'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 31, 2019

ஆசுகவி விருந்து – 1

சோலை மெய்ஞ்ஞான வந்தாதி

பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுவில் 23-03-2019 அன்று நேரலையாக ஒன்றரை மணி நேரத்தில் ஆசுகவி விருந்தாகப் படைக்கப்பட்ட 100 பாடல்கள்.

பாடியோர்:  காப்பும், இரட்டையிலக்கப் பாடல்களும் மரபுமாமணி பாவலர் மா.வரதராசன், ஒன்றையிலக்கப் பாடல்களும் நூற்பயனும் பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி.

காப்பு (நேரிசை வெண்பா)

கருத்தோன் முதல்வனே! காப்பென நிற்பாய்
கருத்தாவைப் பாடப் புகுந்தோம் - திருத்தாளில்
வந்தணைந்த எங்கள் வழுவா எழுத்தினில்
செந்தமிழைச் செய்க சிறந்து!

வெண்டளையானியன்ற தாழிசை

உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும்
தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம்                     1

பெறுதலைத் தானீக்கிப் பேரானந் தத்தில்
உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம்                         2

படுகின்ற காயங்கள் பாவங்கள் நீங்கிச் 
சுடுகின்ற நல்லிறையைச் சுற்றுவதும் எக்காலம்                     3

சுற்றித் தொடர்ந்தவனைத் தூயவனை மாதவனைப்
பற்றிப் படர்ந்து பணிகுவது மெக்காலம்                                  4

பணியும் புலனின் பயனை அறிந்து
துணிந்தென் உடலத்தைத் தூற்றுவது மெக்காலம்                   5

தூற்றலையும் போற்றலையும் தூய வுளத்தோடு
மாற்றிக் களைந்து மகிழ்வுறுவ தெக்காலம்                             6

மகிழ்ச்சி இறைவன் மலர்ப்பாதம் வேண்டல்
புகழ்ந்தவன் தாளில் புகுவது மெக்காலம்                                7

புகுந்து மலர்ப்பாதம் போற்றிப் பணிந்து
வெகுதல் வினைநீக்கி மேலுறுத லெக்காலம்                          8

மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்?      9

விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்                           10

பாவி எனையந்தப் பாருக் கிறைவனுவந்
தாவி இனிமையுற ஆட்கொள்வ தெக்காலம்                           11

கொள்வதூஉ மன்றிக் கொடுப்பதூஉம் சிந்தையறத்
தெள்ளிறையைத் தேடித் திளைப்பதுவு மெக்காலம்              12
                                                   
திளைக்கின்ற இன்பங்கள் தீர்ந்தே அமைதி
முளைக்கின்ற நாதன்தாள் முத்திடுத லெக்காலம்                    13

முத்தும் மணியும் முகிழ்த்த மலர்க்கரமும்
நத்தாமல் நாதன்றாள் நாடுவது மெக்காலம்                             14

நாடும் பொருளனைத்தும் நாயகனே என்றுரைத்துக்
கூடும் மனத்தாசை கொன்றிடுதல் எக்காலம்?                         15

இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்                          16

பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்                          17

கும்பிட் டொருங்காமல் கூடித் திளைக்காமல்
நம்புமிவ் வாழ்வின் நயப்பறுத்த லெக்காலம்                         18

அறுக்கும் அவாநீங்கி ஆழத்தில் மூழ்கிப்
பொறுத்துத் தவமேற்றுப் பொற்புறுத லெக்காலம்                 19

பொற்புடைய ஈசன் பொலிவை யுணராத
அற்பத் தனமொழித்து ஆட்படுவ லெக்காலம்                        20

ஆட்கொள்ளும் ஆண்டவன்மேல் ஆசை வளர்ந்தென்றன்
நாட்களைநான் போக்கும் நலம்வருத லெக்காலம்                 21

வருமுயிர்க ளாவுமிங்கு வாழ்விழத்தல் கண்டும்
திருவிடத்தை நீங்கிச் சிறப்புறுத லெக்காலம்                          22

சிறந்த இறைவனையே சிந்தித்து வாழ்வில்
கறந்தபா லுள்ளத்தைக் கண்டிடுத லெக்காலம்                        23

கண்டுன் மலர்ப்பாதம் காதலித்து வாழாமல்
உண்டுயிர்த்தல் தீதென் றுணர்வதுவு மெக்காலம்                    24

உணர்ச்சிக் கிரையாகி உள்ளொழிந்து வீழா
திணங்கி யிறையோ டிணைந்திருத்த லெக்காலம்                    25

இருத்தலும் போதலும் ஈசன் வினையென்று
இருத்தியவன் பாதம் இணைந்திருத்த லெக்காலம்                 26

இருக்கும் நிலையறிந் தின்னும் தெளிந்த
கருத்தை எதிர்பார்த்துக் காத்திருத்த லெக்காலம்                      27

காத்தலும் ஆக்கலும் காணா தழித்தலும்
ஆத்தம்செய் ஈசனென் றாய்வதுவு மெக்காலம்                        28

அறிவுகளுக் கெல்லாமும் அப்பாலாய் ஆகிச்
செறிந்தவனை என்னுள் தரிசிப்ப தெக்காலம்                          29

பல்லூழி வாழ்வேன் பரமன் தனையேத்தி
நல்லூழே என்று நனைவதூஉ மெக்காலம்                               30

உமையொடு நிற்கும் உயர்ந்தவனை என்னுள்
அமைந்திடக் கண்டே அதிசயித்தல் எக்காலம்                         31

அதிசயமே ஈசனருள் ஆகத்தாள் தானும்
விதித்த தெனவறிந்து வீடுறுத லெக்காலம்                               32

வீடும் உறவும் விதியும் எனவாழ்ந்தே
ஓடும் நிலைமை ஒழிந்திடுதல் எக்காலம்                                 33

ஒழியாதென் றெண்ணி ஒழியுவினை செய்வார்
கழியா நிலைகண்டு கட்டறுத்த லெக்காலம்                            34

கட்டி மனத்தைக் கணக்கிட்டு நானாளும்
ஒற்றை நிலைமை உயர்ந்துவரல் எக்காலம்                             35

வருமச்சில் சுற்றும் பரிதிவடு நீங்கிப்
பருவொழிதல் கண்டு பதைப்பதுவு மெக்காலம்                    36

பதைபதைக்கும் உள்ளத்தின் பாடுகளைப்போக்கும்
கதையுணர்ந்து வாழ்வில் கதியடைத லெக்காலம்                   37

அடைந்தமட் பாண்டம் அழியுநீர் சேர
உடையுமுட லோர்ந்தே உருப்படுவ தெக்காலம்                    38

உருப்படும் நாள்பார்த்தே ஓய்ந்திருக்கா தேநான்
திருப்பணிகள் செய்யும் திணவடைதல் எக்காலம்                   39

திணவுடனே செய்த சிறப்பில் வினையால்
உனையடைத லோர்ந்தே உணர்வுறுத லெக்காலம்                 40

தளையாக்கும் ஆசை தனையுடைத்து ஞான
விளையாட்டை நான்காண வீதிவரல் எக்காலம்?                    41

வீதி தனிலிருந்த மேலாடைப் பெண்வீழ்ந்து
நாதியற நின்றொழிந்த நான்தேற லெக்காலம்                         42

தேற்றி அழுமென்னைத் தேடி யிறைவந்து
மாற்றி அருளி மருள்நீக்கல் எக்காலம்?                                     43

நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம்                     44

நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்                    45

வீச்சில் விளையாடி வீணில் வினைசேர
மூச்சடங்கு முன்னே முனைந்திருத்த லெக்காலம்                   46

முனைந்தென்றன் எண்ணத்தால் முக்தி கொடுக்கும்
வினையோனைப் பாடி வியத்தலுந்தான் எக்காலம்               47

வியக்கின்ற வாழ்வுற்று வீட்டையிழக் கின்றார்
நயந்தவர் நாதன்றாள் நத்துவது மெக்காலம்                            48

துவக்கத்தில் கொண்டிருக்கும் தூய்மையான பக்தி
தவக்காலம் முற்றிலுமே தானிருத்தல் எக்காலம்                     49

இருக்கின்ற தெல்லாம் இறப்ப தறிந்தும்
செருக்கோ டலைபவர் சீருறுத லெக்காலம்                             50

சீருடையர் மாதர் சிறப்புடையர் என்றெல்லாம்
பேருரைகள் செய்வார் பிழைப்பதுதா னெக்காலம்                 51

பிழைக்கின்றா ராயின் பிழைசெய்வார் இல்லென்
றிழைக்கின்ற தீயோர் இணைப்புறுத லெக்காலம்                   52
                                                
இணையைக் கடிந்திடுவார் இல்லத்தை நோவார்
துணையெனக் கோவிலைச் சார்ந்திருப்ப தெக்காலம்            53

சார்ந்தும் பணிந்தும் தளராத வாழ்வுற்றுத்
தேர்ந்தவன் தாளிணையைச் சேர்வதுவு மெக்காலம்              54

சேர்க்கும் பொருள்மீதே சென்றிடுமோர் நாட்டத்தை
ஆர்க்கும் பணியில்லான் ஆட்சிசெயல் எக்காலம்                    55

ஆட்சி யவனாகும் ஆள்வன் அவனாவான்
மீட்சி யெவரென் றிழியாத லெக்காலம்                                   56

மிரண்டு பயங்கொண்டு மீண்டும் பிறவா
வரம்வந் தெனையுந்தான் வாழ்வித்தல் எக்காலம்                   57

வித்தாக்கி யுண்டாக்கி மேனிலையைத் தந்தோனும்
செத்த தறிந்து திருவிழத்த லெக்காலம்                                      58

இழந்தேன்நான் யாவும் எனப்புலம்பி வீழா
துழைத்து முதல்வன்தாள் உற்றிடுதல் எக்காலம்                      59

உற்றாளும் மாடும் மனையும் மறைகின்ற
உற்றறியா உண்மை உணர்வது மெக்காலம்                             60

தூயோனை நெஞ்சத்துத் தூணில் நிறுத்தியான்
வாயாரப் போற்றி வணங்கிடுதல் எக்காலம்                            61

வணங்கா திருப்போரை வாழ்விக்கு மீசன்
இணங்காக் குறைபொறுத்து ஏற்பதுவு மெக்காலம்                 62

ஏற்பான் எனையிறைவன் ஏற்றிடுவேன் என்குறைகள்
தீர்ப்பான் அவனைத் தெரிந்துகொளல் எக்காலம்                    63

கொளுமிந்தச் செல்வம் குறையும் நிலையுணர்ந்து
தெளிவுற்ற சிந்தையில் சேர்வதுவு மெக்காலம்                       64

சேர்க்கைகளை நம்பிச் செலவழிக்கும் வையத்தீர்
ஊர்க்குமுனம் நாதனைநீர் ஒப்பிடுதல் எக்காலம்                     65

ஒப்பி யவன்பாதம் உச்சிதனிற் கொள்ளாமல்
தப்பறுத்து வாகாய்த் தகவுறுத லெக்காலம்                              66

பிணைக்கும் அழுக்குகளைப் பேர்க்க முதல்வன்
துணைக்கு விழிமுன்னம் தோன்றுவது மெக்காலம்               67

தோன்றிய யாவும் தொடக்கறுதல் கண்டறிந்தும்
ஊன்றி யவன்பாதம் ஊர்வதுவு மெக்காலம்                            68

ஊரும் விலங்கோ டுலக உயிர்யாவும்
சாரும் தலைவனையான் சந்திப்ப தெக்காலம்                         69

சந்திப்ப தீசன் சடைத்தலை யென்றாகி
நிந்தித்த லின்றி நிலைபெறுத லெக்காலம்                               70

நிலையாமை என்பதன் நிச்சயம் கண்டிங்
கலையாமல் நெஞ்சம் அமர்ந்திருத்தல் எக்காலம்                   71

அமரும் பராசக்தி அருட்பாதத் தையான்
அமரன்என் றாகி அரவணைத்த லெக்காலம்                            72

அரவணைக்கும் அன்னையவள் அன்பனெனைக் கண்டு
சுரக்கும் திருப்பாற் சுவைதருத லெக்காலம்                             73

சுவையுடனே ஊறோசை சுற்றுமிவ் வையக்
கவையில்நுழை யாமல் கனிவதுவு மெக்காலம்                      74

கனிந்த மனத்தில் கடவுளின் பாதம்
நினைந்தெனது வாழ்க்கையை நீட்டுவது மெக்காலம்           75

நீட்டிப் படுத்தார் நிலையழியக் கண்டாலும்
ஆட்டுவான் ஆட்டத்தில் ஆகிடுத லெக்காலம்                        76

ஆகும் நிலைமாற்றம் அத்தனையும் வாழ்வினிலே
மேகம் எனவிறையை மேவிடுதல் எக்காலம்                          77

மேவும் உயிர்க்கூட்டம் மேலான ஈசனருள்
யாவும் எனவுணர்ந் தாடிடுவ தெக்காலம்                                 78

ஆடும் வறுமை அழிக்கும் பொருளாசை
நாடும் இறைவுணர்ந்து நன்மையுறல் எக்காலம்                      79

நன்மையும் தீமையும் நாடாமல் நத்துவர்
உண்மை யுணர்ந்தவர் ஊர்ப்புகுத லெக்காலம்                        80

ஊர்புகும் முன்னம் உயரிறைவன் எண்ணத்தின்
வேர்பிடித்து மாந்தர்கள் வெற்றிபெற லெக்காலம்                  81

பெறவாம் அருளாசி பெற்றிந்த வாழ்வில்
திறலாய்ச் சிவனருளிற் றோய்வதுவு மெக்காலம்                     82

தோய்கின்ற ஆன்மீகத் தொல்லியலில் நம்மிச்சை
மாய்கின்ற தென்கின்ற மாயம்வரல் எக்காலம்                        83

மாய மறுத்து மயக்கறுத்து ஈசனடி
தோய விழுந்து துணைபெறுவ தெக்காலம்                             84

பெறுகின்ற வாய்ப்பிலெலாம் பேரிறைவன் நாமம்
சிறப்புடனே சொல்லிச் செபித்திருத்தல் எக்காலம்                 85

பித்தாகிச் சோராமல் பேசா தொழிந்து
வித்தாகி முன்னம் வினையறுத்த லெக்காலம்                         86

வினைவழியே வாழ்க்கை விளையாடும்! ஆங்கே
எனையாள வெந்தலையன் ஈண்டிருத்தல் எக்காலம்             87

ஈன்றாளின் பாசப் பிணைப்பும் சிவனருளாய்
வேண்டுவாம் மேன்மை விளங்குவது மெக்காலம்                 88

விளக்கமிலா ஞான வினாவறியத் தெய்வம்
துளக்க வருதல் தொடங்குவது மெக்காலம்                             89

தொடக்கமாய் நிற்பான் துலக்கமு மாவான்
விடைகொள வேண்டி விழைந்திருத்த லெக்காலம்               90

விழைகின்ற யாவையுமே விந்தை அவற்றை
அழைக்கின்ற ஈசன் அளிப்பதுவு மெக்காலம்                          91

அளிப்பான் அழிப்பான் அலைப்பான் அருள்வான்
களிப்போடு நானவனைக் கண்டிணைத லெக்காலம்             92

கண்டிடாத மாயங்கள் காட்டி உயிரீர்க்கும்
கொண்டலைத் தெய்வத்தைக் கொண்டிடுதல் எக்காலம்       93

கொண்டாளும் சேராளே கொள்வன சேராவே
உண்டீசன் ஞானம் உயிர்ப்பதுவு மெக்காலம்                          94

உயிர்வந்த காரணமே உன்னதமாந் நாம
செயஞ்சொல்ல வென்று செழித்திருத்த     லெக்காலம்         95

செழிக்கின்ற வையச் சிறப்பொழிய கண்டோம்
விழித்தீசன் மேனி விதிர்ப்புறுத லெக்காலம்                           96

விதிவிதிர்த் தீசன் விளையாடல் கண்டு
மதிமயங்கி பக்தியினை மாந்திவரல் எக்காலம்                       97

வரவாய்ச் சிவனருளில் வாய்த்தவிச் சோலை
உரமுஞ் சிவனென்றே ஓர்வதுவு மெக்காலம்                          98

ஓர்ந்தாரும் ஈசனருள் உள்ளோரும் தெய்வத்தை
ஊர்ந்து நினைந்தே உலகுயர்தல் எக்காலம்                              99

உயர்த்தலும் ஈசன் உயிர்ப்பது மீசன்
செயிர்த்தலை நீங்கிச் செழித்திருத்த லெக்காலம்                     100

நூற்பயன்

இரட்டைப் புலவர்கள் ஈண்டளித்த பாடற்
றிரட்டை உணர்ந்தால் தெளிவர் - விரவி
இறைவன் பதம்காண்பர் இவ்வுலக வாழ்வின்
நிறத்தை நிலையை நினைத்து.

Feb 23, 2019

நடுப்பக்க நயம்

பாவலர் மா.வரதராசன்

கம்பன் கவிநயம்! -4

வாலிவதை நல்வழியா? அல்வழியா?

கம்பராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்ற விவாதம். வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது சரியான முறையா? தவறான முறையா?

பலரும் அது தர்மத்தின்பாற்பட்டதே என்பர். ஏறத்தாழ இராமன் செய்தது சரியே என்பதற்குப் பல காரணங்களை அடுக்குவர். அவன் கடவுளாயிற்றே!

சிலர் அதர்மமே என்பர். ஆனால் அதை நிறுவ ஏதேனும் சான்று கேட்டால் அவரிடம் இருக்காது. 

இப்போது நாம் விளக்கத்திற்குப் போகலாமா.!?

இல்லறம் துறந்த நம்பி      
    எம்மனோர்க் காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் 
    தோன்றலால் வேத நன்னூல்
சொல்லறம் துறந்தி லாத 
    சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்த(து) என்னா 
    நகைவர நாணுக் கொண்டான்"
(கிட்; வாலிவதைப் படலம் : 76 : 1-2) 

தன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்ன காரணத்தால், தனது இல்லற தர்மத்தைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட  இராமன்,  குரங்கு இனத்தவராகிய எமக்காக, விற்போருக்கு என்று அமைந்துள்ள தர்மத்தைக் கைவிட்டு மறைந்து நின்று எம்மீது அம்பு எய்த வந்து பிறந்த காரணத்தால், பெருமைக்குரிய சூரிய குலமும் தனது நல்லறத்தைத் துறந்து விட்டதே என்றெண்ணி ஏளனமாக நகைத்த வாலி, எப்பேர்ப்பட்ட இராமன் தனது குலப் பெருமையையும், தனது விற்போர் தர்மத்தையும் குரங்கினத்தானாகிய தனக்காகக் கைவிட்டான் என்பதை நினைத்து வெட்கப்பட்டான்.

தேவியைப் பிரிந்த பின்னைத் 
   திகைத்தனை போலுஞ் செய்கை 
(கிட் ; வாலிவதைப்படலம் :78 :4) என்றும்.

வலியவர் மெலிவு செய்தாற் 
   புகழன்றி வுசையு முண்டோ 
(கிட் ; வாலிவதைப்படலம் : 80 : 4)

என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விக் கணைகளால் துளைக்கிறான் வாலி.

அதற்கு இராமனோ, தன் செயலைச் சரியெனக் காட்டுதற்குக் காரணங்களைக் கூறுகிறான்.

"தவறு செய்யாத தம்பியைத் தண்டித்தது, உன்னையே அடைக்கலமென்று அடைந்தவனைக் கொல்ல முயன்றது, அறத்துக்குப் புறம்பாக உன் தம்பியின் மனைவியைக் கவர்ந்தது ஆகிய காரணங்களாலும், சுக்ரீவன் எனது உயிருக்கு உயிரான நண்பன் என்பதாலும், நான் உன்னைப் பயிருக்கு இடையே வளரும் களையை எடுப்பது போல எடுத்தொழித்தேன்" என்றெல்லாம் வாலி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இராமன் பேசுகிறான்.

வாலி இவற்றை மறுத்து, "எங்களுக்கு மனம் போனபடி வாழ்கின்ற முறையும், குணமும் அமைந்தன. வேத நெறியும், கற்பு நிலையும் வானரர்களுக்குக் கிடையாது.  எனவே எங்கள் பிறப்புக்குரிய தன்மைகளின்படி, நான் யாதொரு குற்றமும் செய்தவனல்லேன். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்" என்று வாலி கூறினான்.

வாலியின் இந்த பதிலைக் கேட்டு இராமன் கூறுகிறான், "வாலி! நீ தேவர்களைப் போல பிறந்து, அறங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்று, நீதிகளை உணர்ந்தவன். ஆதலின் உன்னை மிருக இனமாகக் கருத முடியாது." என்று சமாளிக்கும் இராமனை நோக்கி இறுதியாக, இராமனை ஊமையாக்கும் கணையைத் தொடுக்கிறான் வாலி.

"நீ கூறிய அனைத்தும் உண்மையே ஆகட்டும். ஆனால் போர்க்களத்தில் நேருக்குநேர் நின்று போரிட வராமல், காட்டில் விலங்குகளை மறைந்து நின்று கொல்லும் வேடனைப் போல என்மேல் ஒளிந்து நின்று அம்பு எய்தது என்ன நியாயம்? சொல்!" என்றான்.

இதற்கு இராமன் பதில் சொல்லவில்லை, இளவல் இலக்குவன் இடையில் புகுந்து பதில் கூறுகிறான்: "முதலில் உன் தம்பி சுக்ரீவன் வந்து இராமனிடம் சரணாகதி என்று அடைக்கலம் புகுந்தான். முறைதவறி நடந்து கொண்ட உன்னைக் கொல்வேன் என்று சுக்ரீவனிடம் இராமபிரான் வாக்குக் கொடுத்தார். தீமைகளை அழித்து அறத்தை நிலைநாட்டவே இராமன் உறுதி பூண்டவர் என்பதும், அறத்துக்குப் புறம்பான எதையும் அவர் செய்யமாட்டார் என்பதையும் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பதே தனது தலையாய கடனாகக் கொண்டவர் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். உன்னோடு நேருக்குநேர் நின்று போர் செய்ய இராமன் வந்தால், நீயும் இராமனிடம் சரணடைந்து விட்டால், தனது வாக்குறுதியி லிருந்து மாறுபட நேருமென்பதால், சுக்ரீவனுக் களித்த வாக்குறுதிப்படி உன்னை மறைந்திருந்து கொன்றார்" என்றான்.

இறுதியில் வாலி ஒருவாறாக மனம் அமைதியடைகிறான். . 

"தாயென உயிர்க்கு நல்கி 
   தருமமும் தகவும் சார்வும்
நீயென நின்ற நம்ப 
   நெறியினில் நோக்கும் நேர்மை
நாயென நின்ற எம்பால் 
   நவைஉறல் உணர லாமே
தீயன பொறுத்தி என்றான் 
   சிறியன சிந்தி யாதான்".
★★★

இதுவரையே அனைவரும் வாலிவதம் பற்றிய கருத்து எல்லைக்குள் நிற்பர். சிக்கலான இவ்விவாதத்தை ஒருசார்புடைத்தாய் ‘இராமன் செய்தது சரியே’ என்றும்,  கம்பரையும் ஒருசார்புடைத்தவராய்க் காட்டுவர்.

ஆனால், உண்மையிலேயே கம்பருக்கு அப்படிப்பட்ட உள்ளமில்லை. இராமன் செய்தது மிகப்பெருந்தவறு என்பதே கம்பரின் உள்ளம். 

உலகத்தார் என்னென்ன ஐயங்களை எழுப்புவர்? என்று எண்ணியெண்ணிப் பார்த்துத் தன் பனுவலை நகர்த்திய கம்பருக்கு, இராமனை நல்லவனாக்கி அவன் செய்த செயலைச் சரியென்று நிறுவி நடுவுநிலை தவறும் எண்ணம் இல்லாததால், இராமன் வாயாலேயே 'தான் செய்தது தவறு, அறமற்ற செயல்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைக்கிறார்.

ஆம். குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தீர்ப்பு எவ்வாறு அமையும்? குற்றம் செய்தவன் குற்றவாளியென்றுதானே தீர்ப்பு அமையும்? 

இதோ அந்தக் காட்சி.

வாலிவதம் முடிந்தபிறகு சுக்ரீவனுக்கு முடிசூட்டியும் முடிந்தபின், "இராமா!  இன்னும் சிலகாலம் கிட்கிந்தையில் தங்கிச் செல்ல வேண்டுகிறேன்" என்கிறான் சுக்ரீவன். 

அப்போது இராமன் அவனுடைய வேண்டுகோளை மறுத்து அதற்கான காரணத்தைக் கூறுகிறான். ஆம். ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறான். பாருங்கள் அந்தப் பாடலை!

★ (ஏனோ தெரியவில்லை, இலக்கிய வல்லார்கள் எவருடைய பார்வைக்கும் இந்தப் பாடல் தெரியாமல் போனது வியப்புதான்!  நான் சொல்லவேண்டும் என்று இதுநாள் வரை இருந்ததோ? )★

இல்லறம் துறந்தி லாதோர்
   இயற்கையை இழந்தும், போரின்
வில்லறம் துறந்தும் வாழ்வேற்(கு)
   இன்னன மேன்மை இல்லாச்
சில்லறம்; புரிந்து நின்ற
   தீமைகள் தீரு மாறு
நல்லறம் தொடர்ந்த நோன்பின்
   நவையற நோற்பல் நாளும்”
(வாலி.வதை.  4137)

“இல்லறத்தைத் துறக்கக் கூடாத இயல்பான நிலையை இழந்தும் (இல்லறத்தை நீங்கியும்), போரில் மீறக் கூடாத வில்லறத்தைத் துறந்தும் (வாலியை மறைந்துநின்று கொன்றது), வாழ்விற்கு 'இவையிவை’ மேன்மையெனச் சொல்லப்பட்ட எவையும் செய்யாமல் சிறுமைபூண்டும், நானிழைத்த தீமைகளெல்லாம் தீர்ந்தொழிய வேண்டி நன்மை தரக்கூடிய நோன்பு நோற்கப் போகிறேன். எனவே, நான் இங்குத் தங்கவியலாது”. இதுதான் இராமன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

"போரில் தான்செய்தது அறமற்ற செயல்,  அந்தப் பாவம் தீரத் தவம் செய்யப்போகிறேன்" என்று "அறமே வடிவான இராமனே ஒப்புக்கொண்ட பிறகு நாம் என்ன முடிவுக்கு வருவது?

நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே!
★★★

கூடுதல் விளக்கம்
***********************
விசுவாமித்திர முனிவா், தாடகையைக் கொல்லுமாறு ஆணையிட்டபோது, இராமன் தயங்குகிறான். முதன்முதலில் ஒரு பெண்ணைக் கொல்வதா என்று நினைக்கிறான். தாடகை அரக்கியானாலும், அவள் ஒரு பெண்தானே?  என்ற எண்ணமே அவன் மனத்தில் ஓடுகிறது. முனிவாின் வற்புறுத்தல் காரணமாகவே அவளை, இராமன் கொல்கிறான். இதைக்கூட வில்லறம் துறந்த செயலாக இராமன் கருதியிருக்கக் கூடுமல்லவா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம்.

ஆம். நல்ல  ஐயம். தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். உண்மைதான். அவள் ஒருபெண் என்பது அதற்குக் காரணமே. ஆனால் முனிவரின் விளக்கத்தை ஏற்கும் இராமன் அவளைக் கொல்கிறான். எப்படி?

பாறையைப் போன்ற வைரம்போல் இறுகிய உடலைக் கொண்ட கொடிய அரக்கியாம் தாடகையில் மார்பில் பாய்ந்த அம்பு, கல்லாதவர் உள்ளத்தில் நில்லாத அறிவுரையைப் போல் அவளுடைய மார்பில் குத்தி நில்லாமல் துளைத்துக்கொண்டு மறுபக்கம் சென்றதாம்.  அவ்வாறாயின் எத்துணை வேகத்துடன், வலிவுடன் இராமன் கணையைச் செலுத்தியிருக்க வேண்டும்? தயக்கத்தை ஓட்டியபின் இராமனின் உள்ளத்தில் எந்தச் சலனமுமில்லை. எந்தத் தயக்க உணர்வும் குற்றவுணர்வுமில்லை என்று காட்டும் காட்சியிது.

அவன் தாடகையை வீழ்த்தியபின் தேவர்கள் பூமாரி பொழிந்து வாழ்த்துரைக்கிறார்கள்.

யாமுமெம் மிருக்கை பெற்றோம் 
   உனக்கிடை யூறு மில்லை

என்று முனிவரையும் இராமனை வாழ்த்துகிறார்கள். 
***
வில்லறம் எனில் வீரத்தைக் குறிக்கும்.  வீரமெனில் எதிரெதிர் நின்று போரிடலாகும். தாடகைப் போரில் இராமன் செய்தது போர். (காகுத்தன் கன்னிப்போர்)

ஆனால், வாலியிடம் செய்தது சூழ்ச்சி. எதிர்நில்லாமல், வில்லறத்தை நீக்கி மறைந்துநின்று அம்பெய்தியது வில்லறம் பிழைத்தலாம். 
***
தாடகையின் வதம் சிறப்பான இடம் பெற்றதாலன்றோ விசுவிமித்திரரையே கவர்ந்தது அந்தப் போர். அதுவும் எங்கே? அகலிகைப் படலத்தில்.

இராமனின் கால்பட்டு அகலிகை உரூக்கொண்டெழுந்ததும் விசுவாமித்திரர்  இராமனின் மாண்பை வியந்து,

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
    இனியிந்த வுலகுக் கெல்லாம் 
. . . . .
கைவண்ணம் அங்குக் கண்டேன்
   கால்வண்ணம் இங்குக் கண்டேன்.

என்று தாடகையை அழித்த செயலைக் 'கையின் ஆற்றலாகக்' காட்டுவார் கம்பர்.

தாடகையுடன் இராமன் நிகழ்த்தியது போர் என்கிறார் கம்பர். அது இராமனின் கன்னிப்போராம்.

வாசநாள் மலரோன் அன்ன 
   மாமுனி பணி மறாத,
காசுலாம் கனகப் பைம்பூண், 
   காகுத்தன் கன்னிப் போரில்,
கூசிவாள் அரக்கர் தங்கள் 
   குலத்(து)உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், 
   சுவைசிறி தறிந்த தன்றே. 

உயிரைக் குடிக்கும் கூற்றுவனும் அந்தப் போரினால் சிறிதளவு உயிரைக் குடித்துச் சுவை பார்த்தானாம். எப்பேர்ப்பட்ட அரக்கி. அவள் உயிரைக் கொன்றதே சிற்றளவுதானாம்.  

இங்குக்  'கன்னிப்போர்' என்று வாழ்த்தும் கம்பர், வாலி வதையை அவ்வாறு வாழ்த்தாமல், இராமன் செய்தது பெருங்குற்றமே என்ற மனவோட்டத்தாலேதான்.  . 

இல்லறந் துறந்தி லாதோர்.
..... 
 . . .. . புரிந்து நின்ற 
தீமைகள் தீரு மாறு. . .

என்று குறிப்பிடுகிறார்.

எனவே, வில்லறம் துறந்தும் என்று ஈண்டு குறித்தது வாலி வதையே. என்று நன்குணரலாம்.

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவியரங்க நிறைவு கவிதை
தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து
அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
 
இன்பம் சூழத் துயர்தீர
 
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
 
நன்ன யங்கொள் நங்கவிஞர்
 
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
 
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
 
... விடியா நிலையும் உண்டு
 
விடையைத் தேடிப் போவோம்
 
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
 
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
 
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
 
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
 
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி 
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
 
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
 
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
 
படிக்காது பணியாது பண்படாது
 பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால் 
... கால்வைக் கின்ற செயல்களிலே
 
வெற்றி பெற்று விடிவதுவும்
 
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
 
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
 
உற்ற உளத்துத் தன்மையினால்
 
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

                               நன்றி!
புவியறி வுறவே போற்றும் அறத்தைச் 
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
 
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
 
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

சோலைக் கவியரங்கம் - 8


01.                பைந்தமிழ்ச் சுடர்
பஃக்ருதீன் இப்னு அம்துன்

• பெயர்: ஹ. பஃக்ருத்தீன்
• புனைபெயர்: இப்னு ஹம்துன்
• பணி: விமான நிறுவனமொன்றில் முதுநிலை கணக்கு அதிகாரி
• வார இதழ்கள், மாத இதழ்கள், இணைய இதழ்களில் கவிதைகள் யாத்துள்ளார்.
• ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர்களுள் ஒருவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். மேனாள் துணைத் தலைவர்.
• தமிழ் நுண்கலை மனமகிழ் மன்றத்தின் இணை செயலாளர்


கவிஞரை வரவேற்றல்

அள்ளக் குறையா அமிழ்தான செந்தமிழை 
அள்ளிப் பருகி அருந்தேன்கூ(டு) - உள்ளிருக்கும்
 
தேனீயாய்க் காக்கின்ற தேவா! தருவீர்கார்
 
வானீயும் வண்ணமரும் பா

பைந்தமிழ்ச் சுடர் பஃக்ருத்தீன் அவர்களே வருக
பண்முத்து பலவற்றைத் தருக

*** *** *** ***

இறை வாழ்த்து:

எல்லா உலகும் இயல்பாய்ப் படைத்தளித்து
நல்லவை கெட்டவை நாடவிட்டு - வல்லமையாய்
வாய்மையை ஈற்றில் வழங்கும் அருள்நிறை
தூய்மை இறைக்கே துதி.




தமிழ் வாழ்த்து:

தாய்மொழிக் கெல்லாமும் தாய்மொழி ஆனவளும்
வாய்மொழியாய் வல்லெழுத்தாய் வாழ்பவளும் - சேய்களெல்லாம்
மூத்தாலும் செந்தமிழாள் மூப்பின்றிப் பேரிளமை
காத்துப் புகழொளிர்வாள் காண்

தலைவர் வாழ்த்து:

அமிழ்தின் இனிதாம் அருந்தமிழ்ப் பேரால்
தமிழ்முழங்கும் நல்ல தலைவர் - அமைதியும்
ஆழமும் ஆற்றலும் ஆகத் தமிழகழ்வன்
வாழுங்கள் பைந்தமிழ் வார்த்து.

அவை வாழ்த்து

பூவனம் ஒன்றில் புதுமை மலர்களென
யாவரும் வாச(ம்)வர யாத்தனர் - ஆவலுறும்
பாவரங்கில் ஆழாக்குத் பூத்தேன் அளித்தார்க்குப்
பாவலனென் அன்புபா ராட்டு.

இப்படித்தான் விடியும்

எப்படித்தான் விடிந்திடுமோ என்றுறங்கும் ஏழை 
... எப்படியும் விடியட்டும் என்றேய்க்கும் ஏய்ப்பர்
அப்படியும் இப்படியும் அல்லாடுங் கோழை
... அரசியலால் மேலேறும் ஆதிக்க மேய்ப்பர்
தப்படிகள் வைக்கின்ற தன்னாய்வுத் தோழர்
... தவறுகளைச் செரித்துவிடும் தருக்கமில்லா மாந்தர்
செப்படியாய் வித்தைகளைச் செய்கின்ற மோழை
... சாற்றுகிறார் தன்னிலையைச் செய்திகளின் ஊடே..

கதிரெழுந்தும் விடியாமல் கண்மூடிக் கொள்வோர்
... காட்சிகளில் தன்னலமே காட்டுதற்கு நிற்போர்
புதிர்மனத்தால் பொல்லாங்கைப் பாசத்தில் சேர்ப்போர்
... புகழ்மணக்க யாதொன்றும் புரிகின்ற தீயோர்
விதிவசத்தில் தன்னிருப்பை வைத்துள்ள மற்றோர்
... விளங்கட்டும் தன்னுள்ளில் விடிவென்னும் தோற்றம்
நதியெனவே முன்னேற்றம் நம்போக்கில் கொண்டால்
... நாடெல்லாம் செழித்துவிடும் நம்பிக்கை கண்டே

ஆள்பலத்தால் பணபலத்தால் ஆட்டுவிக்கும் யாரும்
... அப்பலங்கள் மாறுவதை அறிந்திருத்தல் ஞானம்
தேள்கடித்து மாண்டவரும் தெருக்களிலே உண்டு
... தீக்குளித்து வென்றவரும் தேசத்தில் உண்டு
நாள்வகையால் முடங்குவதோ நல்லவரின் தொண்டு
... நாற்றிசையும் கொடிபறக்க நடப்பதுவே நன்று.
வாள்வலிமை ஆயுதங்கள் வைத்தவர்க்கும் தேடல்
... வாழ்வினிமை அறிந்தவர்க்காம் வையத்தின் ஏடே

ஆதலினால் வாழ்வினிக்க ஆகுவன செய்வோம்
... அடிப்படையில் பிறர்நலனை ஆராய்ந்து நெய்வோம்
மோதலெனில் தீமையினை மோதித்தான் சாய்ப்போம்
... முன்வந்து வெல்கின்ற முழக்கங்கள் காய்ப்போம்
காதலுடன் நன்மைகளைக் கைக்கொள்ளும் ஆள்கள்
... காலத்தில் தம்பெயரால் கலைசிற்பம் ஆவார்
நாதமுறும் இன்னிசையாய் நிறையட்டும் ஆறு.
... நலம்பெறவே செய்கின்ற நாட்டங்கள் பாடு
*** *** *** ***

வாழ்த்துரை

பேரழகில் மயக்குகின்ற பேதையென வருங்கவியைச்
சீரழகில் கோத்தளித்த செம்மையினைப் போற்றுகிறேன்
 
ஊரழகை உள்ளத்தில் ஒளிரவிட்டுக் கவிசொன்னீர்
ஆரழகி தமிழ்போல அகிலத்தில் வாழியவே!