தீட்டு
ம
ன்னை
ஜீவிதாஅரசி
ஏங்க ... இவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதே..
இந்த வருடமாவது மாப்பிள்ளை பேசி முடிச்சிடனும்.. அந்த புரோக்கர் சொன்ன இடம் ரொம்ப
வசதியான இடம்னு சொன்னாரே..
ஆமாம்மா .. பேசிப் பாப்போம் ரொம்ப
எதிர்பார்த்தா இருக்கும் தென்னந்தோப்ப வித்தாவது தடபுடலா கல்யாணத்த நடத்திட
வேண்டியதுதான்...!!
இந்த மூனாவதும் வேற சடங்காகி நிக்குது
.இருக்கறதும் ஒரே தோப்பு அதையும் வித்துபுட்டா சோறுக்குதான் கையேந்தனும். பாத்து
யோசிச்சு செய்யுங்க..
எல்லாம் கடவுள் பாத்துக்குவாரு கவலைப்பாடாத
...
அங்க மாடு வேற
தண்ணிக்குக் கத்துது பாரு ... !!
ஆமாங்க...
சின்னவ வேற அந்த குச்சு
வீட்ல தனியா இருக்கா சாப்பாடு கொடுத்துட்டு.. மாடுகளுக்கும் தண்ணியைக் காட்டிட்டு
வாரேன்.. நீங்க சாப்பிட்டுக் கிட்டிருங்க.
அம்மாடி செய்தியையும் செத்த வையுடா ராசாத்தி..
(என்ற அப்பாவின் அடுத்தச் சொல்லில்..
சரிப்பா என செய்தி பக்கம் வைக்க..
இவள் கூறியது போல்
அனைத்து சேனலிலும்..
புயலில்
முன்னெச்சரிக்கையாக ஆதார் அட்டை
குடும்ப அட்டை
பணம் எடுக்கும் பேங்க்
அட்டை மற்றும் அத்யாவ்சய பொருட்களை எடுத்துக் கொண்டு.... மின்சாதனங்களை நிறுத்தி
வைத்து.. சிலிண்டர் எல்லாம் மூடி வைத்து ..
நிவாரண முகாமிற்கு
செல்லும்படி ..மாற்றி மாற்றி அறிவுரைகள்..!!)
அப்பா.. பாத்தியா நா அப்பவே சொல்லல இந்தா
வருது அந்தா வருதுன்னு நாளு நாளா இதே நியூஸூதான்.
யப்பா .. நா ஜெயாக்கா
வூடு வரைக்கும் போய்ட்டு வாரேன் அம்மா கிட்ட சொல்லிடுங்க.. நீங்களாம் இந்த
நியூஸையே கட்டிக்கிட்டு அழுவுங்க...
( அடியே சாப்ட்டு போடி...
வேலை முடித்து
வீட்டிற்குள் வந்தபடியே அம்மா குரல் கொடுக்க..)
அதெல்லாம் வேண்டாம் அக்கா வீட்லயே
சாப்பிட்டுக்கறேன்.. நா போற போ...
(எனப் பொய் சொல்லி..
குச்சிற்குள் தனியாக
இருக்கும் தங்கைக்கு துணையாக வந்தமர்ந்து.. . சோகமாக அமர்ந்திருக்கும்
தங்கையிடம்.. )
ஓய் என்னடி காலைலேர்ந்து இங்கேயே
கெடக்குறியே போரடிக்கலையா..??
அடப் போக்கா.. ஏந்தான்.. இந்த சடங்கு
சம்ப்ரதாயம்னு இந்த காலத்திலும் படுத்தறாங்களோ.. ??
ம்ம் .. உண்மை தான் டி .. எவ்ளோ தான் நாடு
ஹைடெக்கா ஆனாலும் பழக்க வழக்கம் மாறாதுல்ல அதுலயும் நம்ம ஊரு இன்னும் அந்த காலம்..
இங்க வரவே கூடாதுன்னு
அம்மா சொன்னுச்சு இருந்தாலும் செத்த உங்கூட பேசிட்டுறுக்கலாம்னு வந்தேன்..
ஜெயாக்கா வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லி விட்டு.
ம்ம் ..ஆமாம் கா செம பயம்.. இந்த வயித்து வலி
வேற ரொம்ப முடியலக்கா.. . !!
... ..ச்சோ இதுக்கெல்லாம் பயப்படலாமா.. சாப்ட்டியா இல்லையா .. ??
அடப்போக்கா.. டெய்லி உளுந்தங்களி..முட்டையே
கொடுத்துப் படுத்துறாங்க..
செம போர்...அம்மா வேற
"சாப்பிடல அடி விழும்னு" சொல்லித் திட்டிட்டுப் போயிருக்கு..
"ஏய் அதெல்லாம்
சாப்ட்டாதான்டா வலி வராது."
ம்க்கும் நீயே சாப்பிடு எனக்கு வேண்டாம்..
ம்ஹூம் அதான ஆகாது அம்மா பாத்தா அடிப்பாங்க
வா இரண்டு பேரும் சேர்ந்து சாப்டலாம்..
அக்கா நானிருக்கேன்ல
அப்றம் என்ன.. கவலை விடு.. சாப்பிடு..!!என
அந்த குட்டிக்
குடிசைக்குள் அம்மாவின் கண்ணில் படாது தங்கைக்குத் துணையாக வந்தமர்ந்து..
தங்கையை சாப்பிட வைத்துப்
..
போனை வைத்துக் கொண்டு
பாட்டு கேம்ஸ்..விளையாட்டென நேரம் போனதே
தெரியாதிருக்க......!!)
" இவல்லாம் உருப்படவா
போறா.. என்னைக்கு இவள தொலைச்சி தலைமுழுகறேனோ அப்பதான் மத்ததுங்களுக்கு வழி
பொறக்கும்" மத்தியானம் போனவள இன்னும் காணோம் பாரு ..!!
என்று அம்மாவின் கத்தல் கொல்லைப்புறம்
கேட்க.. " சரிடி பத்திரமா இரு அம்மா
இனி பத்ரகாளியாய்டும் நா போறேன் சரியா..!!??
ம்ம் சரிக்கா அம்மா கிட்ட மாட்டிக்காத"
ம்ம் சரிக்கா ..நீ பத்ரமா போ ..அம்மாகிட்ட
மாட்டிக்காதன்னு கூறியவளைப் பார்த்துச் ...சிரித்தபடியே "சரிசரி பாட்டியம்மா
நீங்க பத்ரமா இருங்க "
என்றபடி கிளம்பியவள் ..
மெல்ல எட்டிப் பார்த்து
அம்மா இல்லை என உறுதி செய்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து வருபவளை நோக்கி
"எரும எரும.. பொட்டக் கழுதைக்கு இத்தனை மணி நேரம் அடுத்த
வீட்டில் என்னடி வேலை"
எனத் திட்டத் துவங்கிய
அம்மாவின் திட்டலைக்
காதில் வாங்காமல் ரசித்தபடியே..
பாடப்புத்தகங்களை எடுத்துக் கொண்டு..ரூமிற்குள் சென்றாள்.
"அம்மா.. சீக்கிரம்
சாப்பிட்டு எல்லாம் கெளம்புங்க நிவாரண முகாமுக்குப் போய்டுவோம்". என அண்ணன்
கூறியபடியே வேக வேகமாக வந்தான்..
டேய் ...அதெல்லாம் வேண்டாம் டா நம்ம வீடு அந்த
கால பரம்பரை வீடு எத்தனை வெயிலு மழையும் தாங்கும் இந்த புயலையா தாங்காது...?
புயலெல்லாம் வராது போ போய் வேலைய பாரு..
சின்னவ வேற குச்சுக்குள்ள இருக்கா அவள எங்க அழைச்சுப் போறது எனக் கூறும்
அம்மாவிற்கு பதில் கூற இயலாது .. டேங்கில் தண்ணீர் நிரப்பி . விறகு எடுத்து
வைத்து.. மெழுகுவர்த்தி..கொசுவர்த்தி என வாங்கி வரும் மகனிடம்..
டேய் நடுவுளவளுக்கு ஒரு போன போட்டு
கொடுடா.. எப்படி இருக்கானு கேக்கனும்... நீ செய்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எல்லாம் கண்டாத்தான் பயமாருக்கு...எனச் சொல்லும் அம்மாவிற்கு போன் செய்து தந்து
விட்டு... அலைபேசியை திறந்தவனுக்கு..
நக்கலும் கேலியுமாக
வந்திருந்த புயலுக்கான விமர்சனங்களைப் படிக்க படிக்க ...
இன்று இரவு புயல் வருமா
வராதா என்ற..சந்தேகமும் தொற்றிக் கொண்டது
யோசனையோடு நடந்தபடி
இருக்கும் அப்பாவிடமும் அதேசந்தேகம் .. முகத்தில்.. தோன்றுவது நன்கு தெரிய...
நிமிடங்கள்.. மணிகளாக..
எட்டு மணிதொடும் நேரம்.. லேசான காற்றுடன் மழையும் துவங்கிட.. ... 110 கிமீ வேகத்தில் காற்று
வீசும் .. பத்திரம் பத்திரம் என மாற்றி மாற்றி அறிவிப்பு..!!
வந்திட வந்திட.. கொஞ்சம்
பயமும் கவலையும் அனைவருக்கும் தொற்றிக்கொள்ளவே செய்தது...
அப்பா.. இன்று புயல் வருமா வராதா..??
தெரியலைப்பா.. ஆனா கொஞ்சம் பயமாத்தான்
இருக்கு ..!!
சரி சரி அனைவரும் சீக்கிரம் சாப்பிட்டு
படுங்கள் நான் போய் சின்னபாப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து வருகிறேனெனச் சொல்லி அம்மா செல்ல.
அப்பா நிஜமாவே புயல் வருமா.. புயல் வந்தால்
எப்படிப்பா இருக்கும்.. கூரை லாம் பறக்குமாப்பா..?? 110 கிமீ வேகத்தில் காத்து வீசும்ன்னு
சொல்றாங்கம்மா .. கொஞ்சம் பயமாதாம்மா இருக்கு ..
பாத்துக்கலாம்மா பயப்படமா போய் தூங்குமா..!!
அங்க தங்கச்சியே தனியாருக்கா இங்க எல்லோர்
கூட இருக்கும் உனக்கென்னடி.. ?
எப்பப்பாரு
தொணதொணன்னுட்டு
எனச் சொல்லியபடியே மீண்டும் வந்த அம்மா
அனைவருக்கும் உணவெடுத்துப் பரிமாற.. புயலோடு கொஞ்சம் வெட்டிக் கதைகள் பேசியபடி
அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் கரெண்டு
போகவும் சரியாக இருக்க..!!
காற்றின் வேகம் கொஞ்சம்
கொஞ்சமாக அதிகமாக அதிகமாக அனைவரின் வயிற்றிற்குள்ளும் பயப்பந்து கொஞ்சம் கொஞ்சமாக
சுழலத் துவங்கியது. ஆனால் ராசாத்திக்கோ தங்கை எப்படி இருப்பாளோ எனக் கவலை மட்டும்
நெஞ்சிற்குள் அதிகமாக...
அம்மா தங்கச்சிய வீட்டுக்குள்ள அழைத்து
வந்தரலாமாமா ..??
ஏய் அவ தீட்டுடி உள்ள வரக்கூடாது.. காத்து
நின்னுடும் கொஞ்ச நேரத்தில்.. அவ பத்ரமாதான் இருப்பா.. மகமாயி காப்பாத்துவா..
எனச் சொல்லும் அம்மாவிடம் பேசி ஜெயிக்க
முடியாது என்று அப்பாவும் அண்ணனும் அமைதியாக இருக்க ..
அம்மாவின் மேல் அதீத
கோபத்தில் முறைத்தப்படி
படுத்திருந்தவளுக்குப்
புயலின் வேகமும் speedo meter போல்... எகிறிக் கொண்டே
சென்றிடக்.. கொல்லைப் புறம் ஒடிந்து விழுந்திடும் மரங்களின் சத்தமும்....வீட்டில்
ஓடுகள் ஒவ்வொன்றாக நொறுங்கிக் கீழே விழத் துவங்கவும் ...?,
அதற்குமேல் பொறுக்க
மாட்டாது
அம்மா நான் போய் தங்கச்சிய கூப்ட்டு வாரேன்
சொல்லி ஓட.. ஏய் போவதடி அவ வீட்டுக்குள்ள
வரக்கூடாது டி .. அம்மாவின் குரல் துரத்த..
அவ வரக்கூடாது என்றால் நானும் வரல வாமா போய்
கூப்பிட்டு வருவோம்
என துணையாக அண்ணனும் கிளம்பக்...கதவைத் திறக்க
முடியாதபடிக்குத் தள்ளிடும் காற்றைத் தள்ளியபடி இருவரும் தங்கை இருக்குமிடம் ஓடப்
பயந்து நடுங்கியபடி கோழிக்குஞ்சாய் நின்ற தங்கை...
இருவரையும் கண்டதும்
... அக்கா.......ஆஆஆ.. எனக் கட்டிப்பிடித்துக் கதறியழுதாள்.!!
அழுதவளைத்..தேற்றி
.. அழைத்து வருவதற்குள் அடுத்த பேய்க்காற்று சுழன்று சுழன்று
அடிக்க.. !.தங்கையையும் அண்ணனையும் முன்னே அனுப்பி கடைசியாக உள்ளே நுழைய முயன்ற
ராசாத்தி மீது தென்னை மரம் அப்படியே
வீழ்ந்து நசுக்கிட..,,
அம்மா...ஆஆஆஆஆ
என்று அலறியபடி வீழ்ந்திட்ட ராசாத்தி..
தங்கை அண்ணனைக் காப்பாற்றிய மகிழ்ச்சியோடு மரத்தின் அடியில் நசுங்கி மடிந்தாள்.
வெளியேயும் வரமுடியாது.. உள்ளேயும் நிற்க
முடியாது பறக்கும் ஓடுகளும்.. தொப் தொப்பென்று .. சிதறி விழும்
ஓடுகளும்..ஆங்காங்கே முறிந்து விழும் மரங்களுமெனக்...
கர்ணக் கொடூரச் சத்தத்தை
எழுப்பியபடி விடாது சுழன்றடிக்கும்... பேய்க் காற்றில்.. சுவரோடு சுவராகத்.
தீட்டென்று ஒதுக்கி வைத்த சின்னவளை... இறுக
அணைத்தப்படி.. அனைவரின் அழுகைக் குரலும்... காற்றிலே கரைந்தது.
.. கண்ணீர் வடித்தபடி....
நின்றிட்ட நிமிடங்கள் யுகங்களாகிட...ஓடுகளற்ற வெற்றுச்சாளரங்களூடே
யாருக்கும் வந்திடக்
கூடாது இப்படியோர் விடியலென்றபடி ... விடிந்திட்ட கோர விடியலின்...காட்சியின்
சாட்சியாய்..!!
வெளிச்சப்புள்ளி தெரிந்து
காற்றின் வேகம் சற்றுக் குறைந்ததுமே...
பைத்தியம் போல்..
தலைவிரிக் கோலமாய்...
வீழ்ந்து கிடக்கும்
தென்னை மரங்களினடியில் தன்னை மறந்து தன்னிலை மறந்து வந்தமர்ந்தவளுக்குத்
தீட்டும் சம்பிரதாயமும்
மடிந்திட..
கைகள் மட்டும்
தங்கையை
அணைத்தப்படி..விடாது பற்றியிருக்க.. ..!!
அந்த கழுத எங்கப் போச்சு.. இத்தனை
மணியாகியும் இன்னும் வரல... வரட்டும் இன்னைக்கு காலிலேயே சூடு வைக்கிறேன்
என்று புலம்பியபடி ...தன்னை மறந்து தன்னிலை
மறந்து புலம்பியபடி ... காற்றோடு பேசியபடி வெறித்த பார்வையோடு அம்மாவும்... அழுது
அரற்றியபடி .. தங்கையும் ...!!
இவளைத் தொலைச்சி தலைமுழுகுனாதான்..
மத்ததுங்களுக்கு வழிபொறக்கும் என்ற அம்மாவின் வார்த்தையை மெய்யாக்கியிருந்தது.!!
கஜாப் புயலில்
மடிந்தவர்களுக்கு பத்துலெட்சம் நிவாரண உதவியாமுல.. முதல்வர் அறிவிச்சிருக்காராம்
No comments:
Post a Comment