூக்கள் மலருவதே இல்லை. என்வீட்டில் வேலை செய்து
சம்பளமும் சாப்பாடும் அவ்வப்போது
உதவிகளையும் பெறுவதால், எஜமான விசுவாசம்
அவளது கண்களில். அவளது மன்னிக்கும்
குணத்தால் மகா சக்தியாகத் தெரிகிறாள் எனக்கு.
நானும் ஆண் மட்டுமல்ல, ஆணாதிக்கம்
பிடித்தவன்தான். ஒரு பெண்ணை ஆபாசப் படத்தைப் பார்க்கத் தூண்டினாலும், ஆபாசச் செய்திகளைப்
படிக்கத் தூண்டினாலும் பாலியல் தொல்லையில்தான் அடங்கும் என்ற சட்ட நுணுக்கம் பற்றி
இப்போதுதான் நானே கேள்விப்படுகிறேன்.
ஏதோ சுமை இறங்கியதைப் போல
உணர்வு எனக்குள். தாழிட்ட கதவை நானே திறந்தேன்.
தென்றல் உள்ளேவர புளுக்கம் வெளியேறியது.
சரசு அடுக்களைக்குள்
புகுந்துவிட்டாள், வழக்கம்போல் பாத்திரங்களை எடுத்துவைக்கும் சத்தம்
கேட்கிறது.
“ஐயா, உடல்நலம் தேறிடுச்சா.
இரண்டு மணிநேரத்திற்கு முன்னரே கார் அனுப்பட்டுமா ?” தொலைபேசியில் விழாக்குழு தலைவர்.
நானும் “உடல் இன்னும்
நலமடையவில்லை” என்றே பொய் சொன்னேன்.
உண்மையில் மனம்தான் பிரச்சனை பண்ணுகிறது.
சமூக ஊடகத்தில்
வந்திருந்த செய்தி சற்று ஆறுதலாக இருந்தது எனக்கு. இந்தித் திரைப்பட நடிகர்
ஒருவரின் கருத்துதான் அது. மி டூவில் குற்றம் சாட்டப்பட்டவருடன் சேர்ந்து
வேலைசெய்யக் கூடாது என்பதை ஏற்கவில்லை
அவர். குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஒருவர் குற்றவாளியாகித் தண்டனை பெற்றாலும்கூட அவரைத்
தொழிலில் புறக்கணிக்கத் தேவை இல்லை என்றார்.
ஆனாலும் என் மனசாட்சி
அந்தக் கல்லூரி விழாவில் பேசுவதற்கும் அங்குள்ள மாணவிகளுக்கு நான் ஏதேனும்
சொல்வதற்கும் எனக்குத் தகுதி இல்லை என்றே கூறுகிறது.
வீட்டுத் தொலைபேசியின்
ரிசீவரை எடுத்துக் கீழே வைத்தவர், கைப்பேசியையும்
அணைத்துவிட்டார் சு. பா.
No comments:
Post a Comment