'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2019

புலம்பெயர் நாடும் வாழ்வும் - முன்னுரை

இணுவையூர் --பரமநாதன்

(என்னைப்பற்றி...)

புலம்பெயர் நாடும் வாழ்வும் எனும் தலைப்பில் டென்மார்க் நாட்டின் வாழ்வியலை இயன்றவரை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்பகுதிக்குள் நுழைவதற்கு முன் என்னைப் பற்றியும், பூர்வீகம், அயலகம் சென்ற சூழல், வாழ்வியலை அமைத்துக் கொள்ள ஏதுவாக அங்கு அமைந்த சூழல் போன்றவற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறவிழைகிறேன்.

ஈழத்தின் வடபகுதியில் அமைந்துள்ள இணுவில் என்னும் ஓர் அழகிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். தாய்மொழிக் கல்வி கற்பித்தல் மொழியாக இருந்தததினால் தமிழ்மொழியில் கல்வியினைக் கற்றேன்.  பதிமூன்றாம் வகுப்புத் தேர்வில் பெறுபேற்றினைப் பொறுத்தே பல்கலைக்கழக அனுமதி இருந்த போதும், தரப்படுத்தல் என்னும் புதிய சட்டவாக்கத்தின் படி அதிக புள்ளிகள் உள்ள தமிழ்ப்பிள்ளைகளே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். எனக்குரிய புள்ளிகளைக் கொண்ட சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல.. என்போன்ற அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதன் தொடக்கமாக அரசியல் சூழல் வெகுவாக மாறத் தொடங்கியதும், இளையோர்கள் ஆயுதப் போரட்டத்தைக் கையிலெடுத்ததையும் அனைவரும் அறிவர்.

தொழில்வாய்ப்பில்லாமல் சில காலம் கழிந்தாலும் 1980 இல் மருத்துவமனையில் கதிரியலாளர் (Radiographer) பயிற்சி நெறியைப்பெற்று என் பணியைத் தொடங்கினேன்.

இப்பயிற்சியின் போது எனக்குத் தெரியாத சிங்கள மொழியிலே கற்பித்தல் நடைபெற்றமை வேதனைக்குரியது. அக்காலத்தில் போர்மேகங்கள் அனைத்துப் பகுதியையும் சூழ்ந்திருந்தது. தமிழ் இளைஞர்கள் புலி என்றே அடையாளப் படுத்தப்பட்டார்கள். அவற்றை விரிவாக இங்கு எழுதத்தேவையில்லை என எண்ணுகிறேன்.

சிங்களவர், தமிழர், முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கடமைக்காக நியமிக்கப்பட்டேன். அங்குப் பணியிலிருந்த போது தமிழன் எனும் உணர்வோடு இயங்கத் தொடங்கியதும், இந்திய அமைதிப்படை நாட்டைவிட்டு வெளியேறிய போது அதன் விளைவு எவ்வாறு அமையும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்ததால் எந்தாய் மண்ணை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

நான் அப்பகுதியில் இருந்து வெளியேறிய பின் என்னாருயிர் வைத்திய நண்பன் கொலை செய்யப்பட்டான். நான் அங்கிருந்திருந்தால் நண்பனுக்கேற்பட்ட அதே நிலை எனக்கும் ஏற்பட்டிருக்கும்.

1991 இல் இலங்கையை விட்டு வெளியேறினேன். எங்குச் செல்ல வேண்டும் என்னும் ஆசையிருந்தாலும் இறுதியில் டென்மார்க் நாட்டிற்கு என் மனைவி பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தேன். இந்நாட்டிற்குள் நுழைந்ததும் டென்மார்க் நாட்டின் ஏதிலிகள்  தங்குமிடத்தில் ஏதிலியாகப் பதிவு செய்து கொண்டேன்.

அங்கிருக்கும் காலத்தில் எமக்குத் தேவையான அனைத்தையும் உடனடியாக வழங்கினார்கள்,ஓராண்டிற்குப் பின் ஏதிலியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கும், பணிபுரிவதற்குமான  அனுமதியைப் பெற்றுக் கொண்டேன்.

ஏதிலி அனுமதி கிடைத்ததும் எமக்குத் தனியான வீடு, விட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கான பண உதவி மற்றும் மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட உதவித் தொகை என்பன வழங்கப்பட்டது.

எனது பிள்ளைகளைப் பாடசாலையில் அனுமதித்ததோடு  எனக்கும் மனைவிக்கும் டெனிஸ்மொழியைக் கற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்து தந்தார்கள். எமக்குரிய அனைத்தையும் அப்பகுதி நகரசபையே பொறுப்பேற்றுக் கொண்டு செயற்பட்டது.

மூன்று ஆண்டுகள் அரச உதவியுடனேயே எவ்வித குறையுமின்றி எனது குடும்பத்தோடு வாழ்ந்ததினை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். .

டெனிஸ்க்கல்வியைக் கற்றுக் கொண்ட பின்னர் எனது தொழில் இந்நாட்டுத் தொழில் முறையோடு ஒத்துப் போகின்றதா என்பதை அளவீடு செய்வதற்காக மருத்துவமனை ஒன்றில் கதிரியலாளராக(Radiographer) இணைக்கப்பட்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். அங்குப் பணிபுரிந்த காலப்பகுதியில் சில பொறுப்பான பதவிகளையும் பெற்றுக் கொண்டேன். மேலும் சொந்தமாக வீடு, மகிழுந்து மற்றும் அனைத்துத் தேவைகளையும் என் உழைப்பின் மூலமாகப் பெற்றுக் கொண்டேன். சொந்தமாக என்பதைவிட இத்தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கான பண உதவியினை வங்கிகள் தந்துதவும். இதுபற்றித் தனிப்பதிவினைப் பின்னர் எழுதுகிறேன்.

இருபது ஆண்டுகள் பணிக்குப் பின் பார்வைக் குறைபாட்டினால் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். எனது பிள்ளைகள் தகுந்த உயர் பட்டங்களைப் பெற்றுப் பணிபுரிகின்றார்கள். உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எனக் கொண்டாடப்படும் நாடுதான் டென்மார்க்.. என் உறவினரும், ஊரவரும் இல்லையே என்னும் குறையினைத்தவிர வேறு எதுவும் எமக்கிருந்ததில்லை. இனிவரும் பகுதிகளில் இந்நட்டு வாழ்வுடன் இணைந்த  அனைத்தையும் இயன்றவரை முழுமையாகப் பதிவிடுகின்றேன்.

தொடரும்...

No comments:

Post a Comment