சரஸ்வதிராசேந்திரன்
நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். "என்னாப்பா அநியாயமா இருக்கு, இந்த பெண்களோட மனசைப் புரிஞ்சுக்கவே முடியலப்பா" வரது பேசினான்
"என்னடா திடீர்னு பெண்கள்மேட்டருக்கு போனே, என்ன விஷயம்?" கேட்டான் விஷால்.
"அதற்கு முன்பெல்லாம் ஆண்கள்தான் கண்டிஷன் போட்டாா்கள். பெண்கள்னா இப்படி இப்படியெல்லாம் இருக்கணும்னு, இப்ப அவா்கள் போடுற கண்டிஷனைக் கேட்டால் நம்ம ஒருத்தனுக்கும் கல்யாணம் நடக்காது போல இருக்கு" வரது விரக்தியா பேசினான்.
"என்ன நடந்தது,விவரமா சொல்லு"
"நம்ம கோபால் இருக்கானே, அவனுக்கென்ன குறைச்சல்? நல்ல வேலை, நல்ல படிப்பு, ஆளும் அழகாத்தான் இருக்கான், அவன் பெற்றோர் அவனுக்கு பெண்பார்த்தார்கள், அந்தப் பெண் இவனைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டு, கடைசியா உன்கிட்ட கார் இருக்கா, ஏன்னா நான் வெளியிலே போனா காரிலேதான் போவேன்" என்று பெண்ணே கேட்க, கோபமடைந்த கோபால், நீ கார் வைச்சிருக்கவனா பார்த்து கட்டிகோன்னு சொல்லிவந்துட்டான்".
அவனுக்கு வயது ஆகுதேன்னு பெற்றோர்கள், காலம் மாறிட்டு; காரும் ஒரு ஸ்டேட்டஸ் போல பயந்து, வேறொரு இடத்தில் பெண்பார்க்கப் போவதற்குள் கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி நிறுத்தினர்.
சில நாட்களில் ஒரு வரன் வந்தது. பெண் குடும்பம் சுமாரான குடும்பமா இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறிய குடும்பம். பெண்ணும் நன்றாக இருந்தாள். கோபாலுவின் பெற்றோருக்கு இடம் பிடித்து இருந்தது. எளிமையான குடும்பம். பிரச்சனை இல்லை என எண்ணி முயற்சி செய்தார்கள்.
கோபாலின் படிப்பு, வேலை எல்லாம் பெண்வீட்டுக்குப் பிடித்திருந்தது, அந்த பெண்ணின் சம்மதம் கேட்டனர் பெற்றோர். அவள் சொன்னாள் "இது சரியா வராது அப்பா" என்றாள்.
"ஏம்மா, நீ கேட்ட படிப்பு இருக்கு, வேலை இருக்கு, அப்புறம் என்ன?"
"அவர் ரொம்ப செலவாளியா இருப்பார் போலிருக்கு, சொந்தமா வீடுகூட இல்லே. இதிலே காா் என்ன வேண்டிக்கிடக்கு? நாம சிக்கனமா வாழ்ந்து முன்னேறியவங்க, இவர் படாடோபம் உள்ளவர் போல. ஊர் பெருமைக்காக வாழற குடும்பம் போலேயிருக்கு. வேண்டாம்ப்பா, நம்மளைப்போல் எளிமையா இருக்கிறவங்கதான் தேவலாம். சிறுக கட்டிப் பெருக வாழணும். அதுதான் என்றும் நிலைக்கும், மன்னிச்சுக்குங்க அப்பான்னு சொல்லி இந்த இடம் வேண்டாம்னு சொல்லிட்டாளாம்.
"இது எப்படி இருக்கு? கடலாழத்தைக்கூடக் கண்டுபிடிக்கலாம்; பெண்களின் மனதைக் கண்பிடிக்க முடியாது போலேயிருக்கே, நாமெல்லாம் பீஷ்மரா இருக்கவேண்டியதுதானோ? என்ன நடக்குது நாட்டிலே?"
No comments:
Post a Comment