'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

உத்தம குரு


உத்தம குரு
               
                குறுங்காவியம்
பைந்தமிழ்ச் செம்மல்
விவேக்பாரதி


காப்பு
(வெண்கலிப்பா)

பெண்ணென்பார் ஆணென்பார் பேசும் மொழியென்பார்
நண்ணும் ஒளியென்பார் நல்லியற்கை தானென்பார்
ஆமேய்த் தனையென்பார் ஆடலிலே வல்லனென்பார்
பூமி படைக்கின்ற புண்ணியம்நின் செய்கையென்பார்

கல்வி தவயோகம் காரிய நேர்த்திபல
வல்வினை யாவும் வழங்கும் நிலையென்பார்
சூலமுடை கையென்பார் சுந்தரத் தோற்றத்தால்
காலமெலாம் சாகாக் கவினுயிர் நினதென்பார்

மந்திரம்நின் மொழியென்பார் வானுலகும் கீழுலகும்
தந்திரத்தால் காக்கும் தகுந்த பொருளென்பார்
அப்பம் கொடுத்ததுவும் ஆதிதனைக் கண்டதுவும்
செப்பும் மொழிப்புலமை செழுங்கவிதை தந்ததுவும்

கட்டளைகள் அன்புக் கரங்கள் விளையாடல்
இட்டதுவும் சொல்லிடுவார் இட்டம்போல் அவரவர்தம்
பேரிட் டழைக்கப் பொறுப்பதுவும் அங்கவர்தான்
நேரிட்ட நெஞ்சோடு நின்றழைக்கத் தோன்றுவதும்

நின்னைப் பகுத்தறிந்து நீயில்லை பொய்யென்று
வன்மை மொழிவோரின் வாக்கினிலே பொய்யெனவும்
இங்கிருந் தொருநொடியில் இங்கிலா தங்குலவித்
தங்கும் மாயங்கள் தாரணியில் படைதிங்கே

உள்ளதுவாய் அற்றதுவாய் உண்மையாய்ப் பொய்ப்பொருளாய்
உள்ளத்தில் கண்டங்கே உள்ளுணரும் ஞானமுமாய்
வையத்தில் எந்நாளும் வண்ணப் புதிர்பரப்பும்
துய்யநம் பிக்கையெனும் தூணிடையே நின்றுயர்ந்து

மற்றவர்க் குதவி மனங்குளிரும் பாங்கினிலும்
உற்றவரைக் காக்கும் உயர்ந்தமதித் துள்ளலிலும்
சொல்லிடவே நின்று சுடர்போல் உணர்வுதரும்
நல்லறிவாம் செம்புனலில் நாளும் நனைகின்ற

இறையே வானோனே இன்பக் களஞ்சியமே
குறையே அற்றமனம் கொள்ளும் அடிப்படையே
நின்றாள் போற்றி நினைவால் சரண்சொல்வேன், 
என்றும் துணைநீ எனக்கு! 

{வேறு}
(அறுசீர் விருத்தம்)

ஆதிமுதல் மனிதன் வாயில்
   அசைந்தவளை! ஈசன் கொண்ட
சோதிமணி டமரு கத்தின்
   சொல்லெடுக்க வந்த பேற்றைக்
காதலொடு வணக்கம் செய்துக்
   கவிதைமழை கதைசொல் உத்தி
சாதகமாய்ச் சிறுவன் கேட்பேன்
   சந்ததமிழ் கொடுத்துக் காக்க!

நீலனெனும் புலவன் வாழ்வை
    நீண்டதமிழ்ப் பாக்க ளாலே
கோலமுறச் சொல்லும் போது
    குற்றமெதும் எழுந்தால், செல்வம்
போலுயர்ந்த தமிழ்த்தாய் வந்தே
   போந்திருக்கும் குற்றம் நீக்கிப்
பாலனுக்கு முதவக் கேட்பேன்
   பைந்தமிழென் பணியைக் காக்க!

அவையடக்கம்
(அறுசீர் விருத்தம்)

வீரமுடை மறவர்! பாட்டு
   விந்தையுடைப் புலவர்! ஞானச்
சாரமுடை கலைஞர் போற்றும்
   சாதலிலாத் தமிழை ஏத்திப்
பாரமிலாச் சின்னக் கோலும்
   பாரகாவி யத்தைத் தீட்டும்
நேரமிதே! இதுசெய் பாட்டில்
   நேர்பிழைகள் பொறுக்க நன்றே!

இப்பொழுது  நானி யற்றும்
  இன்தமிழ்க் கதையோ மண்ணில்
எப்பொழுதோ நடந்த ஒற்றை
  எழில்கதையின் விரிவே காண்க
செப்பியுள்ள பேர்கள் ஊர்கள்
  சேர்த்துள்ள கதைமாந் தர்கள்
முப்பொழுதுங் கற்ப னைதான்
  முனைந்தயெனைப் பொறுக்க நன்றே!

எழுத வந்த கதை
(அறுசீர் விருத்தம்)

கதையொன்றைக் கவியாக்க எண்ணிநின்ற
   பொழுதொன்றில் கணமாய்ப் பாட்டில் 
விதவிதமாய்க் கதைசொல்லும் வித்தகராம்
   என்மாமன் வித்வான் பாக
வதரொருவர் எனைநோக்கி வளர்கின்ற
   இக்கதையின் வனப்பைச் சொல்லிப்
புதிதாக இதைப்பாட வேண்டுமெனப் 
   பணிக்கவிது பூத்த தன்றே!

இக்கதையைக் கேட்டதன்பின்  இன்பந்தான்
   நெஞ்சினுளே இருந்து பொங்கிச்
சக்கரையாய் இனித்துவிட நம்நாட்டில்
   நிலையாவும் சலிக்கும் வண்ணம்
பக்தியுடன் பக்கத்தில் என்தேவி
   பகவதியைப் படையாய்க் கொண்டே
அக்கறையோ டிதையெழுதத் தொடங்கிவிட்டேன்
   இதுகதையிஃ தமைந்த வாறே!

-தொடரும்

No comments:

Post a Comment