'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

முதல் பூ!


முதல் பூ!

கவிஞர் தமிழ்வேலி (நித்தியானந்தம்)

தோட்டத்தில் மலர்கின்ற பூக்க ளெல்லாம்
...தொடுக்கின்ற மாலையென அதுவே மாறும்
சூட்டுகின்ற கோலமிங்கு அழகைக் காட்டும்
...சுந்தரமாய் இதழங்குச் சிந்தை யள்ளும்
காட்டுகின்ற கோலங்கள் எல்லா மிங்கே
...கவருகின்ற விதமாக இருந்துங் கூட
வாட்டுகின்ற வெப்பமது வந்தா லிங்கே
...வனப்பிழந்து சருகெனவே வாடிப் போகும்!

வாசமில்லா மலர்கின்ற பூக்க ளெல்லாம்
...வளத்துடனே வளர்கின்ற வடிவ முண்டு
வாசமில்லா வகைதனிலே அதுவும் இங்கு
...வளர்வதிலே எவர்க்குமிங்கே பயனே இல்லை
நேசமுடன் சிலபேரும் அதனை நாளும்
...நேர்த்தியாக பூங்காவில் வளர்க்கக் கூடும்
வாசமின்றிப் பூக்கின்ற கோலங் கண்டு
...வாங்கியுடன் எவருமே சூட லில்லை!

எத்தனையோ பூவினங்கள் புவியில் பூத்து
...எழிலாகக் காட்டுகின்ற அழகின் கோலம்
அத்தனையும் ஒருநாளில் அழித லுண்டு
...அன்றாடம் மானத்தைக் காக்க வேண்டி
இத்தரையில் பூக்கின்ற பருத்திப் பூவே
...இங்குள்ள ஆடைக்கு மூலம் தானே
முத்திரையாய்  மாறுகின்ற ஆடைப் பூவே
...முகிழ்கின்ற பூக்களிலே முதலே என்பேன்!

No comments:

Post a Comment