'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

நாய்ப்பிழைப்பு

சரஸ்வதிராசேந்திரன்

ஏய், உனக்கு என்னாச்சு? பைத்தியம் மாதிரி நடுரோட்டிலே படுத்திருக்கே? எழுந்துவா. டிராபிக் நிறைய வர இடத்திலே ஏன் இப்படி மறியல் பண்ற மாதிரி படுத்திருக்கே, ப்ளீஸ் எதா இருந்தாலும் பேசிக்கலாம், இப்போ எழுந்து வா அதோ பார், பஸ் வேகமா வருது. வாயேன்என்று குட்டி ஆடு கெஞ்சிக்கொண்டிருக்கும்போதே வேகமாக வந்த பஸ் ரோசிமேல் ஏறி இறங்கியது. ரோசி துடித்துக் கொண்டிருந்தது.

சைசனியன், படுக்க இடம் பார்த்திருக்கு பார்என்று திட்டியபடியே யாரோ ஒருவன்  அதை இழுத்து ரோட்டோரத்தில் தள்ளினான். தலையைத் தூக்க முடியாமல் கண்களைப்போட்டு உருட்டிக் கொண்டிருந்தது ரோசி. பக்கத்தில்போய் நின்று கண்ணீர் வடித்தபடியே, ''நான் எத்தனை கத்தினேன், நீ கேட்டாயா? இப்பப்பார், உன் உயிர் போகப்போகிறது, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீ ஏன் இந்த முடிவுக்கு வந்தே?” பரிதாபப்பட்ட ஆடு கேட்டது.

''என் கதை ரொம்ப சோகமானது, என்னத்தைச் சொல்றது? ஆனால் என்னைப் பெற்றவர்களும், உடன்பிறப்புகளும் படாத கவலையை என்னை ஒரு முறையே பார்த்த    நீ என் மரணத்தை தடுக்க எத்தனையோ முயன்றாய், நான்தான் கேட்கவில்லை. உன் பாசத்தைப் பார்க்கும்போது என் மரணம் இப்போ என்னை வாழத் தூண்டுது. ஆனால்  அது முடியாது, என்னோட பிறந்தது மூன்று பேர். நான் கண்விழித்து இரண்டு மாதமே ஆனது, என் உடன்பிறந்தவர்களுடன் ஜாலியா விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போ காரில் வந்த ஒரு கனவான் டிரைவரிடம் அதோ பார், சுத்த கருப்பு கலரில் கிடக்கிற அந்த நாயைத் தூக்கிட்டு வாஎன்று ஆணை பிறப்பிக்க, என்னைக் கதறக் கதறத் தூக்கிட்டு போனான் அவர் வீட்டுக்கு.

நான் தாயையும், உடன்பிறப்புகளையும் பிரிந்த சோகத்தில் சரியாக சாப்பிடாமல் முரண்டு பிடித்தேன். அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? ஆனால் எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடாமல் இருக்கமுடியும்? வயிறு பசித்ததே, போட்டதைச் சாப்பிட்டேன். கொஞ்சம் வளர்ந்ததும் என்னை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்.

அவர்கள் புதிதாக வீடுகட்டும் இடத்தில் என்னைக் காவல் காக்க வைத்தார்கள். வாட்ச்மேன் குடும்பமும் அங்கேயே இருந்தது ஒரு குடிசை போட்டு. அவர்கள் சாப்பிட்ட எச்சில் மீதியைப் போட்டார்கள். விதியே என்று அதையும் தின்று கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் மட்டும் என்னை அங்கிருந்த ஆற்று மணலில் கட்டிப் போட்டுவிட்டு வாட்ச்மேன் வீட்டுக்குள் படுத்து விடுவான். நான் பயத்தில் கத்தினால் வெளியே வந்து கம்பால் என்னை அடிப்பான் கடுப்பில். விறுவிறுவென்று வேலை நடந்தது. வீட்டு வேலையைப் பார்க்கவரும் முதலாளி  கடையில் விற்கும் டைகர் பிஸ்கட்டை நாயான எனக்கு வாங்கிப் போடுவார், அவர்கள் எப்படி நடத்தினாலும் நான் நன்றி உணர்ச்சியுடன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தேன். வீடு வேலையாகி விட்டது. ஒரு வாரத்தில் கிரஹப் பிரவேசம் என்று எல்லோரும் பிசியாக இருந்தார்கள். இப்போதெல்லாம் என்னைக் கட்டுவது இல்லை. சுதந்திரமாகத்தான் விட்டார்கள். ஆற்று மணலில் படுத்து இஷ்டப்படி புரண்டு விளையாடுவேன் குஷியாக.

கிரஹப்பிரவேச முதல் நாள் வந்த முதலாளி வாட்ச்மேனைக் கூப்பிட்டுஏம்பா நாளைக்கு கிரஹப்பிரவேசம்; இது என்ன திருஷ்டி பரிகாரமா? அடிச்சு விரட்டு, அசிங்கமா வீட்டு முன்னாலஎன்று கூசாமல் சொல்ல அந்த வாட்ச்மேன் என்னைக் கம்பை எடுத்து விரட்டினான்.

அன்னைக்குத்தான் மனுஷங்களைப் புரிஞ்சுகிட்டேன். தெருமுனைவரை விரட்டி விரட்டி அடித்தான். ஓடினேன் ஓடினேன், கால் வந்த திக்கெல்லாம், போகும் இடமெல்லாம் என் தாய் தென்படுகிறாளா எனப் பார்த்தேன். இல்லை கால்வலி மனவலியோடு பஸ் ஸ்டாண்ட் வந்த நான் அசதியால் அங்கு ஒரு மூலையில் ஆற்று மணல் கிடக்க, அதில் படுத்துக் கண் அயர்ந்தேன். அப்போது ஒருவன் பக்கத்தில் இருந்த ஒருவனிடம்அங்கே பாருடா! காலை நீட்டிகிட்டுச் சுகமா தூங்கிறதை. நாம வேலை கிடைக்காம நாயா பேயா அலையுறோம். பிழைப்புக்காக இந்த நாய்க்கு இருக்கிற சுகம் கூட நமக்கில்லையே. ரொம்பப்  பொறாமையா இருக்குடா அந்த நாயைப் பார்த்து, அதுக்கு இருக்கிற நிம்மதி கூட எனக்கில்லையே”. அவன் எந்த நேரத்தில் கண் வைத்தானோ, திடீரென்று ஒரு பஸ்காரன்  என் அருகில் வந்து உரசுராப்பில சரக் பரக்குன்னு பிரேக் அடிக்க, பதறிப் போய் பக்கத்தில் இருந்த டீ கடையில் ஒதுங்கினேன். அந்த டீ கடைக்காரன் என்னவோ அவன் கடை புரோட்டாவைத் திங்க வரதா நினைச்சு, “சனியனே! எங்க வரே?” என்று திட்டி குபீருன்னு  கொதிக்கிற வெந்நீரை என்மேல ஊற்றத் துடித்துப் போய் அலறி ஓடிப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் மேல் விழ, பயந்து போன அவன் கம்பை எடுத்து அவன் கடுப்பைக் காட்டி என்னை ஓட ஓட விரட்டினான். நான் மீண்டும் ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே, மனம் விரக்தி அடைந்தது. கடவுள் நமக்கு பேசும் திறனைக் கொடுத்திருந்தாலாவது இந்த நன்றிகெட்ட மனிதர்களைத் திட்டியாவது தீர்க்கலாம். அதுவும் இல்லை. நொந்துபோய் நடந்தேன்.

பள்ளி விட்டு வந்துகொண்டிருந்த மாணவக் குரங்குகள் என்னைக் கண்டதும் கல்லை விட்டெறிய மீண்டும் ஓடினேன். விடாது அவர்கள் துரத்த, நான் இடறிப்போய் முள்வேலியில் விழ, என் வால் மாட்டிக் கொண்டது. அப்பொழுதும் இரக்கமில்லாமல் கல்லால் அடிக்க நான் வலி பொறுக்கமுடியாமல் ஓட எத்தனிக்க, என் வால் அறுபட்டுவிழ, நான் அதைப் பொருட்படுத்தாமல் ஓடினேன். உயிரைக்  காப்பாற்றிக் கொள்ள வால் போனதில் எனக்குத் துளியும் வருத்தமில்லை. ஏனெனில் என் பழைய முதலாளியையோ, வாட்ச்மேனையோ பார்த்தால் என்னை யறியாமல் நன்றி விசுவாசத்தால் வால் ஆடுமே, அது கூடாது என்பதற்காகத்தான். நம்மிடம் நன்றி இல்லாதவர்களிடம் நமக்கு ஏன் நன்றி? என்னைப் போல் வாயில்லாத நீ என்மேல் காட்டும் பாசத்தைப் பார்த்து எனக்கு வாழணும்னு தோணுது. ஆனால்.. இதோ என் உயிர்... போகப்போகிறதுகாலன் என்னை நெருங்கி விட்டான்.

ஆடே! நாய்ப்பிழைப்பு என்பது இதுதானோ?... நான் வரேன்வெட்டி வெட்டி இழுத்து உயிர் விட்டது ரோசி. கண்ணீர் விட்டபடியே அதைக் கடந்தது ஆடு. என் நிலைமை மட்டும் என்ன? கசாப்புக் கடைதான். தன் நிலைமையும் நினைவு வர அதற்கும் சேர்த்துக் கண்ணீர் விட்டபடியே சென்றது. அப்பொழுதும் விடவில்லை ரோசியை. பிரியாணி செய்ய எடுத்துப் போனான் ஒருவன்.

உத்தம குரு (குறுங்காவியம்)

  பைந்தமிழ்ச் செம்மல்  விவேக் பாரதி

பகுதி 2
சிறப்புரைப் படலம்

ஆற்றுச் சிறப்பு
(எண்சீர் விருத்தம்)

நந்திமலை விட்டெழுந்து நகருக்குள் ஓடி
  நலமெல்லாம் வளமெல்லாம் நனிசேர்த்துத் தந்து
விந்தைசெயும் ஆறுகளில் வியனுலகம் போற்றும்
  விவசாயத் தாயாற்றின் வனப்புகளைச் சொல்வேன்!
எந்தவொரு தடைவரினும் எதிர்க்கின்ற வெள்ளம்!
  ஏந்திழையர் இடைநடம்போல் நடக்கின்ற வெள்ளம்!
முந்திவரும் பாலாற்றில் மூழ்கியெழுந் தாடி
  முத்தாடும் மக்களது முறுவலெலாம் முத்தே!

பருவத்தின் மழைநம்பிப் பயிர்செய்யும் மக்கள்
  பாசத்தால் அழைத்தவுடன் அணைக்கின்ற தாய்போல்,
உருவத்தில் பெரிதாகி ஓடோடி வந்தே
  உயிர்சேரப் பயிர்வாழ அணைக்கின்ற அன்னை!
புருவத்தில் வில்லுடைய எழில்மாதர் போடும்
  புதிர்போலும் ஆருக்கும் விளங்காத தோற்றம்!
சருமத்தில் கொதிப்பெய்திக் கிடக்கின்ற பூமி
  சார்ந்தயரச் சேர்ந்ததொரு அமிழ்தத்தின் ஓட்டம்!

வெய்யோனின் சுடுங்கனலைச் சமன்செய்ய வந்த
  வெண்ணிலவின் வண்ணத்தில் விளங்கும்பா லாறு!
துய்யவுரு கொண்டெவரும் துக்கங்கள் போக்கத்
  தோன்றியவோர் அமரர்தம் உலகத்தின் ஊற்று!
செய்யாறோ டின்னபிற கிளைபரப்பி மண்ணைச்
  செழுமைக்கே உரித்தாக்கும் உயர்வான எண்ணம்!
கையுறவே வங்காள வரிகுடாவைத் தீண்டும்
  காரிகையை நேரொத்த கவினுறுபா லாறே!

வானரங்கள் ஆங்காங்கே குதிப்பதுவும்! மக்கள்
  வாய்பிளந்தே ஓட்டத்தை வியப்பதுவும்! நல்ல
கானவர்கள் கழுத்தளவுச் சாதகமும்! நெல்லின்
  கதிரெடுத்து பரப்புகின்ற விளையாட்டும்! மேலே
வானவர்கள் நீராட விழைவதுவும்! ஓடும்
  வண்ணமுடைப் பாலாற்றின் வனப்பென்று கண்டோம்!
தேனெனுமிந் நதிபாயும் தேசுடைய நாட்டைச்
  சேர்ந்தபுகழ் யான்சொல்லக் கேட்டிடுவீர் பின்னே!!

நாட்டுச் சிறப்பு
(அறுசீர் விருத்தம்)

கருமருதும் அகிலும் பொன்னும்
  குதிரைபல வணிகம் செய்யும்
பெருநாடு பெரியோர் வாழும்
  பேரருளும் நிரம்பு நாடு
திருவருளும் மன்னும் நாடு
  தினமும்நீர் மீன்கள் சேரும்
வருவாயால் வளரும் நாடு
  வளமெல்லாம் சேரும் நாடு!

பைந்தொடியார் வாழும் நாடு 
  பசுமையெலாம் நிறைந்த நாடு
கூந்தலிலே அகிலைக் காட்டிக்
  குளிக்கின்ற பெண்டிர், தங்கள்
பூந்தொடையில் சந்த னத்தைப்
  பூசுகிற எழிலைக் கண்டு
காந்தருவர் சொர்க்கம் என்று
  கருதிவரும் இயல்பின் நாடு!

மலரினங்கள் கொஞ்சு கின்ற
  மன்றங்கள் நிறைந்த நாடு!
நலமுடனே பயிரை ஈனும் 
  நன்செய்கள் ஓங்கு நாடு!
இலகுடைய கவிதை நூற்கள்
  இலக்கியங்கள் இலக்க ணங்கள்
பலபொதிந்து கிடக்கும் நாடு 
  பத்பநாபன் ஆளும் நாடு!

மானினமும் வேங்கை தாமும்
  மனமொத்துத் திரியும் நாடு!
ஞானமுடை மக்கள் வாழும்
  நன்னாடு! குருவைப் போற்றும்
மானமுள்ள நாடு! இன்பம்
  மாரியெனப் பொழியும் நாடு!
தேனுலுப்பும் மலர்கள் கூடித்
  திசையெங்கும் பாடும் நாடு!

மருங்கெல்லாம் நிழலாய்! மக்கள்
  மனமெல்லாம் அறமாய்! வாழ்க்கை
ஒருங்கெல்லாம் நிறையப் பெற்ற
  ஓங்குதமிழ் மதுராந் தத்தின்
அரும்புகழைச் சொன்னோம்! அங்கே
  அமைகின்ற நீர்த்தேக் கத்தைப்
பெருமையுறக் காண்போம்! ஓட்டம்
  பெறுகின்ற பாலாற் றேரி!

ஏரிச் சிறப்பு
(கலிவிருத்தம்)

நாடும் எத்தனை எத்தனை பெரியதோ
ஆடு மேரியும் அத்தனை பெரியதே!
பாடுஞ் செம்புனல் பாய்ந்திடும் நதியெனும்
பீடு கொண்டபா லாற்றுநீர் நிறைவதே!

வேடந் தாங்கலெ னும்புகழ் பறவைகள்
கூடு மவ்விடம் கொண்டநல் லழகிலே
நாடும் புள்ளினம் நல்லொலி பரவிடும்
ஓடும் மீன்களின் ஒண்மைகள் உடையதே!

தேக்க மற்றதாய்த் தேசுடன் தனதெழில்
ஊக்கம் கொண்டபா லாற்றுநீர் நிறைந்திடத்
ஆக்கும் நெல்லெழில் வாய்ந்திடும் வரப்பெலாம்
பாக்க ளென்னவே பாய்ந்திடுந் திறனதே!

வள்ள லென்னவே வாரிநீர் வழங்கிடும்!
உள்ள மென்னவே உன்னத வெளுப்புறும்!
கள்ள மற்றமா மன்னவன் கவிஞனாம்
தெள்ளு செந்தமிழ் நாடன்நீர் நிலையதே!

ஏரி கொண்டநல் ஏற்றமும் உரைத்தனம்
பேரெ ழில்படும் பெற்றியோ டணிநகர்ச்
சீரை யாண்டிடும் செந்தமி ழரசனின்
பேர ரும்புகழ் பேசுவோம் கவியிலே!
                                                                               (தொடரும்)

தமிழச்சி திருப்பள்ளியெழுச்சி

ஆதி கவி (எ) சாமி.சுரேசு

பகுதி - 1

(பாவை பாடல்கள்
இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா)

பீடுறு திங்களைப் பீடையென்றார் புன்மனத்தார்
வீடுறும் நற்பேற்றை மீமிசைத் தானுணர்த்தும்
நீடுதுயில் நீக்கி நிலையாமை தாந்தோற்றப்
பாடுபெற பைங்கிளிகாள் பண்டை வழிதோற்றிக்
கூடுவிட்டுப் புள்புரைய கூதலுறும் இந்நாளில்
நாடுக நற்குளியில் ஞாலம் புலருமுன்னர்
காடுகுளிர் இத்திங்கள் காத்திர காற்றுரையும்
கூடெலாம் நற்காற்றுக் கென்றேலே ரெம்பாவாய்.                                1

எல்லே! இளங்கிளிகாள்! ஏற்றமுற எந்தமிழர்
புல்லும் புலர்காலை பூச்சுனையில் நீராடி
நல்லோர் பலர்வாழும் நாட்டிலுள்ள மாசகல
வில்லேர் விழியாளே! வீரமுடன் நீயெழுந்தே
கொல்லும் பலதிறத்துக் கோணாங்கி ஆட்சியரை
வெல்லும் வகையாவும் வேண்டுகிறோம் சொல்லாயோ
நல்லார் பலரிருந்தும் ஞாயங்கள் வெல்வதில்லை
அல்லை யகற்றிடவே வாரேலோ ரெம்பாவாய்.                                    2

நற்றாய் உவந்தளித்த நற்கொழுந்தே! நன்மகளே!
செற்றும் பகைசூழச் சீரில்லை கண்ணுறக்கம்
முற்றாய் நிலமெலாம் மூரியென ஆகுமுன்னர்
சற்றே விழிதிறவாய்! தண்ணிலவே தாழ்திறவாய்!
கொற்றவை நீயிருக்கும் கொஞ்சுதமிழ் நாட்டையார்
பற்றவைப்பார் என்றேகேள் பாரதிர நன்றேகேள்
இற்றை இழிநிலையை இல்லாமல் செய்திடவுன்
ஒற்றை விழிதிறவாய் வீழ்துயிலோ ரெம்பாவாய்.                                3

என்னே உறக்கம்! எழுகமின்! எந்தாயே!
நின்னைத் தவிர்த்தென் நிலமகளும் சுற்றுவதோ
முன்னை வினையாவும் மூச்சடக்கிக்கொல்கிறதே
சின்னாய் யெழுந்தாள் சிதறாதோ வல்வினைகள்
இன்றேல் திருநிலத்தை யார்காக்கும் எம்மமகவே
நன்குணர்ந்தும் நாளேக நீள்துயிலேன் நாமகளே
முன்பின் தெரியாத மாந்தர்க்கும் நீர்வார்க்கும்
அன்பே! அகல்விளக்கே! ஐயேலோ ரெம்பாவாய்.                                 4

தூய தமிழ்நிலத்துத் தூமணியே! தொன்றமிழே!
ஆய கலையாவும் ஆழ அறிந்தவளே!
பாயும் புலிநிகர்த்த பார்வல் உடையவளே!
யாயுஞ் சிறுசேயும் ஏதிலார் போலவே
நாயின் கடையென்றே ஞாலந் துடைத்தாரின்
வாயை உடைத்தெறிந்து வன்றிறம் நீகாட்ட
காயம் வலுசெய்யக் காலை அதிர்ந்தெழுந்து
தேயும் படைநிற்கத் தேற்றேலோ ரெம்பாவாய்.                                    5

மஞ்சு மலைதழுவ மார்மீது தேன்சொரியக்
கொஞ்சு மிசைபாடி புள்ளினங்கள் வான்பறக்கும்
துஞ்சுங் குரங்கினமும் தூயவானைப்பார்த்துவிட்டு
அஞ்சு வதறியா(து) அங்குமிங்கும் தானோடும்
பிஞ்சு மினிக்கின்ற பீடுகொள் நன்னிலத்துப்
பஞ்சு பொதியன்ன பாங்குடனே வந்தவளே!
நெஞ்சு பொறுக்குதியோ நேருகின்ற காட்சிகண்டு
வெஞ்சினம் கொண்டே வெடியேலோரெம்பாவாய்                             6

அச்சில் சுழலுகிற ஆழியுடை இவ்வுல(கு)
அச்சில் வடியாத ஆரணங்கே உன்னுல(கு)
எச்சில் சிறுமாந்தர் ஏனென்பார் இல்லையென்று
மிச்சம் பிறிதின்றி மேனி பிடுங்குகின்றார்
அச்சோ! எதிர்காலம் ஆளின்றித் தானுழலும்
அச்சம் சிறிதின்றி ஆடுகிறார் மாட்சியுடன்
பச்சை நிறமழிந்து பார்மகளும் கேவுகிறாள்
நிச்ச நிரப்பின்றிக் கேளேலோ ரெம்பாவாய்.                                          7

மண்ணு முயிருடலும் வேறல்ல மாண்புடையாள்!
தண்ணீர் வெளியாடும் தாமரையும் நற்சேறே
எண்ணித் துணிகவெம் ஏந்திழையே! காடுதனில்
வண்ண மலராட வண்டாடக் கொண்டலாடப்
பண்ணிசைத்துத் தையலார் பாத்தியுள் நீராட்டி
மண்ணை இளகாக்கி வித்திட்டும் நாற்றிட்டும்
கிண்ணம் பிடிச்சோற்றுக் கீழ்க்கையில் நெய்யாட
திண்ணமுறச் செய்வதெலாம் மண்ணேலோ ரெம்பாவாய்.            8

தெங்கிளந் தீஞ்சுவையே தெள்ளுதமிழ்ப் பாச்சுவையே
சங்கத் தமிழருந்தும் தத்தையே! கண்திறவாய்!
பொங்கு புனலோடிப் பொன்விளைத்துப் போய்ச்சேரும்
நுங்கு நுரைததும்பும் நூறாற்றைக் கற்பழித்துச்
சங்கு தனக்கூதி தன்னினத்தைக் கொல்லுமிந்த
நங்க நரியினத்தை நான்குதனி கூறாக்கி
வங்கக் கடல்மீது வீசிவிட்டு வாருதற்கே
தங்க இமைதிறந்து தாக்கேலோ ரெம்பாவாய்.                                       9

முப்பா லருந்தி முகிழ்த்த குலவிளக்கே!
தப்பாது தான்முளைத்த தாழா மணிவிளக்கே!
எப்பால் புலவர்க்கும் எட்டாத தொன்தமிழில்
உப்பாய் சிறுசேர்த்தி உப்பிட்ட இம்மொழியில்
வெப்புப் பிறமொழியை வேரோடல் செய்தாரைத்
தப்பவர் செய்கையெனத் தாளித் தெடுப்பதற்கும்
செப்பு மொழியொடும் செங்கண் விழியோடும்
துப்பும் மொழியென்றே சீறேலோ ரெம்பாவாய்.                                  10
                                    (தொடரும்)