'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

சாமி சரணம்


சாமி சரணம்

பைந்தமிழ்ப் பாமணி
தர்மா
  
வரமருளும் ஐயப்பன் கோயி லுக்குள்
~~மங்கையரை வரவேண்டா மென்று ரைத்தோம்
அருள்வடிவாய் ஐயனுக்காய் மஞ்சள் மாதா!
~~அங்கிருப்பார்! நாம்மட்டும் போக லாமோ?
பருவமுள்ள பெண்களுக்குப் பாது காப்பைப்
~~பலப்படுத்தும் நாள்வரையில் பொறுங்க ளென்று
தரமாக எடுத்துரைக்க முயல வேண்டும்,.
~~தடம்பதித்தால் தீட்டென்று சொல்லல் பாவம்! 

கணவனவன் இறந்துவிட்டால் மனைவி யைத்தான்
~~கண்முன்னே தீயிலிட்டுப் பொசுக்கி னாரே!
மனைவியவள் இறந்துவிட்டால் கணவன் ஓடி
~~மரித்ததாகச் சான்றேதும் உண்டா சொல்வீர்!
முன்னழகை மறைப்பதற்காய் ஆடை யிட்டால்,
~~முலைவரியைத் தாவென்று சொன்னோர் ஆண்கள்!
தென்னாட்டின் மன்னவனின் சேயைப் பெண்கள்
~~தேடிப்போய் வழிபட்டால் குற்றம் என்ன! ...

வருமானப் பேராவ லுற்று வந்து
~~வழிவழியாய் வந்திருந்த மரபை மாற்றி
இருக்கையிலே குற்றங்கள் இல்லை யென்றோர்,
~~இருமுடியைக் கட்டிவந்த பெண்ணி னத்தை 
இருவேறு குழுக்களாகப் பிரிக்க லாமோ
~~ஏனென்று கேட்போர்கள் வரலாற் றைத்தான்
தெரியாமல் உலவினரென் றேநான் சொல்வேன்..!
~~தெளிவுற்றால் ஒருமதத்தைக் காக்க லாமே.. 

மாட்டுக்குப் பூசைசெய்ய வழிகள் உண்டு!
~~மாந்தருக்குள் பிரிவினைகள் இன்னும் ஏனோ!
தீட்டென்ற சொல்லேதும் இல்லை ஐயா
~~தேவைக்குக் கருத்துரைத்தல் கேட்டை நல்கும்!
ஓட்டுக்காய்ப் பிரிவினையை ஊக்கு வித்தால்,
~~ஒருநாளும் முன்னேற்றம் கிட்டா தென்றும்,
வாட்டத்தைப் போக்குதற்கு வழியைக் கண்டு
~~வழிமொழிந்த சான்றோரைப் போற்றல் நன்றே..

ஆண்கடவுள் கட்காக ஆண்கள் கூடி,
~~ஆலயத்தில் வழிபாட்டைச் செய்கின் றோமே!
மாண்புள்ள பெண்கடவுள் கட்கா யந்த
~~மதிப்புள்ள பெண்ணினத்தை விடாத தேனோ!
தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்தோ மென்று,
~~தெருவெங்கும் மார்தட்டிப் பயனே இல்லை !
ஆண்களுக்கோ ரொப்பாகப் பெண்ணி னத்தை,
~~அறவழியிற் போற்றிவரின் எவர்க்கும் நன்றே...


No comments:

Post a Comment