'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

எந்தமிழ்


எந்தமிழ்
    சியாமளா ராஜசேகர்

முன்னவள் சுவையில் இனியவள் கன்னல்
***மொழியவள் இளமை யானவள் !
தன்னிக ரின்றித் தனித்துவ மாகத்
***தரணியை ஆளும் தன்மையள் !
நன்னய மிக்க இலக்கண வளமும்
***நல்லிலக் கியங்கள் கொண்டவள் !
தென்னவன் மன்றில் வளர்ந்தவள் புவியில்
***செம்மொழி யாகச் சிறந்தவள் !!

இயலுடன் இசையும் நாடக மென்றே
***இயல்பினில் மூன்றா யானவள் !
உயிரொடு மெய்யும் உயிர்மெயு மாகி
***ஓரெழுத் தாய்த மானவள் !
துயருறும் போது சுகம்பெற தமிழே
***துடைத்திடும் கையாய் நீள்பவள் !
தயவுடன் விரும்பும் அன்னியர் தமக்கும்
***தமிழமிழ் தம்போல் சுவைப்பவள் !!

கல்லையும் கனியச் செய்பவள் தம்மைக்
***கற்பவ ருள்ளம் நிறைபவள் !
வெல்லமாய் நாவில் இனிப்பவள் என்றும்
***வெற்றிகள் ஈட்டித் தருபவள் !
நல்லறம் காட்டி மிளிர்பவள் வாழ்வில்
***நைந்திடா வண்ணம் காப்பவள் !
வல்லவள் ழகரச் சிறப்பவள் எங்கும்
***மணப்பவள் வாழி வாழியே !!

No comments:

Post a Comment