'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


2.     கவிமாமணி சேலம்பாலன்


கவிஞர் அழைப்பு!

யாருக்கும் அஞ்சாத சிங்கம்
     ஈரோட்டின் தன்மானத் தங்கம் !
நேருக்கு நேர்பேசும் பாலன்
      நேர்மைவழி யிற்செல்லும் சீலன் !
ஏருக்குச் சீர்செய்ய வேண்டும்
     என்றதலைப் பிற்கவிதை பாட
வாருங்கள் அண்ணாவென் றேநான்
     வணங்கியழைக் கின்றேனிக் கணமே !!
ஐயா வருக அருங்கவி தருக!

தமிழ்த்தாய் வாழ்த்து !

திண்ண மாகவே தோன்றிய தென்றெனச்
செப்பிட முடியாச் செந்தமிழ்த் தாயே !
கண்ணின் மணியாய்ச் சிறந்தவள் நீயே !
கருத்தினில் நின்று காத்திடு வாயே !

தலைமை வணக்கம் !

எவரின் உளத்தையும் 
ஈர்க்கும் வகையிலே
கவரும் பாத்தரும்
கவித்தலைவி! வணக்கம்!

அவை வணக்கம் !

குரலொலிக் கவிதையைக்
குளிர்ந்து கேட்கும்
தரமிகு சுவைஞரே!
தந்தேன் வணக்கம் !


ஏருக்குச் சீர்செய்வோம் !

உலகினில் உள்ள   தொழில்களில் எல்லாம்  
உழவுதான் உயர்ந்ததே   என்போம்!
பலன்தரும் தொழிலைப் பாரினில் செய்தே
பணந்தனைச் சேர்த்தவர், மற்றோர்
நலத்துடன் உலவல் நாளினைப் போக்கல்
நாட்டமாய்ச் சுற்றலும் நித்தம்
நிலத்தினில் விளைந்த நிகரிலா உணவை
நித்தமும் உண்பதால் தானே!

உழவொடு நல்ல தொழிலுமே நன்றாய்
உயர்ந்திட யாவரும் மகிழ்வர் !
உழவினைச் செய்யும் உழவரோ இந்நாள்
உயர்ந்திட நல்வழி காணோம் !
உழவுசெய் நிலங்கள் மனைகளாய் மாற
உலகமே துன்பினில் ஆழும் !
உழவரும் தொழிலை மாற்றிடும் போதில்
உண்மையில்  இடர்பல சூழும்!

இருப்பவர் எவரும் இனிமையாய் உண்டே
ஏறுபோல் வாழ்கிறார் என்றால்
ஒருசிலர் நிலத்தில் சேற்றினில் கையை
ஊன்றியே உழைப்பதால் தானே!
இருப்பவர் உயிரோ டிருந்திடும் மட்டும்
என்றுமே உணவது வேண்டும்!
விருப்புடன் என்றும் உடல்வளர்த் திடும்நாம்
ஏருக்குச் செய்வமே சீரே!

ஏரினைப் போல இணையொரு  கருவி
இவ்வுல கத்திலே இல்லை!
ஏரினைக் கொண்டு நிலத்தினை உழுவோர்
இல்லையேல் இல்லையே மகிழ்வு!
பாரிலே மூத்த தமிழரின் நல்ல
பண்பது நன்றியே சொல்லல்!
ஏரினை என்றுமே போற்றியே நாமே
இன்புடன் செய்வமே சீரே !

வாழ்த்துப்பா

விளைநில மெல்லாம் விலைநில மானால்
     விளைந்திடு மிடர்களைப் பற்றி
விளக்கமாய் எழுசீர் விருத்தத்திற் சொல்லி   
      விழிப்புணர் வூட்டிய கவியே!
வளத்துடன் மக்கள் பசியற வாழ்தல்
      மள்ளரின் கடுமுழைப் பாலென்(று)
அளித்தநின் கவிதைக் கன்புடன் வாழ்த்தை
     அகமகிழ் வோடுசொல் வேனே!

★★★

சோலைக் கவியரங்கம் - 10


3.     பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி


கவிஞர் அழைப்பு

கணினிப் பணியில் இருந்தாலும்
     கன்னல் மொழியில் பாவனையத்
தணியா ஆர்வத் துடன்கற்றுத்
     சந்தங் கொஞ்சும் மரபினிலே
மணியாய்ப் பாக்கள் தீட்டுமன்ப!
     மன்றம் நின்று கவிபாட
வணக்கம் சொல்லி அழைக்கின்றேன்
        வருக வெங்கள் தமிழ்மகனே!!

அரங்க மதிர அருங்கவி தருக!!

தமிழ் வாழ்த்து

எண்ணும் போதே என்னுள்ளம்
     ஏற்கும் இன்பம் இன்றமிழே!
பண்ணும் போதே பாதைகளைப்
     பரப்பி நிரப்பும் பைந்தமிழே!
கண்ணும் கருத்தும் உன்மீதே
     கவிதை செய்யப் பணிக்கிறதே!
மண்ணும் விண்ணும் நீயென்பேன்
      வளர்க்கும் தமிழே வாழியவே!

தலைவர் வணக்கம், அவையடக்கம்

செவியரங்கை மகிழ்விக்கும் செந்தமிழைப் பாடுகின்ற 
கவியரங்கத் தலைமைக்குக் கனிவான வணக்கங்கள்!
புவியரங்கம் முழுதுள்ள பொற்கவிஞர் தாள்போற்றிக்
கவியரங்கம் வந்துள்ளேன் கருணையோடு வாழ்த்துகவே!

ஏருக்குச் சீர் செய்வோம்

கார்தூக்கி வளம்பரப்பக் காணரிய நிலையினிலும்
ஏர்தூக்கிப் பார்தூக்கும் எழிலாளன் ஏழையெனல்
வேர்தூக்க நீரூற்றா வெங்கொடுமை யாமன்றோ?
சீர்துக்கிப் பார்ப்பதற்காய்ச் சீர்துக்கிப் பாடுவமே!1

பாடுபடும் உழவனுக்குப் பருவங்க ளேமுதலாம்
ஊடுபனி எந்நாளோ? உயந்தகதிர் எந்நாளோ?
நாடுங்கண் நாள்பார்க்கும் நல்லமழைக் காலமெது?
தேடுவது கிடைப்பதற்குத் தெளிவான மனம்வேண்டும் 2

வேண்டுமவன் உள்ளத்தில் விலகாத உறுதி;மழை
வேண்டுமள விருக்கவேண்டும் விழியாகக் காத்திருக்க
வேண்டுமவன் விழிப்போடு காத்திருக்க வேண்டுமன்றோ?
தூண்டுமுளத் தெண்ணத்தாற் றுளியேனும் சுரக்காதா? 3

சுரக்காதா அமுதமெனச் சோர்ந்திருத்தல் சரியாமோ?
கரவாது கலப்பையினைக் கைப்பிடித்து நேர்நிறுத்திப்
பரப்புக!மண் படரட்டும் பலப்பலவாய் விளைச்சலினை
வரமாக வழங்கட்டும் வையத்தார் வாழ்வதற்கே! 4

வாழ்வின்றி அழிவதுவோ? வளமாக்க வேண்டியன
தாழ்வின்றிச் செயல்வேண்டும் தடையாக வந்தபெரும்
பாழ்படுத்தும் செயற்கையினைப் பதரெனவே துணிந்தெறிவோம்
வீழ்த்துகின்ற வீண்செயலர் வினையொடித்து நாம்நடுவோம்! 5

நடுவதியார் நடுவதியார் நாளெல்லலாம் திரிந்தலைந்து
கெடுவதியார் எனும்நிலைமை கெட்டழிந்து போகட்டும்
தொடுவதியார் சேற்றினையே தொடத்தயங்கு வோர்தம்மைத்
தொடுவதியார் சோற்றினையே எனத்தடுத்துப் புரியவைப்போம்  6

புரியவைக்கச் சிறுவயதே புதையலென வயல்வெளியில்
திரியவைக்க வேண்டுவது தேவையெனக் குரல்கொடுப்போம்
அரியவகை எனவாக ஆகுமுனே உணவெதுவென்(று)
உரியவகை எடுத்துரைப்போம் உழுவதுவே உயர்வென்போம் 7

உயரத்தில் இருந்(து)ஆளும் ஒண்கதிரோன் வாழியவே!
இயற்றுங்கை ஏற்கின்ற ஏர்க்கலப்பை வாழியவே!
உயர்வடைந்த உள்ளத்தான் உழவன்தாள் வாழியவே!
துயர்தீர்க்க வருகின்ற தூநீர்கார் வாழியவே! 8

வாழ்த்துப்பா !

ஏர்தூக்கும் எழிலோனைச் சீர்தூக்கிப் பாவடித்த
       இக்கவிக்கு நன்றிசொல்வோம் வாங்க வாங்க !
ஊரறிய உறவறிய பாரறிய இவ்வரங்கில்
       உள்ளன்பாய் வாழ்த்துகளைத் தாங்க தாங்க !!

சோலைக் கவியரங்கம் 10

4.     பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

கவிஞர் அழைப்பு

நெஞ்சி லன்புடன் சந்தக் கவிமணி
    நின்னை அழைப்பதில் மகிழ்ந்தேன்!
கொஞ்சுங் குயிலெனக் கூவு மின்சுவைக்
    குரலைக் கேட்டிட விழைந்தேன்!
வஞ்சி யுனைக்கவி பாட வரங்கினில்
    வணங்கி வாழ்த்துடன் அழைப்பேன் !
விஞ்சு மழகுடன் ஏரைப் போற்றிட
    விரைந்து நீவரு வாயே!!

அருங்கவி தரவே அன்புத் தோழி வருக! வருக !!

தமிழ் வாழ்த்து, அவை வாழ்த்து !!

அன்னைத் தமிழே கவிவடிக்க
    அகத்தால் நின்றன் தாள்போற்றி
இன்னல் நீங்கி உழவரெலாம்
    ஏற்றம் பெருகி வாழவென்று
மன்றின் வண்ணத் தலைவருக்கு
    மரபின் மகிழ்வாய்க் கரங்கூப்பிப்
பண்பில் சிறந்த அவையோரைப்
    பணிவாய் வணங்கிப் பாடவந்தேன்!

ஏருக்குச் சீர் செய்வோம் !!

உழுதொழில் செய்வோர் வாழ்வில்
    உயர்வினைக் காண வைப்போம்
உழவியல் வசதி கிட்ட
    உறுதுணை யாக நிற்போம்
வழிதனை வகுத்து நல்க
    வயலது விளைச்சல் காணும்
தொழிலினில் உள்ள சிக்கல்
    சுமைகளை நீக்கு வோமே

கடனதைப் பெற்று வட்டிக்
    கடலினுள் மூழ்கி வீழும்
இடரினைக் களைந்து வாழ்வில்
    இன்புறச் செய்ய வேண்டும்
விடுமுறை யின்றி நாளும்
    வெயிலினில் உழைக்கும் வர்க்கம்
கடும்பசி யின்றி வாழக்
    காசினி உதவ வேண்டும்

மழையினால் பயிர்கள் மூழ்கி
    மண்ணிலே சாய்ந்து விட்டால்
உழைத்தவன் அதனை எண்ணி
    உயிருடல் வாடி நிற்க
அழைத்தவன் வாட்டம் போக்க
    அகிலமே திரண்டு வந்தே
உழுதொழில் சிறக்கக் காப்போ
    டூக்கமும் கொடுத்து நிற்போம்

குறைகளைக் கேட்டு நாமே
    குவலயம் சிறக்க வைப்போம்
வறட்சியில் ஆற்றின் நீரும்
    வயலினில் பாய வைப்போம்
திறமையை வளர்க்க நாளும்
    தெளிவுறப் பயிற்சி நல்கி
நிறைவினைக் கொடுக்க வைத்தால்
    நெஞ்சமும் மகிழு மன்றோ

வாழ்த்துப்பா

உழுபவர் உயர்வை யெட்ட
    உற்றநற் கருத்தைச் சொன்னீர்!
சுழலுமிவ் வுலகி லன்னார்
    துயர்களைக் களையெ டுத்துப்
பழுதிலா வாழ்வு வாழப்
    பயனுள வழியைக் காட்டி
அழகிய கவிதை தந்தீர்
    அன்புடன் வாழ்த்து வேனே!

★★★

சோலைக் கவியரங்கம் - 10


5. கவிஞர் நெடுவை இரவீந்திரன்


கவிஞர் அழைப்பு
காருண்ட மேகத்தின்    தயவாலே
       காடெங்கு மேபட்டின்    நிறைவோடே
ஆரின்று பாடிக்கொஞ்    சிடுவாரோ
        ஆனந்த மாகட்டுந்    தமிழாலே
ஏரென்று மார்தட்டுந்     தகை யோனே
       ஏடெங்கு மேசொட்டுஞ் சுவையாலே
நீரின்று சோலைப்பொன்    னொளிமேவ
      நேர்வந்து வாசித்திங்    கருள்வாயே!

தமிழ்வாழ்த்து.
(அறுசீர்ச் சந்த விருத்தம்)

நேசங்கொள் வானத்தின்  ..... கதிர்போலே
    நீளங்கொள் ஆழத்தின் .....மொழியாளே
தேசங்கொள் யாவர்க்கும் .... நலமேவ
       தேகங்கொள் ஊணுக்குந் ...... தொழுவானே
பாசங்கொள் வாழ்வைக்கொண் ..... டதனாலே
       பாருங்கொள் பாவிற்தண்....... கவிபாட
ஈசன்கொள் வானெட்டுந் .... தமிழாளே
       ஏறென்றன்  நாவிற்குள் ..... இசையோடே
  
குருவணக்கம்.
தூசங்கொள் யானைக்கண் ...... குருவோனே
        தூரங்கொள் நூலுக்குந் தனியாளாய்
மாசங்கு மூதிப்பண் ணிசைபாட
      மாசின்றிப் பாத்தந்தும் பதிவீரே
மாசங்கு வீழக்கண் ....... ணிமைமாற
       மார்பொங்கி வேலைக்கொண் ....... டெறிவோனே
பாசங்கொள் சீர்மிக்குந் ...... தமிழாலே
     பாச்சிந்தி நான்வந்தும் பணிவேனே

அவையடக்கம்.
வாருங்கள் மேடைக்கும் ....... புலவோரே
        மாமண்ணில் ஊருக்கும் தருவானைப்
பாரெங்கும் நேசிக்குந் ...... தமிழாலே
       பாவண்ணம் வாசித்தும் ....... தருவேனே
பாருங்கள்  வானெட்டும் ...... மரபாலே
        பாவெங்கும் தேன்சொட்டும் ...... செவிமீதே
தாருங்கள் நாசிக்கும் ....... கவிமீது
       தாளங்கள் நீரிட்டும் ........ மகிழ்வீரே

ஏருக்குச் சீர் செய்வோம்.
(எழுசீர்ச் சந்த விருத்தம்)

புவிமீது வந்து புகழோடு கந்து
         பொலிவாகி நின்ற....... உழவோனே
 புதிதாய்வி ளைந்த மணியோடு வந்து
           புதுப்பானை பொங்க ....... லிடுவாயே
கவினாக உண்ண உணவாக மண்ணில்
       கலியாக  வென்று ..... மருள்வாயே          
 கடலோடு ழன்று கயல்யாவும் கொண்டு
          கலமேறி வந்து ........ மிடுவாயே
புவியோரு முன்றன் உடையால ணிந்து
      புறமானம் வென்று ....... வருவாரே
புலவோரு முன்னை மானதார வந்து
         புகழ்மாலை தந்து ...... மிசைபாட
இவையாவு முன்றன் வினையால்வி ளைந்து
        மிடுவாரி டைஞ்ச ....... லுருவாக
இடராக வந்து கரைமேலு றைந்த
         கயல்போல நெஞ்சு ........ மிறுகாதோ

திசைமாறு மந்த ஒளியோனு முந்தி
         மறுவாற கன்று ......... வருநாளே
 திருநாளு மென்று தெளிவாய றிந்து
        செறிவோடு சொன்ன ......... உழவோனே
பசுமாடு தந்த மடிபாலும் பொங்கப்
     பழமோடு மஞ்சள் ....... கணுவோடு
 பரிமாறி யந்த மணிமான னுண்ண
       இலைவாழை கொண்டு ....... தருவாயே
நெசவாளி தந்த புதுவாடை மின்ன
      நெய்வானை யெண்ணி ....... நெகிழ்வாயே
  நிழலாடு மண்ணி லிருதாளி றைஞ்சி
         நெறியோடு மின்று ........ விழுவாயே
பசையோடு தம்த முறவோடு மின்னும்
      பலரோடு மொன்றி ...... மகிழ்வீரே!
பழமேவ யிஞ்சி அருகோடு வந்து
        பலகோலம் முன்றி....... லிடுவாயே (2)

எறிவாயு கொண்டு நிலமாத ழுந்த
     இடமாற நஞ்சை விலைபேச
 இடராலும் நெஞ்சு வலியால்மெ லிந்து
     முயிர்வீழ வென்று நினைவானே
நெறிமீறு மிந்த அரசாரும் அந்த
      நெடிதான துன்பம் அயல்மாற
 நிலமாலை வந்த வழிமாற நின்று
       நெடுவாறு கண்டு வரையாதோ
அறியாரின் வஞ்ச செயலாலெ ரிந்து
      மவன்வாழ்வில் நொந்து தொலைவானே
 அரசாளு மந்த கொடியோனும் நின்று
      அரசாணை ஒன்று மெழுதாதே
வறியாரின் நெஞ்சம் பலமாகி யெங்கும்
        வளமாகி யென்றும் நடமாட
 வருமான மிஞ்சி மிசைவாழ்வு பொங்க
        மனதார ஒன்ற நினைவோமே!

நன்றி

வசைபாடு மென்றன் மனையாளும் வந்து
       வரம்போடு சண்டை ....... யிடுவாளை
            வரமாக எண்ணி மனதார யென்றும்
                 வளமேவ நன்றி ....... யுணர்வேனே
இசைபாடி இன்று முகநூலி லுங்க
      ளிடமேறி நன்றி ....... பறைவேனே
          இதையாரும் வந்த இடர்போல எண்ணி
             முகமாறி யெங்கு ....... மலையாதீர்
வசைகூறும் என்றன் உறவாறும் வந்து
      மனமாறி இந்த ....... கவிகேள
         வலைமீது ழன்று செவிசாயும் உங்கள்
              மனமீது நன்றி ......யுதிர்வேனே
அசையாமல் நின்று கவிகேளு மிந்த
        அவைமீது நன்றி ....... கொளுவேனே
           அவையாளு மிந்த தலைமீது கவிபாடி
            நன்றி ...... பதிவேனே!

வாழ்த்து

அடடாவென வியக்கும்படி அழகாய்க்கவி நெய்தாய்
வடிவாயதில் பலபாக்களில் மழைபோல்வணம் பெய்தாய்
குடியானவன் மனம்பூத்திடக் கொடையாயிதைச் செய்தாய்
படிப்போருளங் கவர்ந்தாயுனைப் பலர்வாழ்த்திடு வாரே !!